உள்ளடக்கத்திற்குச் செல்க

Ark of the Covenant பற்றிய பைபிள் வசனங்கள்

88 வசனங்கள் · 37 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. வண்டி பெத்ஷிமேஷ் ஊரானான யோசுவா என்பவனது வயலுக்கு வந்ததும் அங்கே ஒரு பெரிய கற்பாறையருகே நின்றது. அந்த மக்கள் வண்டியின் மரத்தை வெட்டி அதைக்கொண்டு அந்த பசுக்களை யெகோவாவுக்குத் தகன காணிக்கையாகச் செலுத்தினார்கள்.

  2. லேவியர் யெகோவாவின் பெட்டியையும் அதனோடு வைக்கப்பட்டிருந்த தங்கப் பொருட்களுள்ள பெட்டியையும் எடுத்து அந்தப் பெரிய பாறைமேல் வைத்தார்கள். பெத்ஷிமேஷின் மக்களும் அன்றையதினம் யெகோவாவுக்குத் தகன காணிக்கைகளையும், பலிகளையும் செலுத்தினார்கள்.

  3. இவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த ஐந்து பெலிஸ்திய ஆளுநர்களும் அன்றைய தினமே எக்ரோனுக்குத் திரும்பிப் போனார்கள்.

  4. அஸ்தோத், காசா, அஸ்கலோன், காத், எக்ரோன் ஆகிய ஒவ்வொரு பட்டணத்திற்கும் ஒவ்வொன்றாக பெலிஸ்தியரால் யெகோவாவுக்கு குற்றநிவாரணக் காணிக்கையாக தங்கத்தாலான கட்டிகள் அனுப்பப்பட்டன.

  5. தங்கத்தினாலான எலிகளின் எண்ணிக்கை, ஐந்து பெலிஸ்திய ஆளுநர்களின் ஆட்சிக்குட்பட்ட பட்டணங்களின் எண்ணிக்கையின்படியே இருந்தது. அரணான பட்டணங்களும் அதைச் சூழ்ந்த கிராமங்களின் எண்ணிக்கையின்படியே இருந்தது. அவர்கள் யெகோவாவின் பெட்டியை வைத்த அந்த பெரிய கற்பாறை பெத்ஷிமேஷ் ஊரானான யோசுவாவின் வயலில் இன்றுவரை சாட்சியாக இருக்கிறது.

  6. தாவீது இஸ்ரயேல் மக்களனைவருக்குள்ளும் தெரிந்தெடுக்கப்பட்ட முப்பதாயிரம்பேரை மறுபடியும் ஒன்று சேர்த்தான்.

  7. கேருபீன்களுக்கு நடுவில் வீற்றிருக்கும் சேனைகளின் யெகோவாவின் பெயரால் அழைக்கப்பட்ட இறைவனின் பெட்டியைக் கொண்டுவரும்படி, யூதாவிலுள்ள பாலை என்னும் இடத்திற்கு, தாவீதும் அவன் மனிதர் அனைவரும் புறப்பட்டுச் சென்றார்கள்.

  8. அந்த இறைவனின் பெட்டியை ஒரு புதிய வண்டியில் ஏற்றி மலையில் இருந்த அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டுவந்தார்கள். அபினதாபின் மகன்களான ஊசாவும், அகியோவும் அந்தப் புதிய வண்டியை நடத்தினார்கள்.

  9. இறைவனின் பெட்டி அதில் இருந்தது. அதற்கு முன்னால் அகியோ போய்க்கொண்டிருந்தான்.

  10. தாவீதும் இஸ்ரயேலின் குடும்பத்தார் அனைவரும் தேவதாரு மரத்தால் செய்யப்பட்ட யாழோடும், வீணை, தம்புரா, மேளம், தாளம் ஆகியவற்றோடும் யெகோவாவுக்கு முன்பாக தங்கள் முழு பலத்தோடும் ஆடிப்பாடிக் கொண்டுபோனார்கள்.

  11. அவர்கள் நாகோனின் சூடடிக்கும் களத்திற்கு வந்தபோது, மாடுகள் மிரண்டதினால் ஊசா கையை நீட்டி இறைவனின் பெட்டியை எட்டிப்பிடித்தான்.

  12. ஊசாவின் பயபக்தியற்ற இச்செயலினால் ஊசாவுக்கு விரோதமாக யெகோவாவின் கோபம் மூண்டது. எனவே அவர் அந்த இடத்திலேயே ஊசாவை அடித்தார். அவன் இறைவனின் பெட்டிக்கு அருகே விழுந்து செத்தான்.

