உள்ளடக்கத்திற்குச் செல்க

God

11,427 வசனங்கள் · 2 குடும்ப உறுப்பினர்கள்

God பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. சேனைகளின் யெகோவா தாவீதுடன் இருந்ததால் அவன் மென்மேலும் வலிமையடைந்தான்.

  2. எல்லா இஸ்ரயேல் மக்களோடும் சேர்ந்து தாவீதுடன் இருந்த வலிமைமிக்க தலைவர்கள் இவர்களே. இவர்கள் இஸ்ரயேலைக் குறித்து யெகோவா கொடுத்த வாக்குத்தத்தத்திற்கு ஏற்றபடி, தாவீதின் அரசை விரிவடையச் செய்தார்கள்.

  3. ஆனாலும் அவர்கள் வயலின் நடுவில் நின்று அந்த வயலைப் பாதுகாத்து பெலிஸ்தியரை வெட்டி வீழ்த்தினார்கள். யெகோவா இவ்வாறு அவர்களுக்குப் பெரிய வெற்றியைக் கொடுத்தார்.

  4. எனவே அந்த மூவரும் பெலிஸ்தியரின் முகாமின் உள்ளே சென்று பெத்லெகேமின் வாசலின் அருகில் உள்ள கிணற்றிலிருந்து தண்ணீர் அள்ளி, கொண்டுவந்து தாவீதுக்குக் கொடுத்தார்கள். ஆனால் தாவீது அதைக் குடிக்க மறுத்து அதை யெகோவாவுக்கு முன்பாக வெளியே ஊற்றினான்.

  5. அவன், “இறைவனே, நான் இதைச் செய்வதற்கு எண்ணியும் பார்க்கமாட்டேன். தங்கள் உயிரையும் ஒரு பொருட்டாக எண்ணாமல் தண்ணீர் கொண்டுவந்த இந்த மனிதர்களின் இரத்தத்தை நான் குடிப்பேனோ?” என்றான். இவர்கள் தங்கள் உயிருக்கு வர இருந்த ஆபத்தையும் பொருட்படுத்தாமல் அதைக் கொண்டுவந்ததால் தாவீது அதைக் குடிக்கவில்லை. இத்தகைய துணிகரமான செயல்களை இந்த மூன்று வலிமைமிக்க மனிதர்களும் செய்தார்கள்.

  6. தாவீது வெளியில் வந்து அவர்களைச் சந்தித்து அவர்களிடம், “நீங்கள் எனக்கு உதவி செய்வதற்காக சமாதானத்துடன் வந்தீர்களானால் நான் உங்களுடன் சேர ஆயத்தமாயிருக்கிறேன். ஆனால் நான் வன்செயல்களில் இருந்து விலகியிருக்கும்போது, என்னை என் எதிரிகளிடம் காட்டிக்கொடுக்க வந்தால், நம்முடைய முற்பிதாக்களின் இறைவன் அதைப் பார்த்து உங்களை நியாயந்தீர்பாராக” என்றான்.

  7. அப்பொழுது முப்பதுபேரில் ஒருவனும் தலைவர்களில் ஒருவனுமான அமசாயிற்கு இறைவனின் ஆவியானவர் வந்ததினால் அவன் சொன்னதாவது: “தாவீதே, நாங்கள் உன்னுடையவர்கள்; ஈசாயின் மகனே, நாங்கள் உன்னுடனே இருக்கிறோம். வெற்றி! உனக்கே வெற்றி! உனக்கு உதவி செய்பவர்களுக்கும் வெற்றி! உனது இறைவன் உனக்கு உதவி செய்வார்.” எனவே தாவீது அவர்களை ஏற்றுக்கொண்டு தன் அதிரடிப் படைகளுக்கு தலைவர்களாக்கினான்.

  8. இவ்வாறு தாவீதின் இராணுவம் இறைவனின் இராணுவத்தைப் போன்று மகா பெரிய இராணுவமாகும் வரைக்கும், நாளுக்குநாள் மனிதர்கள் வந்துசேர்ந்து தாவீதுக்கு உதவினார்கள்.

  9. யெகோவா சொன்னபடி சவுலின் அரசாட்சியை தாவீதுக்கு கொடுப்பதற்காக, எப்ரோனில் இருந்த தாவீதிடம் வந்த இராணுவவீரர்களின் எண்ணிக்கைகள்:

  10. பின்பு தாவீது கூடியிருந்த எல்லா இஸ்ரயேலரிடமும், “இது உங்களுக்கு நல்லதாகவும், யெகோவாவாகிய இறைவனின் திட்டமாயும் இருந்தால், இஸ்ரயேல் எங்கும் வாழும் மீதமுள்ள எனது சகோதரர்களை எங்களுடன் வந்து சேரும்படி செய்தி அனுப்புவோம். அவர்களுடன் அவர்களுடைய பட்டணங்களிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் வாழும் ஆசாரியருக்கும், லேவியர்களுக்கும் செய்தி அனுப்புவோம்.

