உள்ளடக்கத்திற்குச் செல்க

Ark of the Covenant பற்றிய பைபிள் வசனங்கள்

88 வசனங்கள் · 37 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. கானானியரும் அந்த நாட்டின் மற்ற மக்களும் இதைக் கேள்விப்படுவார்கள். அவர்கள் எங்களைச் சுற்றிவளைத்துப் பூமியிலிருந்து எங்கள் பெயரை முழுவதும் அழித்துவிடுவார்களே. அப்பொழுது உம்முடைய மகத்தான பெயருக்காக நீர் என்ன செய்வீர்?” என்றான்.

  2. இறைவனின் பெட்டியைப் பெலிஸ்தியர் கைப்பற்றியபின் அதை எபெனேசரிலிருந்து அஸ்தோத்துக்குக் கொண்டுபோனார்கள்.

  3. அவர்கள் இறைவனின் பெட்டியை தாகோனின் கோவிலுக்கு எடுத்துச்சென்று தாகோனுக்கு அருகில் வைத்தார்கள்.

  4. அஸ்தோத்திலுள்ள மக்கள் மறுநாள் அதிகாலை எழுந்தபோது, இதோ யெகோவாவின் பெட்டிக்கு முன்பாக தாகோன் முகங்குப்புற விழுந்துகிடக்கக் கண்டார்கள். எனவே அவர்கள் தாகோனை மறுபடியும் அதன் இடத்தில் தூக்கிவைத்தார்கள்.

  5. மறுநாளும் அவர்கள் அதிகாலையில் எழுந்தபோது தாகோன் யெகோவாவின் பெட்டிக்கு முன்பாக முகங்குப்புற விழுந்துகிடக்கக் கண்டார்கள். அதன் தலையும், கைகளும் உடைந்து வாயிற்படியில் கிடந்தன. தாகோனின் உடல் மட்டும் மீதியாயிருந்தது.

  6. அஸ்தோத்திலும், அதன் சுற்றுப்புறங்களிலும் இருந்த மக்களின்மேல் யெகோவாவின் கரம் மிகவும் பாரமாயிருந்தது. அவர் அவர்களைக் கட்டிகளினால் வாதித்தார்.

  7. இவ்வாறு நடப்பதை அஸ்தோத்தின் மக்கள் கண்டபோது அவர்கள், “இஸ்ரயேலின் இறைவனின் பெட்டி எங்களுடன் இங்கே இருக்கக்கூடாது. ஏனெனில் அவருடைய கை நம்மேலும், நம்முடைய தெய்வமாகிய தாகோனின்மேலும் பாரமாய் இருக்கிறது” என்றார்கள்.

  8. எனவே அவர்கள் பெலிஸ்தியரின் ஆளுநர்களை வரவழைத்து அவர்களிடம், “இஸ்ரயேலின் தெய்வத்தின் பெட்டியை என்ன செய்யலாம்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “இஸ்ரயேலின் தெய்வத்தின் பெட்டியை காத்துக்கு அனுப்பி வையுங்கள்” என்றார்கள். அப்படியே இஸ்ரயேலரின் இறைவனின் பெட்டி கொண்டுபோகப்பட்டது.

  9. ஆனால் அவர்கள் பெட்டியைக் கொண்டுபோன பின்பு, யெகோவாவின் கரம் அப்பட்டணத்திலுள்ளவர்களுக்கு எதிராக வந்ததினால் அங்கு பெரும்பீதி உண்டானது. அவர் அப்பட்டணத்திலுள்ள இளவயதினர் முதல், முதியவர்கள்வரை கட்டியினால் வாதித்தார்.

  10. இதனால் அவர்கள் இறைவனது பெட்டியை எக்ரோனுக்கு அனுப்பினார்கள். இறைவனது பெட்டி எக்ரோனுக்குள் போனபோது எக்ரோன் மக்கள் சத்தமிட்டு, “எங்களையும் எங்கள் மக்களையும் கொல்வதற்காகவே இஸ்ரயேலரின் தெய்வத்தின் பெட்டியை எங்களிடம் கொண்டுவந்திருக்கிறார்கள்” என்றார்கள்.

  11. எனவே அவர்கள் பெலிஸ்தியரின் ஆளுநர்களை வரவழைத்து அவர்களிடம், “இஸ்ரயேல் தெய்வத்தின் பெட்டியை அனுப்பிவிடுங்கள். அது அதனுடைய இடத்திற்கே போகட்டும். இல்லையெனில் அது எங்களையும், எங்கள் மக்களையும் கொன்றுவிடும்” என்றார்கள். ஏனெனில் மரணம் அப்பட்டணத்தை பயத்தால் நிரப்பியிருந்தது. இறைவனின் தண்டனையின் கரம் அதன்மேல் பாரமாயிருந்தது.

  12. பட்டணங்களில் சாகாமலிருந்தவர்கள் கட்டிகளினால் வாதிக்கப்பட்டார்கள். அவர்களின் கூக்குரல் வானம்வரை எட்டியது.

  13. யெகோவாவின் பெட்டி பெலிஸ்தியரின் பிரதேசத்தில் ஏழு மாதங்கள் இருந்தது.

