உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 2100–1900 BC

Abraham: The Covenant

God calls Abram from Ur, establishes an everlasting covenant, and promises a son through whom all nations will be blessed.

394 வசனங்கள் · 1 புத்தகம் உள்ளடக்கப்பட்டது

இந்தக் காலத்தின் வசனங்கள்

  1. அவர்கள் வெளியே வந்ததும், அவர்களில் ஒருவன் அவர்களிடம், “உயிர்தப்பும்படி ஓடிப்போங்கள்! திரும்பிப் பார்க்கவே வேண்டாம்; சமபூமியில் எந்த இடத்திலும் தங்காமல் மலைகளுக்கே ஓடிப்போங்கள்; இல்லாவிட்டால் நீங்களும் அழிந்துபோவீர்கள்” என்றான்.

  2. அதற்கு லோத்து அவர்களிடம், “ஐயாமார்களே, தயவுசெய்து அப்படி வேண்டாம்.

  3. நான் உங்கள் கண்களிலே தயவு பெற்றிருக்கிறேன். எனக்குப் பெரிதான தயவுகாட்டி என்னுயிரைக் காப்பாற்றினீர்கள். ஆனால் மலைகளுக்குத் தப்பியோட என்னாலோ முடியாது. இந்த பேராபத்து என்னை மேற்கொண்டு நான் இறந்து விடுவேனே.

  4. இதோ நான் ஓடிப்போகக் கூடிய அளவுக்கு அருகாமையில் ஒரு சிறிய பட்டணம் இருக்கிறதே. அங்கே நான் தப்பியோட என்னை விடுங்கள். அது மிகவும் சிறிய பட்டணம்தானே. அப்பொழுது நான் உயிர்பிழைப்பேன்” என்றான்.

  5. அதற்கு அந்த தூதன் லோத்திடம், “நல்லது, இந்த வேண்டுகோளையும் நான் உனக்குக் கொடுக்கிறேன். நீ சொன்ன அப்பட்டணத்தை நான் அழிக்கமாட்டேன்.

  6. ஆனால் நீ விரைவாக அங்கே தப்பியோடு, ஏனென்றால், நீ அங்கேபோய்ச் சேரும்வரை என்னால் எதுவுமே செய்யமுடியாது” என்றார். அதனால் அப்பட்டணம் சோவார் என அழைக்கப்பட்டது.

  7. லோத்து சோவாருக்குப் போய்ச் சேர்ந்தபோது, அந்த நாட்டின் மேலாகச் சூரியன் உதித்திருந்தது.

  8. அப்பொழுது யெகோவா எரியும் கந்தகத்தை சோதோமின் மேலும், கொமோராவின் மேலும் பொழியப்பண்ணினார். அது யெகோவாவிடமிருந்து வானத்திலிருந்தே வந்தது.

  9. இவ்வாறு அவர் அந்தப் பட்டணங்களை அதில் வாழ்ந்த எல்லோருடனும் சேர்த்து, சமபூமி முழுவதையும் அழித்தார். அந்த நாட்டிலுள்ள தாவரங்களையும் அழித்தார்.

  10. ஆனாலும் லோத்தின் மனைவியோ போகும்போது திரும்பிப் பார்த்ததினால், உப்புத்தூண் ஆனாள்.

  11. அடுத்தநாள் அதிகாலையில் ஆபிரகாம் எழுந்து, தான் முன்பு யெகோவாவின் முன்னிலையில் நின்ற இடத்திற்குத் திரும்பிப்போனான்.

  12. அங்கிருந்து அவன் சோதோம், கொமோரா பட்டணங்களையும், சமபூமி முழுவதையும் நோக்கிப் பார்த்தபோது, சூளையிலிருந்து எழும்பும் புகையைப்போல் அந்த நாட்டிலிருந்து பெரும்புகை எழும்புவதைக் கண்டான்.

  13. இவ்வாறு இறைவன் சமபூமியிலுள்ள பட்டணங்களை அழித்தபோது, ஆபிரகாமை நினைவில்கொண்டார். எனவே லோத்து குடியிருந்த பட்டணங்களை அழித்தபோது, அந்த பேரழிவிலிருந்து அவனை வெளியே கொண்டுவந்து தப்புவித்தார்.

