உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 2100–1900 BC

Abraham: The Covenant

God calls Abram from Ur, establishes an everlasting covenant, and promises a son through whom all nations will be blessed.

394 வசனங்கள் · 1 புத்தகம் உள்ளடக்கப்பட்டது

இந்தக் காலத்தின் வசனங்கள்

  1. ஆதியாகமம் 14:13சுமார் கி.மு. 1913

    தப்பியோடிய ஒருவன், எபிரெயனாகிய ஆபிராமிடம் வந்து அச்செய்தியை அறிவித்தான். அப்பொழுது ஆபிராம், எமோரியனாகிய மம்ரேக்குச் சொந்தமான கருவாலி மரங்களின் அருகே குடியிருந்தான்; மம்ரே என்பவன் ஆபிராமுடன் நட்பு உடன்படிக்கை செய்திருந்த எஸ்கோல், ஆநேர் என்போரின் சகோதரன்.

  2. ஆதியாகமம் 14:14சுமார் கி.மு. 1913

    தன் உறவினனான லோத்து கைதியாகக் கொண்டு போகப்பட்டதைக் கேள்விப்பட்ட ஆபிராம், தன் வீட்டில் பிறந்தவர்களான முந்நூற்றுப் பதினெட்டு பயிற்சி பெற்ற மனிதருடன் அவர்களை தாண்வரை துரத்திச்சென்றான்.

  3. ஆதியாகமம் 14:15சுமார் கி.மு. 1913

    அன்றிரவு ஆபிராம், தன் ஆட்களை அணிகளாகப் பிரித்து, எதிரிகளைத் தாக்கினான்; அவன் அவர்களை தமஸ்குவுக்கு வடக்கே ஓபாவரை துரத்தி முறியடித்தான்.

  4. ஆதியாகமம் 14:16சுமார் கி.மு. 1913

    அவன் லோத்தையும், அவனுடைய எல்லா உடைமைகளையும், பெண்களையும், மற்றவர்களையும் மீட்டுக்கொண்டு திரும்பினான்.

  5. ஆதியாகமம் 14:17சுமார் கி.மு. 1913

    ஆபிராம், கெதர்லாகோமேரையும், அவனுடைய நண்பர்களாகிய அரசர்களையும் தோற்கடித்துத் திரும்பி வந்தபின், சோதோமின் அரசன், ஆபிராமைச் சந்திப்பதற்காக அரச பள்ளத்தாக்கு எனப்படும் சாவே பள்ளத்தாக்கிற்கு வந்தான்.

  6. ஆதியாகமம் 14:18சுமார் கி.மு. 1913

    அப்பொழுது சாலேமின் அரசனான மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சை இரசமும் கொண்டுவந்தான். மெல்கிசேதேக்கு என்பவன் மகா உன்னதமான இறைவனின் ஆசாரியனாய் இருந்தான்.

  7. ஆதியாகமம் 14:19சுமார் கி.மு. 1913

    அவன் ஆபிராமை ஆசீர்வதித்து சொன்னது: “வானத்தையும், பூமியையும் உண்டாக்கிய மகா உன்னதமான இறைவனால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படட்டும்.

  8. ஆதியாகமம் 14:20சுமார் கி.மு. 1913

    உன் பகைவரை உன் கையில் ஒப்படைத்த, மகா உன்னதமான இறைவன், துதிக்கப்படுவாராக.” ஆபிராம் தன்னிடமிருந்த எல்லாவற்றிலும் பத்தில் ஒரு பங்கை அவனுக்குக் கொடுத்தான்.

  9. ஆதியாகமம் 14:21சுமார் கி.மு. 1913

    அதன்பின் சோதோமின் அரசன் ஆபிராமிடம், “ஆட்களை என்னிடம் கொடும், பொருட்களை நீர் எடுத்துக்கொள்ளும்” என்றான்.

  10. ஆதியாகமம் 14:22சுமார் கி.மு. 1913

    ஆனால் ஆபிராம் சோதோமின் அரசனிடம், “நான் வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய மகா உன்னதமான யெகோவாவுக்கு என் கைகளை உயர்த்தி சத்தியம் செய்கிறதாவது:

  11. ஆதியாகமம் 14:23சுமார் கி.மு. 1913

    ‘ஆபிராமை நானே செல்வந்தன் ஆக்கினேன்’ என்று நீ சொல்லாதபடி, உன்னிடமிருந்து ஒரு நூலையோ, செருப்பின் வாரையோ அல்லது உனக்குச் சொந்தமான பொருள் எதையுமோ நான் எடுத்துக்கொள்ளமாட்டேன்.

  12. ஆதியாகமம் 14:24சுமார் கி.மு. 1913

    என் ஆட்கள் சாப்பிட்டதையும் என்னுடன் வந்த ஆநேர், எஸ்கோல், மம்ரே ஆகிய மனிதரின் பங்கையும் தவிர, வேறொன்றையும் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அவர்களுக்குச் சேரவேண்டிய பங்கை அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும்” என்றான்.

