உள்ளடக்கத்திற்குச் செல்க

Kings பற்றிய பைபிள் வசனங்கள்: Jehoash or Joash

25 வசனங்கள் · 175 அம்சங்கள்

Jehoash or Joash பற்றிய வசனங்கள்

  1. யூதாவின் அரசன் யோவாசின் ஆட்சியின் முப்பத்தேழாம் வருடத்தில் யோவாகாஸின் மகன் யோவாஸ் இஸ்ரயேலில் அரசனானான். இவன் சமாரியாவிலிருந்து பதினாறு வருடங்கள் ஆட்சிசெய்தான்.

  2. இவன் யெகோவாவின் பார்வையில் தீமையானவற்றைச் செய்தான். இஸ்ரயேலைப் பாவம் செய்யப்பண்ணின நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவங்களில் எதையும் அவன் விடாமல் அவற்றைத் தொடர்ந்து செய்து வந்தான்.

  3. இஸ்ரயேல் அரசன் யோவாஸ் நிகழ்வுகளும், அவன் செய்தவைகளும், அவனுடைய சாதனைகளும் யூதாவின் அரசன் அமத்சியாவுடன் அவன் செய்த யுத்தம் உட்பட அவனுடைய சதிகள் யாவும், இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன.

  4. யோவாஸ் தன் முற்பிதாக்களுடன் இளைப்பாறினான். மற்ற இஸ்ரயேல் அரசர்களை அடக்கம்பண்ணும் இடத்தில் சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவனுடைய அரியணையில் யெரொபெயாம் அரசனானான்.

  5. இந்த நாட்களில் எலிசா வியாதியினால் துன்பப்பட்டான். இந்த வியாதியே பின் அவனுடைய மரணத்துக்குக் காரணமாயிருந்தது. அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் யோவாஸ் அவனைப் பார்க்கப்போய், “என் தந்தையே! தந்தையே! இஸ்ரயேலுக்கு தேர்களையும், குதிரைவீரர்களையும்போல் இருந்தவரே!” என்று சொல்லி அவனுக்காக அழுதான்.

  6. எலிசா அவனை நோக்கி, “ஒரு வில்லும் சில அம்புகளும் கொண்டுவா” என்றான் அவன் அப்படியே கொண்டுவந்தான்.

  7. எலிசா இஸ்ரயேலின் அரசனிடம், “வில்லை உம்முடைய கைகளில் எடும்” என்றான். அரசன் அவ்வாறே எடுத்தபோது, எலிசா தன் கையை அரசனின் கையில் வைத்தான்.

  8. “கிழக்குப் பக்கமாக ஜன்னலைத் திறந்திடும்” என்றான். அப்படியே அரசன் ஜன்னலைத் திறந்தான். அப்பொழுது எலிசா, “எய்திடும்” என்றான். அவன் அப்படியே செய்தான். எலிசா அவனைப் பார்த்து, “இது யெகோவாவினுடைய வெற்றியின் அம்பு. சீரியரின்மேல் வெற்றியைக் கொண்டுவரும் அம்பு; நீ சீரியரை ஆப்பெக்கில் முழுவதுமாக அழித்துப்போடுவாய்” என்று கூறினான்.

  9. அதன்பின்பும் எலிசா அரசனை நோக்கி, “அந்த அம்புகளை எடும்” என்றான். அரசன் அவற்றை எடுத்தான். அப்பொழுது எலிசா இஸ்ரயேலின் அரசனிடம், “அவற்றை நிலத்தில் அடியும்” என்றான். அவன் மூன்றுமுறை அடித்து நிறுத்தினான்.

  10. இறைவனுடைய மனிதன் அவன்மேல் கோபங்கொண்டு, “நீர் நிலத்தில் ஐந்துமுறை அல்லது ஆறுமுறை அடித்திருக்க வேண்டும். அவ்வாறு அடித்திருந்தால் சீரியாவை முழுவதும் தோற்கடித்திருப்பீர். இப்போதோ மூன்றுமுறை மாத்திரம் தான் சீரியாவை தோற்கடிப்பீர்” என்றான்.

  11. அதன்பின் எலிசா இறந்து அடக்கம் செய்யப்பட்டான். மோவாபிய கொள்ளையர் ஒவ்வொரு வருடமும் வசந்தகாலத்தில் நாட்டுக்குள் நுழைவது வழக்கமாயிருந்தது.

  12. ஒருமுறை இஸ்ரயேலர் ஒரு மனிதனை அடக்கம்பண்ணிக்கொண்டிருக்கையில் திடீரென ஒரு கொள்ளைக் கூட்டத்தைக் கண்டார்கள். உடனே அந்த உடலை எலிசாவின் கல்லறைக்குள் தூக்கி எறிந்தார்கள். அந்த உடல் எலிசாவின் எலும்புகளில் பட்டவுடனே அவன் உயிர்பெற்று தன் கால்களை ஊன்றி எழுந்து நின்றான்.

