உள்ளடக்கத்திற்குச் செல்க

Kings பற்றிய பைபிள் வசனங்கள்

580 வசனங்கள் · 175 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. யெகோராம் அரசனானபோது முப்பத்திரண்டு வயதுடையவனாய் இருந்தான். அவன் எருசலேமில் எட்டு வருடங்கள் அரசாண்டான்.

  2. அவன் இஸ்ரயேல் அரசர்களின் வழியிலே நடந்து ஆகாபின் வீட்டார் செய்ததுபோல் செய்தான். ஏனெனில் அவன் ஆகாபின் ஒரு மகளைத் திருமணம் செய்திருந்தான். அவன் யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தான்.

  3. இருந்தாலும், யெகோவா தாவீதுக்கும் அவன் சந்ததிகளுக்கும் ஒரு குலவிளக்கை என்றென்றும் வைத்திருப்பேன் என வாக்குப்பண்ணி, அவனுடன் செய்த உடன்படிக்கையின் நிமித்தம் யெகோவா தாவீதின் சந்ததியை அழித்துப்போட விருப்பமில்லாதிருந்தார்.

  4. யெகோராமின் காலத்தில் ஏதோமியர் யூதாவுக்கு எதிராகக் கலகம்செய்து தங்களுக்கென ஒரு அரசனை ஏற்படுத்திக்கொண்டனர்.

  5. எனவே யெகோராம் தனது அதிகாரிகளோடும், தேர்களோடும் அங்கே போனான். ஏதோமியர் அவனையும் அவனுடைய தேர்ப்படைத் தளபதிகளையும் சுற்றி வளைத்துக்கொண்டனர். ஆயினும் அவன் இரவோடு இரவாக ஏதோமியரை முறியடித்தான்.

  6. இன்றுவரை இருக்கிறதுபோல ஏதோமியர் யூதாவின் அதிகாரத்திற்கு எதிராகக் கலகம் செய்துகொண்டிருக்கிறார்கள். யெகோராம் தன் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவைவிட்டு விலகியபடியால், அக்காலத்தில் லிப்னாவைச் சேர்ந்தவர்கள் கலகம் செய்தார்கள்.

  7. அவன் யூதாவின் குன்றுகளில் வழிபாட்டு மேடைகளையும் கட்டி வழிபடுவதன்மூலம், எருசலேம் மக்களை வேசித்தனத்தில் ஈடுபடச் செய்தான். இவ்வாறு யூதாவை வழிதவறச் செய்தான்.

  8. இறைவாக்கினன் எலியாவிடமிருந்து ஒரு கடிதம் யெகோராமுக்குக் கிடைத்தது. அதில், “உனது முற்பிதாவான தாவீதின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: நீ உனது முற்பிதாவாகிய யோசபாத்தோ அல்லது யூதாவின் அரசன் ஆசாவோ நடந்த வழியில் நடக்கவில்லை.

  9. ஆனால் நீ இஸ்ரயேல் அரசர்களின் வழியில் நடந்தாய். அத்துடன் ஆகாபின் வீட்டார் செய்ததுபோல் யூதாவையும், எருசலேம் மக்களையும் விக்கிரக வழிபாட்டின்மூலம் வேசித்தனம் செய்ய வழிநடத்தியிருக்கிறாய். அத்துடன் நீ உன்னைவிட நல்ல மனிதர்களான உனது சொந்த சகோதரரையும், உன் தகப்பனின் வீட்டு அங்கத்தினர்களையும் கொலைசெய்தாய்.

  10. இப்பொழுது யெகோவா உன் மக்களையும், உனது மகன்களையும், உன் மனைவிகளையும் அத்துடன் உன்னுடையவை அனைத்தையும் கடுமையான வாதையால் அடித்துப்போடப் போகிறார்.

  11. நீ தீராத குடல் நோயினால் வியாதிப்பட்டிருப்பாய். அந்த வியாதி உனது குடல்கள் வெளியே வரும்வரை நீடித்திருக்கும்” என்று எழுதியிருந்தது.

  12. யெகோவா யெகோராமுக்கு எதிராக பெலிஸ்தியரின் பகைமையையும், கூஷியரின் அருகில் வாழ்ந்த அரபியரின் பகைமையையும் தூண்டிவிட்டார்.

  13. அவர்கள் யூதாவைத் தாக்கி அதன்மேல் படையெடுத்து, அரசனின் அரண்மனையில் காணப்பட்ட எல்லாப் பொருட்களையும் கொண்டுபோனார்கள். அவற்றுடன் அவனுடைய மகன்களையும், மனைவியையும் பிடித்துக்கொண்டு போனார்கள். இளையமகன் அகசியாவைத்தவிர வேறு ஒரு மகனும் அவனுக்குத் தப்பவில்லை.

  14. இவையெல்லாவற்றிற்கும் பின்பு யெகோவா யெகோராமை தீராத குடல் வியாதியினால் துன்புறுத்தினார்.

