Kings பற்றிய பைபிள் வசனங்கள்: Jehoiachin
Jehoiachin பற்றிய வசனங்கள்
யோயாக்கீன் அரசனாக வந்தபோது பதினெட்டு வயதுள்ளவனாயிருந்தான். அவன் எருசலேமில் மூன்று மாதங்கள் ஆட்சிசெய்தான். இவனுடைய தாய் எருசலேமைச் சேர்ந்த எல்நாத்தானின் மகளான நெகுஸ்தாள் என்பவள்.
தன் தந்தை செய்ததுபோலவே இவனும் யெகோவாவின் பார்வையில் தீமையையே செய்தான்.
அந்த வேளையில் பாபிலோனிய அரசனான நேபுகாத்நேச்சாரின் இராணுவ அதிகாரிகள் எருசலேம் நகரத்திற்கு எதிராக அணிவகுத்து அதை முற்றுகையிட்டனர்.
அவனுடைய படைகள் முற்றுகையிட்டுக் கொண்டிருக்கும்போது அரசனாகிய நேபுகாத்நேச்சாரும் பட்டணத்திற்கு வந்தான்.
அப்பொழுது யூதாவின் அரசன் யோயாக்கீன், அவன் தாய், ஏவலாளர்கள், அதிகாரிகள், உயர்குடி மக்கள் யாவரும் அவனிடம் சரணடைந்தார்கள். அவன் யோயாக்கீனைச் சிறைப்பிடித்தான். பாபிலோனிய அரசனின் ஆட்சியின் எட்டாம் வருடத்தில் இது நடந்தது.
யெகோவா முன்பாக அறிவித்தபடியே நேபுகாத்நேச்சார் யெகோவாவின் ஆலயத்திலிருந்தும், அரண்மனையிலிருந்தும் எல்லா திரவியங்களையும் எடுத்ததோடு, இஸ்ரயேலின் அரசனாகிய சாலொமோன் யெகோவாவின் ஆலயத்துக்கெனச் செய்து வைத்த தங்கத்தினாலான எல்லா பொருட்களையும் சூறையாடிக் கொண்டுபோனான்.
அத்துடன் எருசலேம் முழுவதிலும் இருந்த எல்லா அதிகாரிகளையும், படைவீரரையும், சிற்பிகளையும், ஓவியர்களையும் மொத்தமாக பத்தாயிரம்பேரை நாடுகடத்திக் கொண்டுபோனான். மிகவும் ஏழையான மக்கள் மாத்திரமே மீதியாக விடப்பட்டு இருந்தனர்.
நேபுகாத்நேச்சார் யோயாக்கீனை பாபிலோனுக்கு சிறைபிடித்துக் கொண்டுபோனான். அத்துடன் அவன் எருசலேமிலிருந்து அரசனின் தாய், அவனுடைய மனைவியர், அதிகாரிகள், நாட்டின் தலைவர்கள் ஆகியோரையும் பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.
பாபிலோனிய அரசன் இவற்றோடுகூட பலமும், போருக்குத் தகுதியுமுள்ளவர்களான ஏழாயிரம் வீரரைக்கொண்ட முழு இராணுவத்தையும் சிற்பிகளிலும், ஓவியர்களிலும் ஆயிரம்பேரையும் பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.