Skip to content

circa 800–400 BC

The Hebrew Prophets

God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.

3,706 வசனங்கள் · 14 புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டன

இந்தக் காலத்தின் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. ஏசாயா 1:1சுமார் கி.மு. 759

    ஆமோஸின் மகன் ஏசாயா, யூதாவின் அரசர்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா ஆகியோர் அரசாண்ட காலங்களில் யூதா நாட்டையும், எருசலேம் பட்டணத்தையும் பற்றி கண்ட தரிசனம்.

  2. ஏசாயா 1:2சுமார் கி.மு. 759

    வானங்களே, கேளுங்கள், பூமியே, கவனித்துக் கேள்! ஏனெனில் யெகோவா பேசியிருக்கிறார்: “நான் என் பிள்ளைகளை பராமரித்துப் பாதுகாத்து வளர்த்தேன்; ஆனால் அவர்கள் எனக்கெதிராகக் கலகம் பண்ணினார்கள்.

  3. ஏசாயா 1:3சுமார் கி.மு. 759

    எருது தன் எஜமானையும், கழுதை தன் எஜமானின் தொழுவத்தையும் அறியும். ஆனால் இஸ்ரயேலரோ என்னை அறிந்துகொள்ளாமலும், என் மக்கள் என்னைப் புரிந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள்.”

  4. ஏசாயா 1:4சுமார் கி.மு. 759

    ஐயோ, இவர்கள் பாவம் நிறைந்த நாடு, குற்றம் நிறைந்த மக்கள், தீயவர்களின் கூட்டம், கேடு கெட்டு நடக்கும் பிள்ளைகள்! இவர்கள் யெகோவாவை விட்டுவிட்டார்கள், இவர்கள் இஸ்ரயேலின் பரிசுத்தரை அவமதித்து, அவருக்குத் தங்கள் முதுகைக் காட்டினார்கள்.

  5. ஏசாயா 1:5சுமார் கி.மு. 759

    இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்பட வேண்டும்? உங்கள் தலை முழுவதும் காயப்பட்டும், உங்கள் இருதயம் முழுவதும் வேதனையுற்றும் இருக்கிறதே! தொடர்ந்து ஏன் நீங்கள் கலகம் செய்கிறீர்கள்?

  6. ஏசாயா 1:6சுமார் கி.மு. 759

    உங்கள் உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைவரை, நீங்கள் ஆரோக்கியம் அற்றவர்களாய் இருக்கிறீர்கள். ஆறாத புண்களும், அடிகாயங்களும், சீழ்வடியும் புண்களுமே இருக்கின்றன. அவை சுத்தமாக்கப்படவோ, கட்டுப்போடப்படவோ, எண்ணெய் பூசி குணமாக்கப்படவோ இல்லை.

  7. ஏசாயா 1:7சுமார் கி.மு. 759

    உங்கள் நாடு பாழடைந்திருக்கிறது; உங்கள் நகரங்கள் தீயினால் எரிந்துபோய்க் கிடக்கின்றன. உங்கள் கண்முன்பதாகவே உங்கள் வயல்கள் அந்நியரால் கொள்ளையிடப்படுகின்றன; உங்கள் நாடு பிறநாட்டினரால் தோற்கடிக்கப்பட்டு பாழடைந்ததைப் போல் இருக்கிறதே!

  8. ஏசாயா 1:8சுமார் கி.மு. 759

    சீயோனின் மகள் திராட்சைத் தோட்டத்திலுள்ள கொட்டில் போலவும், வெள்ளரித் தோட்டத்தின் குடில்போலவும், முற்றுகையிட்ட பட்டணம் போலவும் தனித்து விடப்பட்டிருக்கிறாள்.

  9. ஏசாயா 1:9சுமார் கி.மு. 759

    எல்லாம் வல்ல யெகோவா நம்மில் ஒரு சிலரைத் தப்பிப்பிழைக்க விட்டிராமல் இருந்தால், நாம் சோதோமைப் போலாகியிருப்போம்; நாம் கொமோராவுக்கு ஒத்தவர்களாயிருப்போம்.

  10. ஏசாயா 1:10சுமார் கி.மு. 759

    சோதோமின் ஆளுநர்களே, யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்; கொமோராவின் மக்களே, நமது இறைவனின் கட்டளைக்குச் செவிகொடுங்கள்!

  11. ஏசாயா 1:11சுமார் கி.மு. 759

    “உங்கள் ஏராளமான பலிகள் எனக்கு எதற்கு?” என யெகோவா கேட்கிறார். “செம்மறியாட்டுக் கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மந்தைகளின் கொழுப்பும், எனக்குச் சலித்துவிட்டன; காளைகள், செம்மறியாட்டுக் குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தினால் எனக்கு மகிழ்ச்சி இல்லை.

  12. ஏசாயா 1:12சுமார் கி.மு. 759

    நீங்கள் என் முன்னிலையில் வரும்போது, இவற்றையெல்லாம் கொண்டுவந்து, இப்படி என் பிராகாரங்களை மிதிக்கவேண்டுமென உங்களிடம் கூறியவர் யார்?

