உள்ளடக்கத்திற்குச் செல்க

Church (2) பற்றிய பைபிள் வசனங்கள்

158 வசனங்கள் · 7 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. மக்களை ஒன்றுசேர்த்து, சபையை பரிசுத்தம் செய்யுங்கள். முதியோரை ஒன்றுகூட்டுங்கள், பிள்ளைகளையும் பாலுண்கிற குழந்தைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். மணமகன் தன் அறையையும், மணமகள் தன் படுக்கையையும் விட்டுப் புறப்படட்டும்.

  2. யெகோவாவுக்கு முன்பாக ஊழியஞ்செய்யும் ஆசாரியர்கள் புலம்பட்டும்; ஆலய மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே நின்று அழட்டும். அவர்கள், “யெகோவாவே, உமது மக்களைத் தப்புவியும். உமது உரிமைச்சொத்தை பிறநாடுகளின் நடுவே நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாக்காதேயும். ‘அவர்களுடைய இறைவன் எங்கே?’ என்று மக்கள் கூட்டங்கள் மத்தியில் அவர்கள் ஏன் சொல்லவேண்டும்?” என்று சொல்வார்களாக.

  3. அப்பொழுது இயேசு, “நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்?” என்று கேட்டார்.

  4. அதற்கு சீமோன் பேதுரு, “நீர் கிறிஸ்து, வாழும் இறைவனின் மகன்” என்றான்.

  5. அதற்கு இயேசு, “யோனாவின் மகனாகிய சீமோனே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன். ஏனெனில், இது உனக்கு மனிதனால் வெளிப்படுத்தப்படவில்லை. பரலோகத்திலிருக்கிற எனது பிதாவினாலேயே வெளிப்படுத்தப்பட்டது.

  6. எனவே நான் உனக்குச் சொல்கிறேன்: நீ பேதுரு, இந்தப் பாறையின்மேல், நான் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளமாட்டாது.

  7. கீழ்க்காணும் முக்கியமானவற்றைத் தவிர, வேறு எந்தப் பாரத்தையும் உங்கள்மேல் சுமத்தாமல் இருப்பது நலமென்று, பரிசுத்த ஆவியானவருக்கும் எங்களுக்கும் தோன்றியது:

  8. நீங்கள் இறைவன் அல்லாதவைகளுக்குப் பலியிடப்பட்ட உணவைத் தவிர்க்கவேண்டும், இரத்தத்தையும், நெரித்துக் கொல்லப்பட்ட மிருகத்தின் இறைச்சியையும் விலக்கிக்கொள்ள வேண்டும், முறைகேடான பாலுறவுகளில் ஈடுபடக்கூடாது. இவ்வாறான காரியங்களைத் தவிர்த்துக்கொள்ள எல்லா முயற்சிகளையும் செய்வது நல்லது. உங்களுக்கு நலமுண்டாவதாக.

  9. பிரியமானவர்களே, உங்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் உண்டென்று குலோவேயாளின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் எனக்கு அறிவித்தார்கள்.

  10. உங்களில் ஒருவன், “நான் பவுலைப் பின்பற்றுகிறவன்” என்கிறான்; இன்னொருவன், “நான் அப்பொல்லோவைப் பின்பற்றுகிறவன்” என்கிறான்; இன்னும் ஒருவன், “நான் கேபாவைப் பின்பற்றுகிறவன்” என்கிறான்; இன்னும் ஒருவன், “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவன்” என்கிறான். இவற்றையே இங்கு நான் குறிப்பிடுகிறேன்.

  11. கிறிஸ்து பிளவுப்பட்டுள்ளாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? நீங்கள் பவுலின் பெயரினாலா திருமுழுக்கைப் பெற்றீர்கள்?

  12. ஏனெனில், இன்னமும் உலகத்திற்குரியவர்களாகவே இருக்கிறீர்கள். இன்னும் உங்களிடையே பொறாமையும் சண்டை சச்சரவுகளும் இருக்கிறபடியால், நீங்கள் உலகத்திற்குரியவர்கள்தானே. நீங்கள் சாதாரண மனிதர்களைப்போல் அல்லவா நடந்துகொள்கிறீர்கள்?

