Skip to content

Judgments பற்றிய பைபிள் வசனங்கள்

271 வசனங்கள் · 91 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. “இப்பொழுது பாருங்கள், நான், நானே அவர்! என்னைவிட வேறு தெய்வமில்லை. நானே கொல்கிறேன்; நானே உயிர்ப்பிக்கிறேன். நானே காயப்படுத்தினேன், நானே குணப்படுத்துவேன். என் கையிலிருந்து விடுவிக்க ஒருவராலும் முடியாது.”

  2. நான் என் கைகளை வானத்திற்கு உயர்த்தி அறிவிக்கிறதாவது: “நான் என்றென்றும் வாழ்வது நிச்சயம்போல,

  3. பளபளக்கும் என் வாளை நான் கூராக்கி, நீதி வழங்கும்படி என் கை அதைப் பற்றிக்கொள்ளும்போது, என் எதிரிகளிடம் பழிவாங்குவேன்; என்னை வெறுத்தவர்களுக்குப் பதில் செய்வேன்.

  4. செத்தும், சிறைப்பட்டும் போனவர்களின் இரத்தத்தினால் நான் என் அம்புகளை வெறிகொள்ளச் செய்வேன். எனது வாளோ அவர்களின் சதையைத் தின்னும்; அது பகைவரின் தலைவர்களின் தலைகளை வெட்டி வீழ்த்தும் என்பதும் நிச்சயம்.”

  5. நாடுகளே, அவருடைய மக்களோடு சேர்ந்து களிகூருங்கள். அவர் தன் பணியாட்களின் இரத்தத்துக்காகப் பழிவாங்குவார். அவர் தமது பகைவரைப் பழிவாங்கி, தமது நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் பாவநிவிர்த்திசெய்வார்.

  6. ஆனால் இஸ்ரயேலர் யெகோவாவை நோக்கி அழுதபோது, அவர் அவர்களை விடுவிப்பதற்காக விடுதலைவீரனை எழுப்பினார். கேனாசின் மகனும் காலேபின் தம்பியுமான ஒத்னியேலே அவன். அவனே அவர்களை விடுவித்தான்.

  7. யெகோவாவின் ஆவியானவர் அவன்மேல் வந்தார். அதனால் அவன் இஸ்ரயேலருக்கு நீதிபதியாகி யுத்தத்திற்குப் போனான். யெகோவா மெசொப்பொத்தோமியாவின் அரசன் கூசான் ரிஷாத்தாவை ஒத்னியேல் கையில் கொடுத்தார். ஒத்னியேல் அவனைத் தோற்கடித்தான்.

  8. கேனாசின் மகன் ஒத்னியேல் இறக்கும்வரை நாற்பது வருடங்கள் நாடு சமாதானமாக இருந்தது.

  9. அவர்கள் தாங்கள் உள்ளே சென்று கதவைப் பூட்டிக்கொண்டு, அந்த கோபுரத்தின் கூரையிலே ஏறினார்கள். அபிமெலேக்கு கோபுரத்துக்குச் சென்று அதைத் தாக்கினான். அவன் அந்த கோபுரத்திற்கு நெருப்பு மூட்டுவதற்காக அதற்கு அருகில் வந்தான்.

  10. அப்பொழுது மேலே இருந்த ஒரு பெண் திரிகைக்கல்லை அவனுடைய தலைக்குமேல் எறிய அவனுடைய மண்டையோடு வெடித்தது.

  11. அப்பொழுது அபிமெலேக்கு தன் ஆயுததாரியை அவசரமாக அழைத்து, “உனது வாளை எடுத்து என்னைக் கொன்றுவிடு. ‘ஒரு பெண் அவனைக் கொன்றாள்’ என்று எப்பொழுதும் யாரும் சொல்லக்கூடாது” என்றான். எனவே அந்த வேலைக்காரன் அவனை வாளால் ஊடுருவக் குத்தினான். அப்பொழுது அவன் இறந்தான்.

  12. அபிமெலேக்கு இறந்துபோனதை அறிந்த இஸ்ரயேலர் தங்கள் வீடுகளுக்குப் போனார்கள்.

  13. அபிமெலேக்குத் தன் எழுபது சகோதரர்களைக் கொன்று தன் தந்தைக்குச் செய்த கொடிய செயலுக்காக, இறைவன் இவ்வாறு அவனைத் தண்டித்தார்.

  14. சீகேம் மனிதர் செய்த கொடுமைகளுக்காக இறைவன் அவர்களையும் தண்டித்தார். யெருபாகாலின் மகன் யோதாமின் சாபம் அவர்கள்மேல் வந்தது.

