உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 800–400 BC

The Hebrew Prophets

God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.

3,706 வசனங்கள் · 14 புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டன

இந்தக் காலத்தின் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. ஏசாயா 30:13சுமார் கி.மு. 713

    ஆனால் உயர்ந்த மதிலில் இருக்கும் வெடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி, திடீரென ஒரு நொடியில் சரிந்து விழுவதுபோல, இந்தப் பாவம் உங்களையும் வீழ்த்தும்.

  2. ஏசாயா 30:14சுமார் கி.மு. 713

    நீங்கள் மண்பாத்திரம்போல் துண்டுகளாக உடைந்து போவீர்கள். அடுப்பிலிருந்து நெருப்புத்தணல் எடுக்கவோ, அல்லது தொட்டியிலிருந்து தண்ணீர் எடுக்கவோ, அந்தப் பாத்திரத்தின் ஒரு துண்டுகூட மீதியாய் இல்லாதிருப்பதுபோல, நீங்களும் இரக்கமில்லாத முறையில் நொறுக்கப்பட்டுப் போவீர்கள்.”

  3. ஏசாயா 30:15சுமார் கி.மு. 713

    இஸ்ரயேலின் பரிசுத்தரும் ஆண்டவருமாகிய யெகோவா சொல்வது இதுவே: “மனந்திரும்பி, என்னில் அமர்ந்திருந்தால் உங்களுக்கு இரட்சிப்பு உண்டாகும்; அமைதியிலும் நம்பிக்கையிலுமே உங்களுக்கு பெலன் உண்டாகும், ஆனால் நீங்கள் அதில் ஒன்றையுமே ஏற்க விரும்பவில்லை.

  4. ஏசாயா 30:16சுமார் கி.மு. 713

    நீங்களோ, ‘இல்லை, நாங்கள் குதிரைகளில் தப்பி ஓடுவோம்’ என்றீர்கள். ஆகையால் நீங்கள் தப்பி ஒடவே நேரிடும். ‘வேகமான குதிரைகளில் ஏறிச்செல்வோம்’ என்றீர்கள்; ஆகையால், உங்களைத் துரத்திப் பிடிப்பவர்களும் வேகமாகவே வருவார்கள்.

  5. ஏசாயா 30:17சுமார் கி.மு. 713

    ஒருவனது பயமுறுத்தலுக்கு ஆயிரம்பேர் பயந்து ஓடுவார்கள்; ஐந்துபேர் பயமுறுத்த நீங்கள் எல்லோரும் பயந்து ஓடுவீர்கள். மலை உச்சியில் தனித்து விடப்பட்டிருக்கும் கொடிக்கம்பம் போலவும், குன்றில் தனித்து விடப்பட்டிருக்கும் கொடிபோலவும் சிலர் மட்டுமே மிஞ்சியிருப்பீர்கள்.”

  6. ஏசாயா 30:18சுமார் கி.மு. 713

    அப்படியிருந்தும், யெகோவா உங்கள்மேல் கிருபை காட்ட ஆவலாய் இருக்கிறார்; உங்களுக்கு இரக்கங்காட்டுவதற்கு எழும்புகிறார். ஏனெனில், யெகோவா நீதியுள்ள இறைவன். அவருக்காக காத்திருப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!

  7. ஏசாயா 30:19சுமார் கி.மு. 713

    எருசலேமில் வாழும் சீயோன் மக்களே, இனிமேல் நீங்கள் அழமாட்டீர்கள்; நீங்கள் உதவிக்காகக் கூப்பிடும்போது, அவர் எவ்வளவு கிருபையுள்ளவராயிருப்பார்! அவர் அதைக் கேட்டவுடனேயே உங்களுக்குப் பதிலளிப்பார்.

  8. ஏசாயா 30:20சுமார் கி.மு. 713

    யெகோவா உங்களுக்கு துன்பத்தின் அப்பத்தையும், இடுக்கணின் தண்ணீரையும் கொடுத்தாலும், உங்கள் போதகர்கள் இனி ஒருபோதும் மறைவாயிருக்கமாட்டார்கள். உங்கள் சொந்தக் கண்ணாலேயே நீங்கள் அவர்களைக் காண்பீர்கள்.

