Skip to content

Tyre பற்றிய பைபிள் வசனங்கள்

113 வசனங்கள் · 47 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. கல்தேயரின் நாட்டைப் பார், அதன் மக்கள் இப்பொழுது ஒரு பொருட்டாய் எண்ணப்படாதிருக்கிறார்களே! இப்பொழுது அசீரியர் அந்நாட்டைப் பாலைவனப் பிராணிகளின் இருப்பிடமாக்கி விட்டார்கள். முற்றுகைக் கோபுரங்களை எழுப்பி, அதன் கோட்டைகளை வெறுமையாக்கிப் பாழிடமாக்கி விட்டார்கள்.

  2. தர்ஷீசின் கப்பல்களே, அலறுங்கள்; உங்கள் கோட்டை அழிக்கப்பட்டது!

  3. அந்த நாளிலே, தீரு எழுபது வருடங்களுக்கு மறக்கப்பட்டுவிடும்; இதுவே ஒரு அரசனின் ஆயுட்காலம். ஆனாலும் அந்த எழுபது வருடங்களின் முடிவில், தீருவின் நிலைமை வேசியின் பாடலில் உள்ளபடியே இருக்கும்:

  4. “மறக்கப்பட்ட வேசியே, வீணையை எடு, பட்டணத்தைச்சுற்றி நட; உன்னை நினைவுகூரும்படியாக வீணையை நன்றாக வாசித்து, அநேக பாடல்களைப் பாடு.”

  5. யெகோவா தீருவுக்கு எழுபது வருட முடிவில் தண்டனை கொடுப்பார். அவள் மறுபடியும் தனது வேசித்தன வாழ்வுக்கே திரும்புவாள். பூமியிலுள்ள எல்லா அரசுகளுடனும் தன் வேசித்தொழிலைச் செய்வாள்.

  6. ஆயினும் அவளது இலாபமும், வருமானமும் யெகோவாவுக்கென்று ஒதுக்கி வைக்கப்படும். அவை சேமித்து வைக்கப்படவோ, பதுக்கி வைக்கப்படவோ மாட்டாது. அவளுடைய அந்த இலாபம் யெகோவாவுக்கு முன்பாக இருப்போருக்கான போதிய அளவு உணவுக்கும், சிறந்த உடைகளுக்குமே செலவிடப்படும்.

  7. தீருவிலும் சீதோனிலும் இருக்கும் எல்லா அரசர்களையும் கடலுக்கு அப்பால் உள்ள கரையோர நாடுகளின் அரசர்களையும் குடிக்கப்பண்ணினேன்.

  8. யெகோவா என்னிடம், “நீ உனக்குக் கயிறுகளையும் நுகங்களையும், உண்டாக்கி, அவைகளை உன் கழுத்தில் போட்டுக்கொள்.

  9. பின்பு யூதாவின் அரசன் சிதேக்கியாவிடம் எருசலேமுக்கு வந்திருக்கும் தூதுவர்கள் மூலமாக, ஏதோம், மோவாப், அம்மோன், தீரு, சீதோன் ஆகிய நாடுகளின் அரசர்களுக்கு ஒரு செய்தி அனுப்பு.

  10. இப்பொழுது உங்கள் நாடுகள் எல்லாவற்றையும், பாபிலோன் அரசனும் எனது பணியாளனுமான நேபுகாத்நேச்சாரின் கையில் கொடுப்பேன். காட்டு மிருகங்களையும் அவனுக்குக் கீழ்ப்படுத்துவேன்.

  11. ஆகையால், ‘நீங்கள் பாபிலோன் அரசனுக்குப் பணி செய்யமாட்டீர்கள்’ என்று சொல்லுகிற இறைவாக்கினருக்கும், குறிசொல்லுகிறவர்களுக்கும், கனவுகளுக்கு விளக்கம் கூறுவோருக்கும், செத்தவர்களின் ஆவியுடன் பேசுகிறவர்களுக்கும், சூனியக்காரருக்கும் நீங்கள் செவிசாய்க்க வேண்டாம்.

  12. “மனுபுத்திரனே, எருசலேமைக்குறித்து, ‘ஆகா, நாடுகளுக்குரிய வாசல் உடைந்திருக்கிறது. அதன் கதவுகள் திறந்து ஊசலாடுகின்றன. இப்பொழுது அவள் பாழானாள்: நான் செழிப்பேன்’ என்று தீரு சொல்லியிருக்கிறாள்.”

  13. ஆகவே ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. தீருவே நான் உனக்கு விரோதமாக இருக்கிறேன். கடல் தன் அலைகளை எழும்பப்பண்ணுவதுபோல், நான் அநேக நாடுகளை உனக்கு விரோதமாய்க் கொண்டுவருவேன்.