  15. அப்பொழுது இறைமனிதன் ஒருவன் ஏலியிடம் வந்து, “யெகோவா சொல்வது இதுவே: ‘உன் தகப்பன் குடும்பத்தார் எகிப்தில் பார்வோனுக்கு அடிமைகளாய் இருந்தபோது, நான் என்னை அவர்களுக்குத் தெளிவாக வெளிப்படுத்தவில்லையா?

  16. இஸ்ரயேலின் எல்லா கோத்திரங்களிலுமிருந்து உன் தகப்பனை எனது பலிபீடத்தின்மேல் செல்லவும், தூபங்காட்டவும், என் முன்னிலையில் ஏபோத்தை அணியவும், ஆசாரியனாக இருக்கும்படி தெரிந்துகொண்டேன். இஸ்ரயேலரால் செலுத்தப்பட்ட நெருப்பின் காணிக்கைகளையும் உன் தகப்பன் குடும்பத்திற்கு நான் கொடுத்தேன்.

  17. எனது குடியிருப்புக்களுக்கென நான் வகுத்த பலிகளையும், காணிக்கைகளையும் நீங்கள் ஏன் இகழ்கிறீர்கள்? என் மக்களாகிய இஸ்ரயேலர் செலுத்திய எல்லாக் காணிக்கைகளிலும் சிறந்தவற்றை உனது மகன்களுக்குக் கொடுத்து, அவர்களைக் கொழுக்கப்பண்ணுவதால் அவர்களை என்னிலும் மேன்பட்டவர்களாக ஏன் மதிக்கிறாய்?’

  18. “எனவே இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா அறிவிக்கிறதாவது, ‘உன் குடும்பத்தாரும், உன் தகப்பன் குடும்பத்தாரும் என்றென்றைக்கும் என் முன்னிலையில் எனக்குப் பணிசெய்வீர்கள்’ என்று வாக்குப்பண்ணினேன்; ஆனால் இப்பொழுது யெகோவா அறிவிக்கிறதாவது: நான் முன் சொன்னபடியே இது நடக்காது! என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம்பண்ணுவேன். என்னை அவமதிக்கிறவர்கள் வெறுக்கப்படுவார்கள்.

  19. உனது வல்லமையையும், உனது தகப்பன் குடும்பத்தாரின் வல்லமையையும் நான் குறைக்கும் காலம் வருகிறது. எனவே உனது பரம்பரையில் ஒரு முதியவனும் இருக்கமாட்டான்.

  20. அப்பொழுது என் உறைவிடத்தில் நீ துன்பத்தைக் காண்பாய். இஸ்ரயேலருக்கு நன்மை செய்யப்பட்டாலும், உன் குடும்பத்தில் முதியவன் ஒருவனும் ஒருபோதும் இருக்கமாட்டான்.

  21. என் பலிபீடத்திலிருந்து, நான் நீக்காத உன் குடும்பத்தவரில் ஒவ்வொருவரும் தங்கள் கண்களைக் கண்ணீரால் மூடவும், தங்கள் இருதயத்தைத் துக்கப்படுத்தவுமே தப்பவிடப்படுவீர்கள். ஆனாலும் உன் சந்ததியினர் ஒவ்வொருவனும் இளவயதில் இறந்துபோவான்.

  22. “ ‘உன் மகன்களான ஒப்னிக்கும், பினெகாசுக்கும் நேரிடுவது உனக்கு ஒரு அடையாளமாயிருக்கும். அவர்கள் இருவரும் ஒரே நாளில் சாவார்கள்.

  23. அதன்பின்பு நான் என் மன எண்ணப்படியும் விருப்பப்படியும் செய்யக்கூடிய ஒரு உண்மையுள்ள ஆசாரியனை ஏற்படுத்துவேன். அவன் குடும்பத்தை நிலைநிறுத்துவேன்; அவன் நான் அபிஷேகம் பண்ணினவருக்கு முன்பாக எப்பொழுதும் பணிசெய்வான்.

  24. அப்பொழுது உன் வழித்தோன்றலில் மீதியாயிருப்பவன் ஒவ்வொருவனும் அவன் முன்வந்து பணிந்து ஒரு வெள்ளிக் காசுக்காகவும், ஒரு துண்டு அப்பத்துக்காகவும் கெஞ்சி, “நான் சாப்பிடுவதற்கு உணவு கிடைக்கும்படி ஆசாரியனுக்குரிய ஏதாவது ஒரு பணியை எனக்குக் கொடுக்கவேண்டும்” என்று கேட்பான்’ என்றான்.”

  25. அப்படியே பெலிஸ்தியர் போரிட்டார்கள். இஸ்ரயேலர் முறியடிக்கப்பட்டு அனைவரும் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள். மிகப்பெரிய அழிவு ஏற்பட்டது; இஸ்ரயேலர் காலாட்படையினரில் முப்பதாயிரம்பேரை இழந்தார்கள்.