  13. ஆதியாகமம் 15:1சுமார் கி.மு. 1911

    அதற்குபின் ஒரு தரிசனத்தில் யெகோவாவின் வார்த்தை ஆபிராமுக்கு வந்தது: “ஆபிராமே, பயப்படாதே. நானே உன் கேடயம், நானே உன் மகா பெரிய வெகுமதி.”

  14. ஆதியாகமம் 15:2சுமார் கி.மு. 1911

    அதற்கு ஆபிராம், “ஆண்டவராகிய யெகோவாவே, நான் பிள்ளையில்லாதவனாய் இருக்க, எனக்கு நீர் எதைத் தரப்போகிறீர்? என் சொத்துக்களை உரிமையாக்கிக் கொள்ளப்போகிறவன் தமஸ்கு பட்டணத்தைச் சேர்ந்த எலியேசர்தானே?”

  15. ஆதியாகமம் 15:3சுமார் கி.மு. 1911

    பின்னும் ஆபிராம், “நீர் எனக்குப் பிள்ளைகளைக் கொடுக்கவில்லையே; ஆதலால், என் வீட்டு வேலைக்காரன் என் வாரிசாகப் போகிறான்” என்றான்.

  16. ஆதியாகமம் 15:4சுமார் கி.மு. 1911

    அப்பொழுது ஆபிராமுக்கு யெகோவாவினுடைய வார்த்தை வந்தது: “இந்த மனிதன் உன் வாரிசாய் இருக்கமாட்டான், உன் சதையும் உன் இரத்தமுமாய் உன்னிலிருந்து பிறக்கும் உன் மகனே உன் வாரிசாய் இருப்பான்” என்றார்.

  17. ஆதியாகமம் 15:5சுமார் கி.மு. 1911

    பின்பு யெகோவா ஆபிராமை வெளியே கூட்டிக்கொண்டுவந்து, “வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை உன்னால் எண்ண முடியுமானால் எண்ணு; உன் சந்ததியும் அவற்றைப் போலவே இருக்கும்” என்றார்.

  18. ஆதியாகமம் 15:6சுமார் கி.மு. 1911

    ஆபிராம் யெகோவாவை விசுவாசித்தான், அந்த விசுவாசத்தை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.

  19. ஆதியாகமம் 15:7சுமார் கி.மு. 1911

    பின்னும் யெகோவா ஆபிராமிடம், “இந்த நாட்டை நீ உடைமையாக்கிக்கொள்ளும்படி இதை உனக்குக் கொடுப்பதற்காக, கல்தேயரின் ஊர் பட்டணத்திலிருந்து உன்னைக் கொண்டுவந்த யெகோவா நானே” என்றார்.

  20. ஆதியாகமம் 15:8சுமார் கி.மு. 1911

    அதற்கு ஆபிராம், “ஆண்டவராகிய யெகோவாவே, நான் இதை உரிமையாக்கிக்கொள்வேன் என்பதை எப்படி அறிவேன்?” என்று கேட்டான்.

  21. ஆதியாகமம் 15:9சுமார் கி.மு. 1911

    யெகோவா அவனிடம், “ஒரு இளம் பசுவையும், ஒரு வெள்ளாட்டையும், ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் என்னிடம் கொண்டுவா, அவை ஒவ்வொன்றும் மூன்று வயதுடையதாய் இருக்கவேண்டும்; அத்துடன் ஒரு காட்டுப்புறாவையும் ஒரு புறாக்குஞ்சையும் கொண்டுவா” என்றார்.

  22. ஆதியாகமம் 15:10சுமார் கி.மு. 1911

    அப்பொழுது ஆபிராம் அவை எல்லாவற்றையும் அவரிடம் கொண்டுவந்து, மிருகங்களை இரண்டாகப் பிளந்து, அவைகளை ஒன்றுக்கொன்று எதிராக ஒழுங்குபடுத்தி வைத்தான்; பறவைகளையோ அவன் இரண்டாக வெட்டவில்லை.

  23. ஆதியாகமம் 15:11சுமார் கி.மு. 1911

    அப்பொழுது மாமிசம் தின்னிப் பறவைகள், வெட்டி வைத்த உடல்களை உண்பதற்கு இறங்கின, ஆபிராம் அவைகளைத் துரத்திவிட்டான்.

  24. ஆதியாகமம் 15:12சுமார் கி.மு. 1911

    சூரியன் மறைந்துகொண்டிருக்கும்போது, ஆபிராம் ஆழ்ந்த நித்திரை அடைந்தான்; பயங்கரமான காரிருள் அவனை மூடிக்கொண்டது.

  25. ஆதியாகமம் 15:13சுமார் கி.மு. 1911

    அவ்வேளையில் யெகோவா ஆபிராமிடம், “நீ நன்கு அறிந்துகொள்: உன் சந்ததிகள் தங்களுக்குச் சொந்தமில்லாத ஒரு நாட்டிலே அந்நியர்களாக இருப்பார்கள், அவர்கள் நானூறு வருடங்களுக்கு அடிமைப்படுத்தப்பட்டு துன்புறுத்தப்படுவார்கள்.