Skip to content

Tyre பற்றிய பைபிள் வசனங்கள்

113 வசனங்கள் · 47 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. அவர்கள் தங்கள் குரல்களை உயர்த்தி உன்னிமித்தம் மனங்கசந்து அழுவார்கள். அவர்கள் தங்கள் தலைகளில் புழுதியை வாரிப்போட்டுக்கொண்டு சாம்பலிலே புரளுவார்கள்.

  2. அவர்கள் உன்னிமித்தம் துக்கித்து, தங்கள் தலைகளை மொட்டையடித்து, துக்கவுடைகளை உடுத்துவார்கள். அவர்கள் உனக்காக ஆத்தும வேதனையுடன் அழுது மனக்கசப்புடன் துக்கங்கொண்டாடுவார்கள்.

  3. அவர்கள் உனக்காக துக்கங்கொண்டாடுகையில், “கடலால் சூழப்பட்ட தீருவைப்போல் எப்பொழுதாவது அமைதியாக்கப்பட்டது யார்?” என, உன்னைக்குறித்துப் புலம்புவார்கள்.

  4. உன் வர்த்தகப் பொருள்கள் கடல்களுள் வழியாகச் சென்றபோது, நீ அநேக நாடுகளைத் திருப்திசெய்தாய்; உன் பெரும் செல்வத்தாலும் உனது பொருட்களாலும் பூமியின் அரசர்களைச் செல்வந்தராக்கினாய்.

  5. இப்பொழுதோ நீ தண்ணீரின் ஆழங்களில் கடலினால் சிதறடிக்கப் பட்டிருக்கிறாய். உன் பொருட்களும், உனது கூட்டமும் உன்னோடு அமிழ்ந்து போயின!

  6. கரையோரங்களில் வாழ்கின்ற எல்லோரும், உன்னைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்கள், அவர்களுடைய அரசர்களோ திகிலினால் நடுங்குகிறார்கள்! அவர்களின் முகங்கள் பயத்தினால் வெளிறிப்போகின்றன.

  7. நாடுகளின் வர்த்தகர்கள் உன்னைப் பார்த்து கேலி செய்கின்றார்கள்; உனக்கு ஒரு பயங்கர முடிவு வந்துவிட்டது! நீ இனி ஒருபோதும் இருக்கமாட்டாய்.’ ”

  8. “மனுபுத்திரனே, தீருவின் ஆளுநனிடம் நீ சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: “ ‘நீ உன் இருதயத்தில், “நான் ஒரு தெய்வம்; கடல்களின் நடுவே ஒரு தெய்வ அரியணையிலே நான் வீற்றிருக்கிறேன்” என பெருமையில் பேசுகிறாய். ஒரு தெய்வத்தைப்போன்ற ஞானியென உன்னை நீ எண்ணிக்கொண்டாலும் நீ மனிதனேயன்றி தெய்வமல்ல;

  9. தானியேலைவிட நீ அறிவாளியோ? உனக்கு மறைவான இரகசியம் இல்லையோ?

  10. நீ உன் ஞானத்தினாலும், விளங்கும் ஆற்றலினாலும் உனக்காகச் செல்வத்தைச் சம்பாதித்தாய். தங்கத்தையும் வெள்ளியையும் உன் களஞ்சியங்களில் குவித்தாய்!

  11. வர்த்தகத்தில் உனக்குள்ள திறமையினால் உன் செல்வத்தை நீ பெருக்கிக்கொண்டாய்: உன் செல்வத்தால் உன் இருதயமும் மேட்டிமையடைந்தது.

  12. “ ‘ஆகையால், ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: “ ‘நீ ஒரு தெய்வத்தைப்போல் ஞானமுள்ளவன் என எண்ணியபடியால்,

  13. நாடுகளில் இரக்கமே இல்லாத பிறநாட்டினரை நான் உனக்கு விரோதமாகக் கொண்டுவரப் போகிறேன். அவர்கள் உன் அழகுக்கும் அறிவுக்கும் விரோதமாகத் தங்கள் வாள்களை உருவி, துலங்குகின்ற உன் சிறப்பைக் குத்திப்போடுவார்கள்.

  14. அவர்கள் உன்னைக் குழியிலே தள்ளுவார்கள். நீ கடல்களின் நடுவே ஒரு அவலமான சாவுக்கு உள்ளாவாய்!