  15. இந்நிகழ்ச்சியின் காலத்தில் இரண்டாம் வருடக் கடைசியில் நோயினால் அவனுடைய குடல்கள் வெளியே வந்தன, அவன் கொடிய வேதனையில் இறந்துபோனான். அவனுடைய மக்கள் அவனுடைய முற்பிதாக்களுக்குச் செய்ததுபோல அவனுக்கு மரியாதை செலுத்துவதற்காக நெருப்பு வளர்க்கவில்லை.

  16. யெகோராம் அரசனாகும்போது முப்பத்திரண்டு வயதாயிருந்தான். அவன் எருசலேமில் எட்டு வருடங்கள் அரசாண்டான். அவன் இறந்து தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். ஆயினும் அரசர்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை. ஒருவனும் அவனுக்காகத் துக்கங்கொண்டாடவும் இல்லை.

  17. எருசலேமின் மக்கள் யெகோராமின் இளையமகன் அகசியாவை அவனுடைய தந்தையின் இடத்தில் அரசனாக்கினார்கள்; ஏனெனில் அரபியருடன் முகாமுக்குள் வந்த கொள்ளையர்கள் அகசியாவுக்கு முன்பு பிறந்த யெகோராமின் எல்லா மகன்களையும் கொன்றிருந்தார்கள். எனவே யூதாவின் அரசன் யெகோராமின் மகன் அகசியா அரசனானான்.

  18. அகசியா அரசனானபோது இருபத்திரண்டு வயதுடையவனாயிருந்தான். அவன் எருசலேமில் ஒரு வருடம் ஆட்சிசெய்தான். அவனுடைய தாயின் பெயர் அத்தாலியாள். அவள் உம்ரியின் பேத்தியாவாள்.

  19. அகசியாவும் ஆகாபின் வீட்டாரின் வழியிலே நடந்தான்; அவன் தீயவழியில் நடக்க அவனுடைய தாய் அவனுக்கு ஆலோசனை கூறினாள்.

  20. அவன் ஆகாபின் வீட்டார் செய்ததுபோல் யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தான். ஏனெனில் அவனுடைய தகப்பன் இறந்துபோன பின்பு ஆகாபின் வீட்டாரே அவனுடைய ஆலோசகர்களாய் இருந்தனர்; அகசியாவின் அழிவுக்கு இவர்களே காரணமாயிருந்தார்கள்.

  21. அத்துடன் அகசியா அவர்களின் ஆலோசனையைக் கேட்டு இஸ்ரயேலின் அரசன் ஆகாபின் மகன் யோராமுடன், கீலேயாயாத்திலுள்ள ராமோத்திற்கு சீரிய அரசனான ஆசகேலுக்கு விரோதமாக யுத்தத்திற்குப் போனான். சீரியர் யோராமைக் காயப்படுத்தினார்கள்.

  22. எனவே சீரிய அரசனான ஆசகேலுடன் ராமோத்தில் செய்த யுத்தத்தில் சீரியரினால் தனக்கு ஏற்பட்ட காயங்களைச் சுகப்படுத்துவதற்காக, அவன் யெஸ்ரயேலுக்குத் திரும்பினான். அப்பொழுது ஆகாபின் மகன் யோராம் காயப்பட்டிருந்ததால், யூதாவின் அரசனான யெகோராமின் மகன் அசரியா, அவனைப் பார்ப்பதற்கு யெஸ்ரயேலுக்குப் போனான்.

  23. அகசியா யோராமை பார்க்க வந்ததினால் இறைவன் அகசியாவுக்கு வீழ்ச்சியை உண்டாக்கினார். அகசியா வந்து சேர்ந்தபோது அவன் யோராமுடன் நிம்சியின் மகன் யெகூவைச் சந்திக்கப் போனான். ஆகாபின் குடும்பத்தை அழிப்பதற்கென யெகோவா யெகூவை அபிஷேகம் செய்திருந்தார்.

  24. யெகூ ஆகாபின் குடும்பத்தாருக்குத் தண்டனைத் தீர்ப்பை வழங்கும்போது, அகசியாவிடம் பணிபுரிந்த யூதாவின் தலைவர்களையும், அவனுடைய உறவினர்களின் மகன்களையும், அவன் அலுவலர்களையும் கண்டுபிடித்துக் கொன்றான்.

  25. பின்பு அவன் அகசியாவைத் தேடிப் போனான். அப்பொழுது சமாரியாவில் ஒளித்துக்கொண்டிருந்த அகசியாவை யெகூவின் மனிதர் பிடித்தனர். அவன் யெகூவிடம் கொண்டுவரப்பட்டு கொலைசெய்யப்பட்டான். அவர்கள், “யெகோவாவை முழு இருதயத்துடனும் தேடிய யோசபாத்தின் மகன் இவன்” என்று சொல்லி அவனை அடக்கம்பண்ணினார்கள்; எனவே, ஆட்சியைத் திரும்பக் கைப்பற்றக்கூடிய வல்லமையுடைய ஒருவனும் அகசியாவின் குடும்பத்தில் இருக்கவில்லை.