  9. ஏசாயா 30:21சுமார் கி.மு. 713

    நீங்கள் வழிதவறி இடதுபுறமோ, வலதுபுறமோ திரும்பினாலும், “இதுதான் வழி, இதிலே நடவுங்கள்” என்று உங்கள் பின்னால் சொல்லும் ஒரு குரலை உங்கள் காதுகள் கேட்கும்.

  10. ஏசாயா 30:22சுமார் கி.மு. 713

    அப்போது நீங்கள் வெள்ளித் தகட்டால் மூடிய சிலைகளையும், தங்கத்தகட்டால் மூடிய உருவச்சிலைகளையும் புறக்கணித்து விடுவீர்கள். அவைகளை தீட்டுத் துணிபோல எறிந்துவிட்டு, “தொலைந்து போங்கள்!” என்பீர்கள்.

  11. ஏசாயா 30:23சுமார் கி.மு. 713

    யெகோவா, நீங்கள் நிலத்தில் விதைக்கும் விதைகளுக்காக உங்களுக்கு மழையையும் பெய்யப்பண்ணுவார். விளைச்சலில் வரும் உணவு, சிறந்ததாயும் அதிகமாயும் இருக்கும்; அந்த நாளிலே உங்கள் மந்தைகள் பரந்த புற்தரையில் மேயும்.

  12. ஏசாயா 30:24சுமார் கி.மு. 713

    நிலத்தை உழுகிற எருதும் கழுதையும் முறத்தினாலும், தூற்றுக்கூடையினாலும் தூற்றப்பட்ட சுவையுள்ள தீனியைத் தின்னும்.

  13. ஏசாயா 30:25சுமார் கி.மு. 713

    பெருங்கொலை நடக்கும் அந்த நாளிலே கோபுரங்கள் இடிந்துவிழும்; ஒவ்வொரு உயர்ந்த மலையிலும், ஒவ்வொரு உயரமான குன்றிலும் இருந்து நீரோடைகள் ஓடும்.

  14. ஏசாயா 30:26சுமார் கி.மு. 713

    யெகோவா தமது மக்களுக்கு தாம் ஏற்படுத்திய காயங்களைக் கட்டும்போதும், அவர்களைக் குணமாக்கும்போதும், சந்திரன் சூரியனைப்போல் பிரகாசிக்கும். சூரிய வெளிச்சம் ஏழு மடங்காகப் பிரகாசிக்கும். அது ஏழு முழு நாட்களின் வெளிச்சம் ஒன்றுதிரண்டாற்போல் இருக்கும்.

  15. ஏசாயா 30:27சுமார் கி.மு. 713

    இதோ, யெகோவாவின் பெயர் வெகுதூரத்திலிருந்து வருகிறது; அது எரியும் கோபத்துடனும், அடர்ந்த புகை மேகங்களுடனும் வருகிறது; அவருடைய உதடுகள் கடுங்கோபத்தால் நிறைந்திருக்கின்றன, அவருடைய நாவு எரிக்கும் நெருப்பு.

  16. ஏசாயா 30:28சுமார் கி.மு. 713

    கழுத்துவரை உயர்ந்து, புரண்டோடும் வெள்ளம்போல அவருடைய மூச்சு இருக்கிறது. அவர் நாடுகளை அழிவென்னும் சல்லடையில் சலித்தெடுக்கிறார்; மக்கள் கூட்டங்களின் தாடைகளில் கடிவாளத்தை வைக்கிறார். அது அவர்களை வழிதவறப்பண்ணும்.

  17. ஏசாயா 30:29சுமார் கி.மு. 713

    இரவில் ஒரு பரிசுத்த விழாவைக் கொண்டாடுவதுபோல, நீங்கள் பாடுவீர்கள். இஸ்ரயேலின் கற்பாறையாகிய யெகோவாவின் மலைக்கு மக்கள் புல்லாங்குழலுடன் போவதுபோல, உங்கள் உள்ளமும் மகிழும்.