  13. யோவாகாசின் ஆட்சிக் காலமெல்லாம் சீரிய அரசனாகிய ஆசகேல் இஸ்ரயேலரை ஒடுக்கினான்.

  14. ஆனால் யெகோவா ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் செய்த உடன்படிக்கைக்காக அவர்கள்மேல் கிருபையாயிருந்து அவர்களில் இரக்கமும், கரிசனையும் காட்டினார். இன்றுவரை அவர் தமது முன்னிலையிலிருந்து அவர்களை அழிக்கவோ, அகற்றவோ விருப்பமற்றவராகவே இருக்கிறார்.

  15. சீரிய அரசன் ஆசகேல் இறந்தான். அவனுக்குப்பின் அவன் மகன் பெனாதாத் அரசனானான்.

  16. யோவாகாசின் மகன் யோவாஸ் தன் தகப்பன் யோவாகாசிடமிருந்து, ஆசகேலின் மகனான பெனாதாத் கைப்பற்றிய நகரங்களை அவனிடமிருந்து திரும்பவும் பிடித்தான். யோவாஸ் அவனை மூன்றுமுறை தோற்கடித்து இஸ்ரயேல் பட்டணங்களைத் திரும்பப் பிடித்துக்கொண்டான்.

  17. அதன்பின்பு அமத்சியா தூதுவர்களை அனுப்பி, யோவாகாசின் மகனும் யெகூவின் பேரனுமான இஸ்ரயேலின் அரசன் யோவாஸிடம், “வாரும், நாம் யுத்தத்தில் நேருக்குநேர் சந்திப்போம்” என்று சவாலிட்டு ஒரு செய்தியைக் கூறினான்.

  18. அதற்கு இஸ்ரயேல் அரசனான யோவாஸ், யூதாவின் அரசனான அமத்சியாவுக்கு, “லெபனோனிலுள்ள முட்செடி லெபனோனிலுள்ள கேதுருமரத்திடம், ‘உனது மகளை எனது மகனுக்கு திருமணம் செய்துகொடு’ என்று ஒரு செய்தி அனுப்பியது. ஆனால் லெபனோனிலுள்ள ஒரு காட்டுமிருகம் அவ்வழியாய் கடந்து போகையில் முட்செடியை காலின்கீழ் மிதித்துவிட்டது.

  19. நீ ஏதோமை தோற்கடித்தது உண்மைதான். உன் வெற்றியை நீயே புகழ்ந்துகொண்டு இப்பொழுது பெருமை கொண்டிருக்கிறாய். ஆனாலும் வீட்டிலே இரு! நீ ஏன் கஷ்டத்தை வேண்டுமென்று தேடி உனது வீழ்ச்சிக்கும் யூதாவின் வீழ்ச்சிக்கும் காரணமாயிருக்க வேண்டும்?” என்று பதில் அனுப்பினான்.

  20. ஆனால் அமத்சியாவோ அதற்கு செவிகொடுக்கவில்லை. அதனால் இஸ்ரயேல் அரசன் யோவாஸ் எதிர்த்துத் தாக்கினான். அவனும் யூதாவின் அரசன் அமத்சியாவும் யூதாவிலுள்ள பெத்ஷிமேஷில் நேரடியாக ஒருவரோடொருவர் மோதினர்.

  21. இஸ்ரயேலரால் யூதா தோற்கடிக்கப்பட்டு, ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளுக்குத் தப்பி ஓடினார்கள்.

  22. இஸ்ரயேல் அரசன் யோவாஸ், யூதாவின் அரசனான யோவாஸின் மகனும், அகசியாவின் பேரனுமான அமத்சியாவை பெத்ஷிமேஷில் கைதியாக்கினான். அதன்பின் யோவாஸ் எருசலேமுக்குப் போய், எருசலேமின் மதிலை ஏறத்தாழ அறுநூறு அடி தூரத்துக்கு எப்பிராயீம் வாசலிலிருந்து மூலைவாசல்வரை இடித்துப்போட்டான்.

  23. அரச அரண்மனையின் திரவியக் களஞ்சியத்திலிருந்த யெகோவாவின் ஆலயத்திலிருந்த வெள்ளியையும், தங்கத்தையும், மற்றும் எல்லாப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு, பிணைக்கைதிகளையும் பிடித்துக்கொண்டு சமாரியாவுக்குத் திரும்பினான்.

  24. யோவாஸ் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவன் செய்த செயல்களும், அவனுடைய சாதனைகளும் மற்றும் யூதா அரசன் அமத்சியாவுடன் செய்த யுத்தமும், இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன.

  25. இதன்பின் யோவாஸ் தன் முற்பிதாக்களைப்போல இறந்து, இஸ்ரயேலின் அரசர்கள் அடக்கம் செய்யப்படும் இடத்தில் சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுடைய மகன் யெரொபெயாம் அவனுக்குப்பின் அரசனானான்.