God
God பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
நீங்கள் தகனகாணிக்கைக்கு செம்மறியாடுகளை எனக்கென கொண்டுவரவுமில்லை; உங்கள் பலிகளால் என்னைக் கனம்பண்ணவும் இல்லை. நானோ எனக்குத் தானிய காணிக்கைகளைக் கொடுக்கும்படி உங்களைக் கஷ்டப்படுத்தவும் இல்லை; தூபங்காட்டும்படி நான் உங்களை வற்புறுத்தி சலிப்படையச் செய்யவுமில்லை.
நீங்கள் நறுமணப்பட்டை எதையும் எனக்கென வாங்கவுமில்லை; உங்கள் பலிகளின் கொழுப்புகளை எனக்குத் தாராளமாய் தரவுமில்லை. ஆனால், உங்கள் பாவங்களினால் என்னைப் பாரமடையச் செய்திருக்கிறீர்கள்; உங்கள் குற்றங்களினால் என்னைச் சலிப்படையச் செய்திருக்கிறீர்கள்.
“நான், நானே உங்கள் மீறுதல்களை உங்களைவிட்டு நீக்குகிறேன்; நான் உங்கள் பாவங்களை இனியொருபோதும் நினைவில் வைப்பதில்லை, இதை நான் எனக்காகவே செய்கிறேன்.
கடந்த காலத்தை எனக்காக நினைத்துப் பாருங்கள், நாம் இந்த காரியத்தைப்பற்றி ஒன்றுகூடி வாதாடுவோம்; நீங்கள் குற்றமற்றவர்கள் என்பதற்கு ஆதாரங்களைச் சொல்லுங்கள்.
உங்கள் ஆதிமுற்பிதா பாவம் செய்தான்; உங்களுக்காகப் பேசுகிறவர்களும் எனக்கு விரோதமாகக் கலகம் செய்தார்கள்.
ஆகையால் நான் உங்கள் ஆலயத்தின் தலைவர்களை அவமானப்படுத்துவேன்; யாக்கோபை அழிவுக்கும், இஸ்ரயேலை இகழ்ச்சிக்கும் ஒப்புக்கொடுப்பேன்.
“ஆனால் இப்பொழுதோ என் அடியவனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட இஸ்ரயேலே, கேள்.
யெகோவா சொல்வது இதுவே: உன்னை உண்டாக்கியவரும், உன்னைக் கருப்பையில் உருவாக்கியவரும், உனக்கு உதவிசெய்யப் போகிறவருமாகிய அவர் சொல்வதாவது: என் அடியவனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட யெஷூரனே, பயப்படாதே.
நான் தாகமுள்ள நிலத்தில் தண்ணீரை ஊற்றுவேன்; வறண்ட நிலத்தில் நீரோடைகளை உண்டாக்குவேன். உன் சந்ததியின்மேல் எனது ஆவியானவரையும், உன் பிள்ளைகள்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.
ஒருவன், ‘நான் யெகோவாவுக்கு உரியவன்’ என்பான்; வேறொருவன், தன்னை யாக்கோபின் பெயரால் அழைத்துக்கொள்வான்; இன்னொருவன், தன் கையில், ‘கர்த்தருடையவன்’ என்று எழுதி, இஸ்ரயேல் என்று பெயரிட்டுக்கொள்வான்.
“யெகோவா சொல்வது இதுவே: இஸ்ரயேலின் அரசரும், மீட்பருமாகிய சேனைகளின் யெகோவா கூறுவதாவது, ஆரம்பமும் நானே, முடிவும் நானே; என்னையன்றி வேறு இறைவன் இல்லை
என்னைப்போல் யாரும் உண்டோ? அப்படியிருந்தால் அவன் அதைப் பிரசித்தம்பண்ணட்டும். அதை அறிவித்து எனக்குமுன் சொல்லட்டும், முற்காலத்திலிருந்த என் மக்களை நான் நிலைநிறுத்திய காலத்திலிருந்து நடந்தவற்றையும் இனி என்ன நடக்கப்போகிறதையும் சொல்லட்டும். ஆம், நிகழப்போவதை அவன் முன்னறிவிக்கட்டும்.
நடுங்காதீர்கள், பயப்படாதீர்கள். இதை நான் வெகுகாலத்துக்கு முன்பே பிரசித்தப்படுத்தி, அறிவிக்கவில்லையா? நீங்கள் எனது சாட்சிகள். என்னைத்தவிர வேறு இறைவன் உண்டோ? இல்லை, வேறு கன்மலையும் இல்லை; அப்படி ஒருவரையும் நான் அறியேன்.”