  13. ஏசாயா 1:13சுமார் கி.மு. 759

    உங்களது அர்த்தமற்ற காணிக்கைகளைக் கொண்டுவருவதை நிறுத்துங்கள்! உங்கள் தூபம் எனக்கு அருவருப்பாயிருக்கிறது. அமாவாசை நாட்கள், ஓய்வுநாட்கள், சபைக்கூட்டங்கள் போன்ற ஒழுங்கற்ற ஒன்றுகூடுதலை இனி என்னால் சகிக்க முடியாது.

  14. ஏசாயா 1:14சுமார் கி.மு. 759

    உங்களது அமாவாசை நாட்களையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது. அவை எனக்கு சுமையாகிவிட்டன; நான் அவைகளைச் சுமந்து களைத்துப் போனேன்.

  15. ஏசாயா 1:15சுமார் கி.மு. 759

    நீங்கள் ஜெபிப்பதற்காகக் கைகளை உயர்த்தும்போது, நான் உங்களிடமிருந்து என் கண்களை மறைத்துக்கொள்வேன்; அநேக ஜெபங்களைச் செய்தாலும், நான் செவிகொடுக்கமாட்டேன். “ஏனெனில் உங்கள் கைகள் குற்றமற்ற இரத்தக் கறையால் நிறைந்திருக்கின்றது!

  16. ஏசாயா 1:16சுமார் கி.மு. 759

    “உங்களைக் கழுவி சுத்திகரியுங்கள். உங்கள் கொடிய செயல்களை எனது பார்வையிலிருந்து நீக்கி, தீமை செய்வதை நிறுத்துங்கள்.

  17. ஏசாயா 1:17சுமார் கி.மு. 759

    சரியானதைச் செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியைத் தேடுங்கள். ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். திக்கற்றவர்களுக்கு நியாயம் செய்யுங்கள்; விதவைக்காக வழக்காடுங்கள்.

  18. ஏசாயா 1:18சுமார் கி.மு. 759

    “வாருங்கள், இப்பொழுது நாம் வழக்காடுவோம்” என்று யெகோவா கூறுகிறார். “உங்கள் பாவங்கள் செந்நிறமாய் இருந்தாலும், பனிபோல் வெண்மையாகும்; அவை கருஞ்சிவப்பாய் இருந்தாலும், பஞ்சைப்போல் வெண்மையாகும்.

  19. ஏசாயா 1:19சுமார் கி.மு. 759

    நீங்கள் இணங்கிக் கீழ்ப்படிந்தால், நாட்டின் சிறந்த பலனைச் சாப்பிடுவீர்கள்.

  20. ஏசாயா 1:20சுமார் கி.மு. 759

    ஆனால் எதிர்த்துக் கலகம் பண்ணுவீர்களாயின், நீங்கள் பட்டயத்துக்கு இரையாவீர்கள்.” யெகோவாவின் வாயே இவற்றை சொல்லியிருக்கிறது.

  21. ஏசாயா 1:21சுமார் கி.மு. 759

    பாருங்கள், எவ்வளவு உண்மையாய் இருந்த பட்டணம் இப்படி வேசியாயிற்று! முன்பு அது நியாயத்தால் நிரம்பியிருந்தது; நீதி அதில் குடியிருந்ததே, இப்பொழுதோ அது கொலைகாரரின் வசிப்பிடமாயிருக்கிறது.

  22. ஏசாயா 1:22சுமார் கி.மு. 759

    உன் வெள்ளி களிம்பாகிவிட்டது, உன் சிறந்த திராட்சை இரசம் தண்ணீர் கலப்பாயிற்று.

  23. ஏசாயா 1:23சுமார் கி.மு. 759

    உனது ஆளுநர்கள் கலகக்காரர், திருடரின் தோழர்; ஒவ்வொருவரும் இலஞ்சத்தை விரும்பி, வெகுமதியை நாடி விரைகிறார்கள். அநாதைகளுக்கு நியாயம் செய்யாதிருக்கிறார்கள்; விதவையின் வழக்கை எடுத்துப் பேசாதிருக்கிறார்கள்.

  24. ஏசாயா 1:24சுமார் கி.மு. 759

    ஆகவே, யெகோவா, எல்லாம் வல்ல யெகோவாவாகிய இஸ்ரயேலின் வல்லவர் அறிவிக்கிறார்: “ஓ! நான் என் எதிரிகளிடமிருந்து விடுதலையடைந்து என் பகைவர்களைப் பழிவாங்குவேன்.

  25. ஏசாயா 1:25சுமார் கி.மு. 759

    நான் என் கரத்தை உனக்கு எதிராகத் திருப்புவேன்; நான் உனது களிம்பு முற்றிலும் நீங்க உன்னை உருக்கி, உன் அசுத்தங்கள் அனைத்தையும் அப்புறப்படுத்துவேன்.