  14. அவர்கள் தீருவின் மதில்களை அழித்து, அவர்களுடைய கோபுரங்களை வீழ்த்தி விடுவார்கள். நான் அவளது இடிபாடுகளை வழித்தெடுத்து, அவளை ஒரு வெறும் பாறையாக்கிவிடுவேன்.

  15. கடலின் நடுவே ஒரு தீவாய் இருக்கும் குடியேற்றமில்லாத அவள், மீன் வலைகளை உலர்த்தும் இடமாவாள். நானே இதைச் சொன்னேன், என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். அவள் நாடுகளின் கொள்ளைப் பொருளாவாள்.

  16. “ஆகவே ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நான் அரசருக்கெல்லாம் அரசனான பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரை குதிரைகள், தேர்கள், குதிரைவீரர்கள், பெரும் இராணுவப்படை ஆகியவற்றோடு வடக்கேயிருந்து தீருவுக்கு விரோதமாய்க் கொண்டுவரப் போகிறேன்.”

  17. அவன் நாட்டின் உட்பகுதியிலுள்ள உங்கள் குடியிருப்புகளை வாளினால் சூறையாடுவான். அவன் உனக்கு விரோதமாய் முற்றுகையிட்டு, உன் மதில்களுக்கு எதிராக முற்றுகை அரணைக் கட்டி, உனக்கு விரோதமாய் தனது கேடயங்களை உயர்த்துவான்.

  18. அவன் உன் மதில்களுக்கு எதிராக இடிக்கும் இயந்திரங்களின் முனைகளை வைத்து, தனது போராயுதங்களினால் உன் கோபுரங்களைத் தகர்ப்பான்.

  19. அவனுடைய குதிரைகள் அநேகமாயிருப்பதனால், அவை எழுப்பும் தூசி உன் நகரத்தையும் மூடத்தக்க அளவு இருக்கும். மதில்கள் உடைக்கப்பட்ட பட்டணத்திற்குள் மனிதர் நுழைவதுபோல், அவன் உன் வாசலில் நுழைவான். அப்பொழுது போர்க்குதிரைகளும், வண்டிகளும், தேர்களும் இரைகிற சத்தத்தினால் உன் மதில்கள் அதிரும்.

  20. அவனுடைய குதிரைகளின் குளம்புகள் உன் வீதிகளையெல்லாம் மிதிக்கும். அவன் உன் மக்களை வாளினால் கொல்வான். உன் பலத்த தூண்களும் நிலத்தில் சாயும்.

  21. அவர்கள் உன் செல்வங்களைச் சூறையாடி, உன் வியாபாரப் பொருட்களைக் கொள்ளையிடுவார்கள். அவர்கள் உன் மதில்களை இடித்து, உன் அருமையான வீடுகளை நொறுக்கி, அவைகளிலுள்ள கற்களையும், மரங்களையும் அவைகளின் இடிபாடுகளையும் கடலுக்குள் எறிந்துவிடுவார்கள்.

  22. உன் சத்தமான பாடல்களுக்கு நான் ஒரு முடிவு வரப்பண்ணுவேன். உன் வீணையின் இசை இனிமேல் கேட்கப்படமாட்டாது.

  23. நான் உன்னை ஒரு வெறுமையான பாறையாக்குவேன். நீ மீன் பிடிக்கும் வலைகளை உலர்த்தும் இடமாக மாறுவாய். நீ ஒருபோதும் திரும்பக் கட்டப்படமாட்டாய். ஏனெனில், யெகோவாவாகிய நானே இதைச் சொன்னேன் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.

  24. “ஆண்டவராகிய யெகோவா தீருவுக்குக் கூறுவது இதுவே. உன்னில் காயப்பட்டோர் அழுகிறபோதும், படுகொலைகள் நடக்கும்போதும், நீ விழும் சத்தத்தினால் கரையோர நாடுகள் நடுங்காதோ?

  25. அப்பொழுது கடற்கரை வாசிகளின் இளவரசர்கள் அனைவரும் தங்கள் அரியணைகளிலிருந்து இறங்கி, தங்கள் சித்திரத்தையலாடைகளை கழற்றி, தங்கள் வேலைப்பாடுகளமைந்த உடைகளையும் கழற்றிப்போடுவார்கள். திகிலை உடையாக உடுத்திய வண்ணம் அவர்கள் நிலத்தில் உட்காருவார்கள். ஒவ்வொரு வினாடியும், நடுக்கத்தோடு உன்னைப் பார்த்து அதிர்ச்சியடைவார்கள்.