ஆதியாகமம் 31:20-44
20
அதுமட்டுமல்ல, யாக்கோபு அரமேயனான லாபானுக்குச் சொல்லாமலே ஓடிப்போனதினால் அவனை ஏமாற்றினான்.
21
இவ்வாறு யாக்கோபு தனக்குச் சொந்தமான எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு ஐபிராத்து ஆற்றைக் கடந்து தப்பியோடி, கீலேயாத் மலைநாட்டை நோக்கிப் போனான்.
22
யாக்கோபு தப்பி ஓடிவிட்டான் என்று மூன்றாம் நாளில் லாபானுக்குச் சொல்லப்பட்டது.
23
லாபான் தன் உறவினர்களோடு ஏழு நாட்களாக யாக்கோபைப் பின்தொடர்ந்து சென்று கீலேயாத் மலையில் அவனிருந்த இடத்தை அடைந்தான்.
24
அன்றிரவு இறைவன் அரமேயனான லாபானின் கனவிலே தோன்றி, “நீ யாக்கோபுடன் நன்மையானவற்றையோ தீமையானவற்றையோ பேசக்கூடாது” என எச்சரித்தார்.
25
லாபான் யாக்கோபைக் கண்டபோது, அவன் கீலேயாத் மலைநாட்டிலே கூடாரம் அமைத்துத் தங்கியிருந்தான். லாபானும் அவன் உறவினர்களும் அங்கேயே கூடாரம் அமைத்துத் தங்கினார்கள்.
26
அப்பொழுது லாபான் யாக்கோபிடம், “நீ என்ன செய்துவிட்டாய்? நீ என்னை ஏமாற்றி, என் மகள்களை போர் கைதிகளைப்போல் கொண்டு வந்திருக்கிறாயே!
27
எனக்கு அறிவிக்காமல் திருட்டுத்தனமாய் ஓடிவந்து என்னை ஏமாற்றியது ஏன்? நீ ஏன் எனக்குச் சொல்லவில்லை? சொல்லியிருந்தால் மேளதாளம், யாழிசையோடு கூடிய பாடலுடனும் மகிழ்ச்சியாய் உன்னை வழியனுப்பியிருப்பேனே.
28
என் பேரப்பிள்ளைகளையும், மகள்களையும் முத்தமிட்டு வழியனுப்பக்கூட நீ விடவில்லை. நீ மூடத்தனமாய் நடந்துகொண்டாய்.
29
உனக்குத் தீங்குசெய்ய என்னால் இயலும்; ஆனால், கடந்த இரவு உன் தகப்பனுடைய இறைவன், ‘நீ யாக்கோபுடன் நன்மையானவற்றையோ, தீமையானவற்றையோ பேசாதபடி கவனமாயிரு’ என்று எனக்குச் சொன்னார்.
30
நீ உன் தகப்பனுடைய வீட்டிற்குப் போவதற்கு ஆவலாயிருந்தபடியாலேயே இப்படிப் புறப்பட்டு வந்துவிட்டாய். ஆனால், ஏன் என் வீட்டுச் சிலைகளைத் திருடினாய்?” என்று கேட்டான்.
31
அதற்கு யாக்கோபு லாபானிடம், “உம்முடைய மகள்களை என்னிடமிருந்து பலாத்காரமாய் எடுத்துப்போடுவீரென்று பயந்தே இப்படிச் செய்தேன்.
32
ஆனால் உம்முடைய வீட்டுச் சிலைகளை வைத்திருப்பவன் எவனையாவது நீர் கண்டுபிடித்தால், அவன் உயிரோடிருக்கமாட்டான். உம்முடைய பொருள்களில் ஏதாவது என்னிடத்திலிருக்கிறதா என்று நீர் எனது உறவினர் முன்னிலையில் சோதித்துப்பாரும்; அப்படியிருந்தால், அவற்றை எடுத்துக்கொள்ளும்” என்றான். ராகேல் வீட்டுச் சிலைகளைத் திருடியதை யாக்கோபு அறியாதிருந்தான்.
33
அப்பொழுது லாபான் யாக்கோபின் கூடாரத்துக்குள்ளும், லேயாளின் கூடாரத்துக்குள்ளும், இரண்டு பணிப்பெண்களின் கூடாரத்துக்குள்ளும் தேடிப்பார்த்தும் ஒன்றையும் காணவில்லை. அவன் லேயாளின் கூடாரத்துக்குள்ளிருந்து வெளியே வந்து, பின் ராகேலின் கூடாரத்துக்குள் போனான்.