  18. ஏசாயா 30:30சுமார் கி.மு. 713

    யெகோவா தமது மாட்சிமையான குரலை மனிதர் கேட்கும்படி செய்வார்; அத்துடன் அவர் தம்முடைய கரம் கீழ்நோக்கி வருவதை அவர்கள் காணும்படி செய்வார். அது கடுங்கோபத்துடனும், சுட்டெரிக்கும் நெருப்புடனும், திடீர் மழையுடனும், இடி முழக்கத்துடனும், கல்மழையுடனும் வரும்.

  19. ஏசாயா 30:31சுமார் கி.மு. 713

    யெகோவாவின் குரல் அசீரியாவைச் சிதறப்பண்ணும்; அவர் தமது செங்கோலால் அவர்களை அடித்து வீழ்த்துவார்.

  20. ஏசாயா 30:32சுமார் கி.மு. 713

    யெகோவா யுத்த களத்திலே, தம் கரத்தால் அவர்களை அடித்து யுத்தம் செய்யும்போது, அவர்கள்மேல் தனது தண்டனைக் கோலால் அடிக்கும் ஒவ்வொரு அடியும், தம்புராவினதும் யாழினதும் இசைக்கேற்ப இருக்கும்.

  21. ஏசாயா 30:33சுமார் கி.மு. 713

    தோபேத் வெகுகாலமாகவே ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிறது; அது அரசனுக்காகத் தயாராயிருக்கிறது. அதன் நெருப்புக்குழி ஆழமாகவும், அகலமாகவும் செய்யப்பட்டு, அதிலே ஏராளமான விறகும் நெருப்பும் இருக்கின்றன. யெகோவாவின் மூச்சு கந்தகச் சுவாலைப்போல் வந்து அதைப் பற்றியெரியச் செய்யும்.

  22. ஏசாயா 31:1சுமார் கி.மு. 713

    உதவி நாடி எகிப்திற்குப் போகிறவர்களுக்கு ஐயோ கேடு! அவர்கள் குதிரைகளை நம்பி, தங்கள் திரளான தேர்களிலும், தங்கள் குதிரைவீரரின் பெரும் பலத்திலும் நம்பிக்கை வைக்கிறார்கள். ஆனால், இஸ்ரயேலின் பரிசுத்தரை நோக்காமலும், யெகோவாவின் உதவியைத் தேடாமலும் இருக்கின்றார்கள்.

  23. ஏசாயா 31:2சுமார் கி.மு. 713

    யெகோவாவோ ஞானமுள்ளவர், அவரால்தான் அழிவைக் கொண்டுவர முடியும்; அவர் சொன்ன வார்த்தையை மாற்றுவதில்லை, அவர் கொடுமையானவரின் குடும்பத்திற்கு விரோதமாகவும், தீயவர்களுக்கு உதவுவோருக்கு எதிராகவும் எழும்புவார்.

  24. ஏசாயா 31:3சுமார் கி.மு. 713

    ஆனால் எகிப்தியர் மனிதர்களேயன்றி இறைவன் அல்ல; அவர்களின் குதிரைகள் மாமிசமேயன்றி ஆவியல்ல. யெகோவா தமது கரத்தை நீட்டும்போது, உதவிசெய்கிறவன் இடறுவான். உதவி பெறுவோனும் விழுவான்; இருவரும் ஒன்றாய் அழிவார்கள்.

  25. ஏசாயா 31:4சுமார் கி.மு. 713

    யெகோவா எனக்கு சொல்வது இதுவே: “சிங்கமோ, இளஞ்சிங்கமோ, தன் இரையைப் பிடித்துக்கொண்டு கர்ஜிக்கும்போது, அதை எதிர்ப்பதற்கு முழு மேய்ப்பர் கூட்டத்தை அழைத்தாலும், அது அவர்களின் கூக்குரலுக்கு அஞ்சவோ, இரைச்சலைப் பொருட்படுத்தவோ மாட்டாது. அதுபோலவே, சேனைகளின் யெகோவா, சீயோன் மலையிலும் அதன் உயரிடங்களிலும் யுத்தம் செய்வதற்கு இறங்குவார்.