“யாக்கோபே, இவற்றை நீ நினைவில் வைத்துக்கொள்; ஏனெனில் இஸ்ரயேலே, நீ என் அடியவன். நான் உன்னைப் படைத்தேன், நீ என் அடியவன்; இஸ்ரயேலே, நான் உன்னை மறக்கமாட்டேன்.
நான் உன் குற்றங்களை ஒரு மேகத்தைப் போலவும் உன் பாவங்களை காலை நேரத்து மூடுபனியைப் போலவும் அகற்றியிருக்கிறேன். நீ என்னிடம் திரும்பி வா, ஏனெனில் நான் உன்னை மீட்டிருக்கிறேன்.”
வானங்களே, மகிழ்ந்து பாடுங்கள்; யெகோவாவே இதைச் செய்திருக்கிறார். கீழிருக்கும் பூமியே, உரத்த சத்தமிடு. மலைகளே, காடுகளே, மரங்களே, குதூகலித்துப் பாடுங்கள். ஏனெனில், யெகோவா யாக்கோபை மீட்டு, இஸ்ரயேலில் தனது மகிமையை வெளிப்படுத்துகிறார்.
“உங்கள் மீட்பரும், உங்களை கருப்பையில் உருவாக்கியவருமான, யெகோவா சொல்வது இதுவே: “நானே யெகோவா, நான் எல்லாவற்றையும் படைத்தேன், நான் தனியாகவே வானங்களை விரித்து, பூமியையும் பரப்பினேன்.
நானே எனது ஊழியர்களின் வார்த்தைகளை உறுதிபடுத்துகிறேன்; எனது தூதுவர்களின் ஆலோசனைகளை நிறைவேற்றுகிறேன். “எருசலேமைப்பற்றி, ‘அது குடியிருப்பாக்கப்படும்’ என்றும் யூதாவின் பட்டணங்களைப் பற்றி, ‘அவை கட்டப்படும்’ என்றும், அவர்களின் பாழிடங்களைப்பற்றி, ‘நான் மீண்டும் அவைகளைக் கட்டுவேன்,’ என்றும் கூறுகிறேன்,
நானே கோரேசைப்பற்றி, ‘அவன் எனது மேய்ப்பன்; எனது விருப்பம் எல்லாவற்றையும் நிறைவேற்றுவான், அவன் எருசலேமைப்பற்றி, “அது திரும்பவும் கட்டப்படட்டும்” என்றும், ஆலயத்தைப்பற்றி, “அதன் அஸ்திபாரங்கள் போடப்படட்டும்” என்றும் சொல்லுவான்’ என்று சொல்கிறேன்.”
“அபிஷேகம் செய்யப்பட்ட கோரேசைப்பற்றி யெகோவா சொல்கிறதாவது, அவனுக்கு முன்பாக நாடுகளை அடக்கும்படியும், அரசர்களின் போர் ஆயுதங்களை களையப்பண்ணும்படியும், அவனுக்கு முன்பாக வாசல்கள் மூடாதபடி கதவுகள் திறக்கப் பண்ணும்படியும் நான் அவனுடைய வலதுகையை தாங்கிப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்வதாவது:
நான் இருளில் மறைத்து வைக்கப்பட்ட பொக்கிஷங்களையும், மறைவிடங்களில் சேகரிக்கப்பட்ட புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்; அப்பொழுது உன்னைப் பெயர்சொல்லி அழைத்த இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா நானே என்பதை நீ அறிந்துகொள்வாய்.
என் அடியவன் யாக்கோபின் நிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரயேலின் நிமித்தமும் நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை ஏற்றுக்கொள்ளாத போதிலும், நான் உனக்குப் பெயரையும் புகழையும் வழங்கினேன்.
நானே யெகோவா, வேறு எவருமில்லை; என்னைத்தவிர இறைவனும் இல்லை. நீ என்னை ஏற்றுக்கொள்ளாத போதிலும், நான் உன்னைப் பெலப்படுத்துவேன்.
அப்பொழுது சூரியன் உதிக்கும் இடத்திலிருந்து, அது மறையுமிடம் வரையுமுள்ள மனிதர் எல்லோரும், எனக்கிணையானவர் யாரும் இல்லை என்பதை அறிந்துகொள்வார்கள். நானே யெகோவா, வேறு யாரும் இல்லை.
ஒளியையும் இருளையும் படைக்கிறவர் நானே, சமாதானத்தையும் கஷ்டங்களையும் ஏற்படுத்துகிறவரும் நானே; நான் யெகோவா, நானே இவை எல்லாவற்றையும் செய்கிறேன்.