  13. “நான் பவுலைப் பின்பற்றுகிறவன்” என்று ஒருவன் சொல்லும்போது, மற்றவன், “நான் அப்பொல்லோவைப் பின்பற்றுகிறவன்” என்கிறான். அப்படியென்றால், நீங்கள் சாதாரண மனித இயல்பின்படிதானே நடந்துகொள்கிறீர்கள்.

  14. முதலாவதாக, நீங்கள் திருச்சபையாகக் கூடிவரும்போது, உங்களிடையே பிரிவினைகள் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். அதை நான் ஓரளவு நம்புகிறேன்.

  15. உங்களிடையே பிரிவினைகள் இருக்கவேண்டும் என்பது உண்மைதான். அப்பொழுதுதான் யார் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுகிறவர்கள் என்பது தெளிவாகும்.

  16. ஒருவேளை நான் உங்களிடம் வரும்போது, நான் விரும்புகிறபடி நீங்கள் இருப்பீர்களோ என்னவோ, நானும் நீங்கள் விரும்புகிறபடி நடந்துகொள்ளாமல் இருப்பேனோ என்னவோ என்று நான் பயப்படுகிறேன். உங்களிடையே வாக்குவாதங்களும், பொறாமையும், கோபங்களும், சுயநலமும், அவதூறு பேசுதலும், புறங்கூறுதலும், அகங்காரமும், ஒழுங்கீனமும், இருக்குமோ என்றும் பயப்படுகிறேன்.

  17. நான் மீண்டும் உங்களிடம் வரும்போது, என்னுடைய இறைவன் உங்களுக்கு முன்பாக என்னைச் சிறுமைப்படுத்துவாரோ என்று, நான் பயப்படுகிறேன். உங்களில் பலர் முன்பு செய்த பாவங்களாகிய அசுத்தத்தையும், பாலியல் சம்பந்தமான பாவத்தையும், காமவெறியையும் விட்டு, ஒருவேளை மனந்திரும்பாதிருக்கலாம். அப்படியானவர்களைக் குறித்து நான் துக்கப்பட வேண்டியிருக்குமோ என்றும் பயப்படுகிறேன்.

  18. இறைவன் எல்லாவற்றையும் கிறிஸ்துவினுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி,

  19. எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய உடலாகிய திருச்சபைக்கு, அவரை எல்லாவற்றையும் ஆளுகை செய்கிற தலையாக நியமித்தார்.

  20. நீங்களும் அப்போஸ்தலர், இறைவாக்கினர் ஆகியோரை அஸ்திபாரமாயும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாயும் கொண்டு கட்டப்பட்டிருக்கிறீர்கள்.

  21. கிறிஸ்துவிலேயே அந்த முழுக்கட்டிடமும் ஒன்றாய் இணைக்கப்பட்டு, கர்த்தரில் ஒரு பரிசுத்த ஆலயமாக இருக்கும்படி வளர்ச்சி பெறுகிறது.

  22. நீங்களும்கூட கிறிஸ்துவில், இறைவன் தமது ஆவியானவரினால் குடியிருக்கும் இடமாக சேர்த்துக் கட்டப்படுகிறீர்கள்.

  23. ஏனெனில் கிறிஸ்து தமது உடலாகிய திருச்சபையின் தலைவராய் இருப்பதுபோல, கணவன் தனது மனைவியின் தலைவனாய் இருக்கிறான். கிறிஸ்துவே தமது திருச்சபையின் இரட்சகராக இருக்கிறார்.

  24. அப்படியே திருச்சபையானது கிறிஸ்துவுக்குப் பணிந்து நடப்பதுபோல, மனைவிகளும் தங்கள் கணவர்களுக்கு எல்லாவற்றிலும் பணிந்திருக்கவேண்டும்.

  25. கணவர்களே, கிறிஸ்து திருச்சபையில் அன்புகூர்ந்து, அதற்காகத் தம்மை ஒப்புக்கொடுத்தது போலவே, நீங்களும் மனைவியிடம் அன்பாய் இருங்கள்.