  13. யெகோவாவின் கோபம் ஊசாவுக்கு விரோதமாய் மூண்டதினால், தாவீது கோபமடைந்தான். அதனால் இந்நாள்வரை அந்த இடம், பேரேஸ் ஊசா என அழைக்கப்படுகிறது.

  14. தாவீது அன்றையதினம் யெகோவாவுக்குப் பயந்து, “யெகோவாவின் பெட்டி எப்படி என்னிடம் வரமுடியும்?” என்று கூறினான்.

  15. எனவே யெகோவாவின் பெட்டியை தன்னுடன் தாவீதின் நகரத்தில் இருக்கும்படி, அதை அங்கு கொண்டுவர அவன் விரும்பவில்லை. அதனால், அவன் அதைப் புறம்பே கொண்டுபோய் கித்தியனான ஓபேத் ஏதோமின் வீட்டிலே வைத்தான்.

  16. யெகோவாவின் பெட்டி கித்தியனான ஓபேத் ஏதோமின் வீட்டில் மூன்று மாதங்கள் இருந்தது. யெகோவா ஓபேத் ஏதோமையும் அவன் குடும்பம் முழுவதையும் ஆசீர்வதித்தார்.

  17. அப்பொழுது, இறைவனின் பெட்டி ஓபேத் ஏதோமின் வீட்டில் இருப்பதால், அவனையும், குடும்பத்தாரையும் அவனுக்குள்ள எல்லாவற்றையும் யெகோவா ஆசீர்வதிக்கிறார் என தாவீதுக்குச் சொல்லப்பட்டது. எனவே தாவீது போய் இறைவனின் பெட்டியை ஓபேத் ஏதோமின் வீட்டிலிருந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் தாவீதின் நகரத்திற்குக் கொண்டுவந்தான்.

  18. யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்து வந்தவர்கள் ஆறு அடி எடுத்து வைத்ததும் தாவீது ஒரு மாட்டையும், ஒரு கொழுத்த கன்றையும் அங்கே பலிசெலுத்தினான்.

  19. அப்பொழுது தாவீது நார்ப்பட்டு ஏபோத்தை அணிந்துகொண்டு யெகோவாவுக்கு முன்பாகத் தன் முழு பலத்தோடும் நடனமாடினான்.

  20. தாவீதும் இஸ்ரயேல் குடும்பத்தார் யாவரும் ஆரவாரத்தோடும், எக்காள சத்தத்தோடும் யெகோவாவின் பெட்டியைக் கொண்டுவந்தார்கள்.

  21. சாலொமோன் அரசன் தாவீதின் பட்டணமான சீயோனிலிருந்து யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவருவதற்காக, இஸ்ரயேலின் முதியவர்களையும், எல்லா கோத்திரத் தலைவர்களையும், இஸ்ரயேல் குடும்பத் தலைவர்களையும் எருசலேமில் ஒன்றுகூடும்படி தன்னிடம் வரவழைத்தான்.

  22. ஏழாம் மாதமாகிய ஏத்தானீம் மாதம் பண்டிகைக் காலத்தில் இஸ்ரயேல் மனிதர் யாவரும் சாலொமோன் அரசனிடம் ஒன்றுகூடி வந்தார்கள்.

  23. இஸ்ரயேலின் முதியவர்கள் எல்லோரும் வந்துசேர்ந்ததும் ஆசாரியர்கள் உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கினார்கள்.

  24. அவர்கள் யெகோவாவின் பெட்டியையும், சபைக் கூடாரத்தையும், அதனுள்ளிருந்த பரிசுத்த பொருட்களையும் தூக்கிக்கொண்டு வந்தனர். ஆசாரியரும் லேவியரும் அதைத் தூக்கிக்கொண்டு சென்றார்கள்.

  25. அரசன் சாலொமோனும் பெட்டிக்கு முன்னால் அவனோடே கூடிநின்ற இஸ்ரயேலின் முழுசபையும் உடன்படிக்கைப் பெட்டியின்முன் வந்து, அநேக செம்மறியாடுகளையும், ஆடுமாடுகளையும் பலியிட்டனர். அவற்றின் எண்ணிக்கையை கணக்கிடவோ குறித்துவைக்கவோ அவர்களால் முடியவில்லை.