  14. பெலிஸ்தியர் தங்கள் பூசாரிகளையும் குறிசொல்பவர்களையும் வரவழைத்து, “யெகோவாவின் பெட்டியை நாங்கள் என்ன செய்யவேண்டும்? அதை அது இருந்த இடத்திற்கு எப்படி அனுப்பலாமென்று சொல்லுங்கள்” என்று கேட்டார்கள்.

  15. அதற்கு அவர்கள், “இஸ்ரயேலரின் தெய்வத்தின் பெட்டியை அனுப்புவதாயின் அதை வெறுமையாய் அனுப்பாமல், அதனோடு குற்றநிவாரண காணிக்கையையும் அவருக்கு அனுப்புங்கள். அப்பொழுது நீங்கள் குணமாவீர்கள், அன்றியும் அவருடைய தண்டனையின் கரம் உங்களைவிட்டு நீங்காதிருந்த காரணத்தையும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்” என்றார்கள்.

  16. அதற்குப் பெலிஸ்தியர், “நாங்கள் குற்றநிவாரண காணிக்கையாக அவருக்கு எதை அனுப்பலாம்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “உங்களுக்கும் உங்கள் தலைவர்களுக்கும் ஒரே வாதை உண்டானதால், பெலிஸ்தியரின் ஆளுநர்களின் எண்ணிக்கைப்படி தங்கத்தினால் கட்டி வடிவத்தில் ஐந்து உருவங்களையும் ஐந்து எலிகளையும் செய்து அவற்றை அனுப்புங்கள்.

  17. இவ்விதமான கட்டிகளின் மாதிரிகளையும், நாட்டை அழிக்கும் எலிகளின் மாதிரிகளையும் செய்து, இஸ்ரயேலின் தெய்வத்தைக் கனப்படுத்துங்கள். ஒருவேளை அவர் உங்களிலிருந்தும், உங்கள் தெய்வங்களிருந்தும், உங்கள் நாட்டிலிருந்தும் தமது தண்டனை கரத்தை எடுத்துவிடுவார்.

  18. எகிப்தியரும், பார்வோனும் செய்ததுபோல் நீங்கள் ஏன் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்துகிறீர்கள். இறைவன் அவர்களை கடுமையாய் நடத்தியபோது, இஸ்ரயேலரை அவர்களுடைய வழியில் போகும்படி அவர்கள் அனுப்பிவிடவில்லையா?

  19. “இப்பொழுது நீங்கள் புதிய வண்டி ஒன்றையும், இதுவரை நுகத்தடி பூட்டப்படாத இரண்டு கறவைப்பசுக்களையும் ஆயத்தப்படுத்துங்கள். பசுக்களை அதில் பூட்டுங்கள். அதன் கன்றுகளைப் பிரித்துக் கொண்டுபோய் தொழுவத்தில் விடுங்கள்.

  20. யெகோவாவின் பெட்டியை எடுத்து, வண்டியின்மேல் வையுங்கள். குற்றநிவாரண காணிக்கையாகச் செலுத்தும் தங்கத்தாலான பொருட்களை ஒரு பெட்டியில் அதன் பக்கத்தில் வைத்து வண்டியைப் போகும்படி விடுங்கள்.

  21. ஆனால் அதைக் கவனித்துக் கொண்டிருங்கள். அது தன் சொந்த பிரதேசத்திற்கு பெத்ஷிமேஷை நோக்கிப் போனால், அப்பொழுது இந்தப் பேராபத்தை நமக்குச் செய்தவர் யெகோவாவே. அப்படி போகாவிட்டால், அவருடைய கை எங்களை அழிக்கவில்லை. அது தற்செயலாய் சம்பவித்தது என்று அறிந்துகொள்வோம்” என்றார்கள்.

  22. அப்படியே அவர்கள் செய்தார்கள். இரண்டு கறவைப்பசுக்களை கொண்டுவந்து வண்டியில் பூட்டி, அவற்றின் கன்றுக்குட்டிகளைத் தொழுவத்தில் அடைத்து வைத்தார்கள்.

  23. பின்பு யெகோவாவின் பெட்டியை வண்டியில் வைத்துத் தங்கத்தினால் செய்த எலிகளையும், கட்டி உருவங்களின் மாதிரிகளை வைத்த பெட்டியையும் வைத்தார்கள்.

  24. அப்பொழுது அந்தப் பசுக்கள் வழிநெடுகிலும் கத்திக்கொண்டே பெத்ஷிமேஷை நோக்கி வலதுபக்கமோ, இடது பக்கமோ திரும்பாமல், நேரே சென்றன. பெலிஸ்தியரின் ஆளுநர்களும் பெத்ஷிமேஷின் எல்லைவரை அவைகளின் பின்னே சென்றார்கள்.

  25. அப்பொழுது பெத்ஷிமேஷின் மக்கள் பள்ளத்தாக்கில் கோதுமை அறுவடை செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் நிமிர்ந்து பார்த்து பெட்டியைக் கண்டபோது, அக்காட்சியால் மகிழ்ச்சி அடைந்தார்கள்.