34
அங்கு ராகேல், லாபானின் வீட்டுச் சிலைகளை ஒட்டகத்தின் சேணத்திற்குள் வைத்து அதன்மேல் உட்கார்ந்திருந்தாள். லாபான் கூடாரம் முழுதும் தேடியும் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
35
ராகேல் தன் தகப்பனிடம், “ஐயா, உமக்குமுன் நான் எழுந்து நிற்கவில்லையென்று கோபிக்க வேண்டாம்; பெண்களுக்குரிய மாதவிடாய் எனக்கு உண்டாயிருக்கிறது” என்றாள். ஆகவே அவன் தேடியும் வீட்டுச் சிலைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
36
யாக்கோபு கோபமடைந்து லாபானுடன் வாதாடி, “நான் செய்த குற்றமென்ன? நீர் என்னைத் துரத்தி வருவதற்கு நான் செய்த பாவமென்ன?
37
இப்பொழுது என் வீட்டுப் பொருட்களை எல்லாம் சோதித்துப் பார்த்தீரே; உமது வீட்டுக்குரிய பொருட்களில் எதையேனும் கண்டெடுத்தீரோ? அவற்றை உமக்கும் எனக்கும் உறவினர்களான, இவர்கள்முன் இங்கே வையும்; இவர்கள் நம் இருவருக்கும் இடையில் நியாயம் தீர்க்கட்டும்.
38
“நான் உம்முடன் இருபது வருடங்கள் இருந்துவிட்டேன். உம்முடைய செம்மறியாடுகளும், வெள்ளாடுகளும், சினையழியவில்லை; உமது மந்தையிலிருந்த கடாக்களை நான் சாப்பிடவுமில்லை.
39
காட்டு மிருகங்களால் கிழித்துக் கொல்லப்பட்டவற்றை உம்மிடத்தில் கொண்டுவராமல், அந்த அழிவை நானே ஈடுசெய்தேன்; ஆனால் நீரோ இரவிலோ, பகலிலோ திருட்டுப்போன எவ்வேளையிலும் என்னிடமிருந்தே நஷ்டஈட்டைக் கேட்டு வாங்கிக்கொண்டீர்.
40
பகலில் வெப்பமும், இரவில் குளிரும் என்னை வாட்டின, என் கண்கள் நித்திரையின்றி இருந்தன. இதுவே என் நிலைமையாய் இருந்தது.
41
இவ்விதமாக நான் உமது வீட்டில் இருபது வருடங்கள் இருந்தேன். உமது இரு மகள்களுக்காக பதினாலு வருடங்களும், உம்முடைய மந்தைக்காக ஆறு வருடங்களும் உம்மிடம் வேலைசெய்தேன். நீரோ என் கூலியை பத்துமுறை மாற்றினீர்.
42
என் தகப்பனின் இறைவனும், ஆபிரகாமின் இறைவனும், ஈசாக்கின் பயபக்திக்கு உரியவருமானவர் என்னோடு இருந்திராவிட்டால், நீர் என்னை நிச்சயமாய் வெறுங்கையுடனேயே அனுப்பியிருப்பீர். ஆனால் இறைவனோ என் கஷ்டங்களையும், என் கையின் வேலைகளையும் கண்டு, நேற்றிரவு உம்மைக் கண்டித்தார்” என்றான்.
43
அதற்கு லாபான் யாக்கோபிடம், “இந்தப் பெண்கள் என் மகள்கள், இந்தப் பிள்ளைகள் என் பிள்ளைகள், இந்த மந்தையும் என்னுடையதே. நீ காண்பவையெல்லாம் என்னுடையவை. ஆனாலும் என் மகள்களுக்காகவும், அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்காகவும் நான் என்ன செய்யமுடியும்?
44
இப்பொழுது நீ வா; நீயும் நானும் ஒரு உடன்படிக்கை செய்துகொள்வோம். அது நம் இருவருக்கும் இடையே சாட்சியாக இருக்கட்டும்” என்றான்.
வேதாகம உரை: Biblica® Open Indian Tamil Contemporary Version™, © 2005, 2020, 2022 Biblica, Inc. · CC BY-SA 4.0“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc., used with permission.
Settings