  15. உன் அழகினிமித்தம் உன் இருதயம் பெருமைகொண்டது, உன் செல்வச் சிறப்பின் காரணத்தால் உன் ஞானத்தை சீர் கெடுத்துக்கொண்டாய். ஆதலால் உன்னைப் பூமியை நோக்கி எறிந்துவிட்டேன். அரசர்கள் முன் உன்னைக் காட்சிப் பொருளாக்கினேன்.

  16. உன் அநேக பாவங்களாலும், அநீதியான வர்த்தகத்தினாலும் பரிசுத்த இடங்களின் தூய்மையை நீ கெடுத்தாய். ஆகையால் நான் ஒரு நெருப்பை உன்னிலிருந்து புறப்படச் செய்தேன். அது உன்னைச் சுட்டெரித்தது. மேலும், உன்னைப் பார்த்துக்கொண்டிருந்த எல்லோருடைய பார்வையிலும் பூமியிலே உன்னைச் சாம்பலாக்கினேன்.

  17. “மனுபுத்திரனே, பாபிலோன் அரசனாகிய நேபுகாத்நேச்சார் தனது இராணுவத்தைத் தீருவுக்கு விரோதமாய் அனுப்பி, கடும் தாக்குதலை மேற்கொண்டான். ஒவ்வொருவனின் தலையும் மொட்டையாக்கப்பட்டு, ஒவ்வொருவனின் தோலும் புண்ணாகும்வரை தோலுரிக்கப்பட்டன. அப்படியிருந்தும் அவனும் அவனுடைய இராணுவமும், தீருவுக்கு எதிராக நடத்திய படையெடுப்பின் பலனைப் பெறவில்லை.”

  18. ஆகையால் ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே, நான் எகிப்தை பாபிலோனின் அரசனாகிய நேபுகாத்நேச்சாருக்குக் கையளிக்கப்போகிறேன். அதன் செல்வத்தை அவன் எடுத்துக்கொண்டு போவான். அவன் தன் இராணுவங்களுக்குக் கூலியாக நாட்டைச் சூறையாடிக் கொள்ளையிடுவான்.

  19. அவனும் அவனுடைய இராணுவமும் அதை எனக்காகச் செய்தபடியினால், அம்முயற்சிக்கு வெகுமதியாக எகிப்தை அவனுக்குக் கொடுத்திருக்கிறேன் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.

  20. “தீரு, சீதோன் பட்டணங்களே, பெலிஸ்தியரின் எல்லா பிரதேசங்களே, எனக்கு விரோதமாய் உங்களுக்கு என்ன இருக்கிறது? நான் ஏதாவது செய்ததற்காகவா நீங்கள் என்னைப் பழிவாங்குகிறீர்கள்? அப்படி நீங்கள் என்னைப் பழிவாங்கினால், நான் தாமதமின்றி விரைவாக நீங்கள் செய்தவற்றை உங்கள் சொந்த தலைமேலேயே திருப்புவேன்.

  21. என் வெள்ளியையும் என் தங்கத்தையும் நீங்கள் எடுத்து, என் சிறந்த திரவியங்களையும் அள்ளிக்கொண்டு, உங்கள் கோயில்களுக்குப் போனீர்கள்.

  22. யூதா, எருசலேம் மக்களை அவர்கள் தாய்நாட்டிலிருந்து தூரமாய் அனுப்புவதற்காக அவர்களைக் கிரேக்கருக்கு நீங்கள் விற்றுவிட்டீர்கள்.

  23. “இதோ, நீங்கள் விற்ற இடங்களிலிருந்து அவர்களை மீண்டும் எழுப்பப்போகிறேன். நீங்கள் செய்ததை உங்கள் தலைகள் மேலேயே திருப்புவேன்.

  24. உங்கள் மகன்களையும் மகள்களையும் யூதா மக்களுக்கு விற்பேன். அவர்கள் அவர்களை தூரதேசத்திலுள்ள நாட்டாரான சபேயருக்கு விற்பார்கள்.” இதை யெகோவாவே சொன்னார்.

  25. யெகோவா சொல்வது இதுவே: “தீருவினுடைய மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், என் கோபத்தை நான் விலக்கமாட்டேன். ஏனென்றால் சகோதர உடன்படிக்கையை உதாசீனம் செய்து, சிறைப்பிடிக்கப்பட்ட முழுச்சமுதாயத்தையும் ஏதோமுக்கு விற்றார்களே.