  14. அதன்பின், லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்ததினால், தன் இரு மகள்களுடன் சோவாரைவிட்டுப் புறப்பட்டு, மலைநாட்டுக்குப் போய், ஒரு குகையில் வசித்தான்.

  15. ஒரு நாள், மூத்த மகள் இளையவளிடம், “நம் தகப்பன் வயது முதிர்ந்தவரானார்; உலக வழக்கத்தின்படி, நம்மை திருமணம் செய்து நம்முடன் உறவுகொள்ள இப்பகுதியில் ஆண்கள் யாரும் இல்லை.

  16. நமது தகப்பனை திராட்சை மதுவைக் குடிக்கப்பண்ணி அவருடன் உறவுகொண்டு, அவர் மூலமாய் நமது குடும்ப வம்சாவழியைப் பாதுகாப்போம்” என்றாள்.

  17. அப்படியே அவர்கள் அன்றிரவு தங்கள் தகப்பனுக்குத் திராட்சை மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்த மகள் போய் அவனுடன் உறவுகொண்டாள். அவள் தன்னுடன் உறவு கொண்டதையோ, எழுந்து போனதையோ அவன் அறியவில்லை.

  18. மறுநாள் மூத்த மகள் இளையவளிடம், “நேற்றிரவு நம்முடைய தகப்பனுடன் நான் உறவுகொண்டேன். இன்றிரவு மறுபடியும் நாம் அவருக்குக் குடிக்கக் கொடுப்போம். இன்றிரவு நீ அவருடன் போய் உறவுகொள். இவ்விதமாய் நம் தகப்பன் மூலமாய், நாம் நமது குடும்ப வம்சாவழியைப் பாதுகாப்போம்” என்றாள்.

  19. அப்படியே அன்றிரவும் தங்கள் தகப்பனுக்குத் திராட்சை மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். இளையவள் போய் அவனுடன் உறவுகொண்டாள். அவள் தன்னுடன் உறவு கொண்டதையோ, எழுந்து போனதையோ இம்முறையும் அவன் அறியவில்லை.

  20. இவ்விதமாக லோத்தின் மகள்கள் இருவரும் தங்கள் தகப்பனால் கர்ப்பமானார்கள்.

  21. ஆதியாகமம் 19:37சுமார் கி.மு. 1896

    மூத்த மகள் ஒரு மகனைப் பெற்று அவனுக்கு மோவாப் என்று பெயரிட்டாள். இக்காலத்து மோவாபியரின் தகப்பன் இவனே.

  22. ஆதியாகமம் 19:38சுமார் கி.மு. 1896

    இளையமகள் ஒரு மகனைப் பெற்று அவனுக்கு பென்னமி என்று பெயரிட்டாள். இக்காலத்திலுள்ள அம்மோனியரின் தகப்பன் இவனே.

  23. ஆதியாகமம் 20:1சுமார் கி.மு. 1897

    ஆபிரகாம் அவ்விடம் விட்டு நெகேப் பிரதேசத்திற்குப் போய் அங்கே காதேஷ், சூர் என்னும் இடங்களுக்கு இடையே வசித்தான். சிறிதுகாலம் அவன் கேராரில் தங்கினான்.

  24. ஆதியாகமம் 20:2சுமார் கி.மு. 1897

    ஆபிரகாம் அங்கே தன் மனைவி சாராளைத், “தன் சகோதரி” என்று சொல்லியிருந்தான். அப்பொழுது கேராரின் அரசன் அபிமெலேக்கு தன் ஆட்களை அனுப்பி, சாராளை எடுத்துக்கொண்டான்.

  25. ஆதியாகமம் 20:3சுமார் கி.மு. 1897

    ஆனால் இறைவன் ஒரு இரவில் அபிமெலேக்குவுக்கு கனவில் தோன்றி, “நீ கொண்டுவந்திருக்கும் பெண்ணின் காரணமாக நீ செத்து அழியப்போகிறாய்; அவள் இன்னொருவனுடைய மனைவியாய் இருக்கிறாள்” என்றார்.