ஆதியாகமம் 31:1-16
1
“யாக்கோபு எங்கள் தகப்பனின் சொத்துக்களையெல்லாம் எடுத்துக்கொண்டான் என்றும், எங்கள் தகப்பனுக்குச் சொந்தமானவற்றிலிருந்தே யாக்கோபு செல்வந்தனாகிவிட்டான்” என்றும் லாபானின் மகன்கள் பேசிக்கொள்வதை யாக்கோபு கேள்விப்பட்டான்.
2
அத்துடன் தன்னைக் குறித்த லாபானின் அணுகுமுறை முன்புபோல் இல்லாதிருப்பதையும் யாக்கோபு கவனித்தான்.
3
அப்பொழுது யெகோவா யாக்கோபிடம், “நீ உன் தந்தையரின் நாட்டிற்கும் உன் உறவினரிடத்திற்கும் திரும்பிப்போ; நான் உன்னுடன் இருப்பேன்” என்றார்.
4
எனவே யாக்கோபு ராகேலையும், லேயாளையும் தன் மந்தைகள் இருக்கும் வயல்வெளிக்கு வரும்படி சொல்லியனுப்பினான்.
5
அவன் அவர்களிடம், “உங்கள் தகப்பனின் அணுகுமுறை என்னிடம் முன்போல் இல்லையென நான் காண்கிறேன்; ஆனால் என் தந்தையின் இறைவன் என்னுடன் இருக்கிறார்.
6
நான் உங்கள் தகப்பனுக்காக என் முழுப்பெலத்துடனும் வேலைசெய்தேன் என்பது உங்களுக்குத் தெரியும்.
7
ஆனால் உங்கள் தகப்பனோ பத்துமுறை என் கூலியை மாற்றி என்னை ஏமாற்றினார். அப்படியிருந்தும், அவர் எனக்குத் தீங்குசெய்ய இறைவன் அவரை அனுமதிக்கவில்லை.
8
‘கலப்பு நிற ஆடுகள் உன்னுடைய கூலியாயிருக்கும்’ என்று அவர் சொன்னபோது, மந்தையிலுள்ள ஆடுகளெல்லாம் கலப்புநிறக் குட்டிகளை ஈன்றன. ‘வரியுடைய ஆடுகள் உன்னுடைய கூலியாயிருக்கும்’ என்று அவர் சொன்னபோது, மந்தையிலுள்ள ஆடுகளெல்லாம் வரியுள்ள குட்டிகளையே ஈன்றன.
9
இவ்விதமாக இறைவன் உங்கள் தகப்பனின் வளர்ப்பு மிருகங்களை எல்லாம் எடுத்து அவற்றை எனக்குக் கொடுத்துவிட்டார்.
10
“ஒருமுறை ஆடுகள் சினைப்படும் காலத்தில் நான் ஒரு கனவு கண்டேன்; அதில் நான் ஏறெடுத்துப் பார்க்கும்பொழுது மந்தையிலுள்ள ஆடுகளுடன் புணரும் ஆட்டுக்கடாக்கள் வரியும், கலப்பு நிறமும், புள்ளிகளும் உள்ளதாயிருந்தன.
11
இறைவனின் தூதன் அந்தக் கனவில், ‘யாக்கோபே’ என்று என்னைக் கூப்பிட்டார். ‘இதோ, நான் இருக்கிறேன்’ என்று நான் பதிலளித்தேன்.
12
அப்பொழுது அவர் என்னிடம், ‘இதோ பார், மந்தையிலுள்ள ஆடுகளுடன் புணரும் ஆட்டுக்கடாக்கள் எல்லாம் வரிகளும், கலப்பு நிறமும், புள்ளிகளுமுள்ளனவாய் இருக்கின்றன. ஏனெனில் உனக்கு லாபான் செய்வதெல்லாவற்றையும் நான் கண்டேன்.
13
நீ ஒரு தூணை அபிஷேகம் செய்து, என்னுடன் பொருத்தனை செய்துகொண்ட இடமான, பெத்தேலின் இறைவன் நானே; உடனே இந்த நாட்டைவிட்டுப் புறப்பட்டு, உன் சொந்த நாட்டிற்குத் திரும்பிப்போ’ என்றார்” என்றான்.
14
அதற்கு ராகேலும் லேயாளும் யாக்கோபிடம், “எங்கள் தகப்பனுடைய குடும்பச் சொத்தின் உரிமையிலே எங்களுக்கு இன்னும் பங்கு உண்டோ?
15
அவர் எங்களை அந்நியராய் நினைக்கவில்லையா? எங்களை விற்றது மட்டுமல்ல; எங்களுக்காகச் செலுத்தப்பட்ட கூலியையும் அபகரித்து விட்டாரே!
16
இறைவன் எங்கள் தகப்பனிடமிருந்து எடுத்துக்கொண்ட செல்வங்களெல்லாம், நிச்சயமாக எங்களுக்கும் எங்கள் பிள்ளைகளுக்குமே சொந்தம். ஆகையால் இறைவன் உமக்குச் சொன்னவற்றையெல்லாம் செய்யும்” என்றார்கள்.
Settings