  11. அத்துடன் இறைவனது பெட்டியை திரும்பவும் நம்மிடம் கொண்டுவருவோம். ஏனெனில் சவுலின் ஆட்சிக்காலத்தில் நாம் புறக்கணித்தோம்” என்றான்.

  12. எனவே தாவீது கீரியாத்யாரீமிலுள்ள இறைவனது பெட்டியைக் கொண்டுவருவதற்காக எகிப்திலுள்ள சீகார் ஆறுதொடங்கி, லேபோ ஆமாத் வரையுள்ள இஸ்ரயேலின் எல்லா மக்களையும் கூடிவரச் செய்தான்.

  13. கேருபீன்களின் நடுவில் அமர்ந்திருக்கும் யெகோவாவாகிய இறைவனின் பெயர் விளங்கும் பெட்டியை எடுத்து வருவதற்கு, தாவீதும் கூடியிருந்த எல்லா இஸ்ரயேல் மக்களும் யூதேயாவிலிருந்த கீரியாத்யாரீமுக்கடுத்த பாலாவுக்கு போனார்கள்.

  14. ஊசாவும் அகியோவும் வழிகாட்ட அவர்கள் இறைவனின் பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து ஒரு புது வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்தார்கள்.

  15. தாவீதும் எல்லா இஸ்ரயேல் மக்களும் பாடல்களோடும், யாழோடும், மத்தளங்களோடும், கைத்தாளத்தோடும், எக்காளத்தோடும் இறைவனுக்கு முன்பாக தங்கள் முழு பலத்தோடும் பாடிக் கொண்டாடினார்கள்.

  16. ஊசா பெட்டியைத் தன் கையினால் தொட்டபடியினால் யெகோவாவின் கோபம் அவனுக்கு எதிராகப் பற்றியெரிந்தது. அதனால் அவர் ஊசாவை அடித்தார். அவன் அந்த இடத்திலே இறைவனுக்கு முன்பாக இறந்தான்.

  17. அவ்வாறு யெகோவாவின் கோபம் ஊசாவை அடித்ததினால் தாவீது கோபப்பட்டு, அந்த இடத்திற்கு இந்நாள்வரை வழங்கிவருகிறபடி, பேரேஸ் ஊசா என்று பெயரிட்டான்.

  18. தாவீது அன்றையதினம் இறைவனுக்குப் பயந்து, “நான் எப்படி இறைவனின் பெட்டியை என்னிடத்திற்குக் கொண்டுவருவேன்” எனக் கூறினான்.

  19. இறைவனது பெட்டி ஓபேத் ஏதோமின் குடும்ப இல்லத்தில் மூன்று மாதங்கள் இருந்தது. யெகோவா ஓபேத் ஏதோமின் குடும்பத்தையும், அவனுக்குள்ள எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்.

  20. யெகோவா தன்னை இஸ்ரயேலுக்கு அரசனாக உறுதிப்படுத்தியிருக்கிறார் என்பதையும், தனது மக்களான இஸ்ரயேலுக்காக தனது ஆட்சியை மிகவும் உயர்த்தி மேன்மைப்படுத்தியுள்ளார் என்பதையும் தாவீது அறிந்துகொண்டான்.

  21. எனவே தாவீது இறைவனிடம், “நான் பெலிஸ்தியரை எதிர்க்கப் போகலாமா? அவர்களை எனது கையில் ஒப்புக்கொடுப்பீரா?” எனக் கேட்டான். அதற்கு யெகோவா, “போ, அவர்களை நான் உன் கையில் ஒப்படைப்பேன்” எனப் பதிலளித்தார்.

  22. எனவே தாவீதும் அவனுடைய மனிதர்களும் பாகால் பிராசீமுக்குப் போனார்கள். அங்கே தாவீது அவர்களை முறியடித்து, “தண்ணீர் மடை திறந்தோடுவதுபோல, என் கைகளினால் இறைவன் என் பகைவரை முறிந்தோடப்பண்ணினார்” எனச் சொன்னான். எனவே அந்த இடம், பாகால் பிராசீம் என அழைக்கப்பட்டது.

  23. எனவே திரும்பவும் தாவீது இறைவனிடம் விசாரித்து கேட்டபோது இறைவன், “நீ நேரடியாகப் போகாமல் சுற்றிவளைத்து குங்கிலிய மரங்களின் முன்னால் சென்று அவர்களைத் தாக்கு.

  24. குங்கிலிய மரங்களின் உச்சியில் சலசலக்கும் இரைச்சலைக் கேட்டதும் நீ யுத்தத்திற்கு புறப்படு. ஏனெனில் இறைவன் உனக்கு முன்பாக பெலிஸ்திய படையைத் தாக்குவதற்காக போயிருக்கிறார் என்பதே அந்தச் சத்தத்தின் விளக்கம்” என்றார்.

  25. இறைவன் கட்டளையிட்டபடியே தாவீது செய்தான். அவர்கள் பெலிஸ்திய இராணுவத்தை கிபியோன் தொடங்கி கேசேர்வரை வெட்டி வீழ்த்தினார்கள்.