God
God பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
நான் பூமியின் எல்லைகளிலிருந்து உன்னை எடுத்து, அதன் தொலைதூரத்திலிருந்து உன்னை அழைத்தேன். நான், ‘நீ என் ஊழியக்காரன்’; நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னைப் புறக்கணிக்கவில்லை என்றேன்.
ஆகையால் பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; கலங்காதே, நானே உன் இறைவன். நான் உன்னைப் பெலப்படுத்தி, உனக்கு உதவி செய்வேன்; எனது நீதியின் வலது கரத்தால் நான் உன்னைத் தாங்கிக்கொள்வேன்.
ஏனெனில், யெகோவாவாகிய நானே உன் இறைவன். நானே உனது வலதுகையைப் பிடித்து, பயப்படாதே, உனக்கு நான் உதவி செய்வேன் என்று சொல்கிறவர்.
பயப்படாதே, யாக்கோபு என்னும் புழுவே, இஸ்ரயேல் என்னும் சிறுகூட்டமே, நான், நானே உனக்கு உதவி செய்வேன்” என்று, உனது மீட்பரும் இஸ்ரயேலின் பரிசுத்தருமாகிய யெகோவா அறிவிக்கிறார்.
“இதோ, நான் உன்னை ஒரு சூடடிக்கும் கருவியாக்குவேன், அது புதியதும், கூர்மையானதும், அநேக பற்களை உடையதுமான கருவி. நீ மலைகளை போரடித்து, அவைகளை நொறுக்குவாய்; நீ குன்றுகளைப் பதராக்குவாய்.
நீ அவைகளைத் தூற்றுவாய், காற்று அவைகளை அள்ளிக்கொண்டுபோய், புயல்காற்று அவைகளை வாரிக்கொண்டு போகும். ஆனால் நீயோ, யெகோவாவில் அகமகிழ்ந்து, இஸ்ரயேலின் பரிசுத்தரில் மேன்மை அடைவாய்.
“ஏழைகளும், எளியவர்களும் தண்ணீரைத் தேடுவார்கள்; ஆனால் அங்கு ஒன்றுமிராது. அவர்களின் நாவுகள் தாகத்தினால் வறண்டுபோகும். ஆனால் யெகோவாவாகிய நான் அவர்களுக்குப் பதிலளிப்பேன்; இஸ்ரயேலின் இறைவனாகிய நான் அவர்களைக் கைவிடமாட்டேன்.
நான் வறண்ட மேடுகளில் ஆறுகளையும், பள்ளத்தாக்குகளில் நீரூற்றுக்களையும் உண்டாக்குவேன். பாலைவனத்தை நீர்த்தடாகமாகவும், வறண்ட நிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றுவேன்.
நான் பாலைவனத்திலே கேதுருக்களையும், சித்தீம் மரங்களையும், மிருதுச் செடிகளையும், ஒலிவ மரங்களையும் நாட்டுவேன். பாழ்நிலங்களில் தேவதாரு மரங்களையும், சவுக்கு மரங்களையும், புன்னை மரங்களையும் நான் சேர்த்து நாட்டுவேன்.
யெகோவாவின் கரம்தான் இப்படிச் செய்தது, இஸ்ரயேலின் பரிசுத்தரே இவற்றை உண்டாக்கினார் என்று, மக்கள் பார்த்து அறிந்துகொள்ளவும், சிந்தித்து விளங்கிக்கொள்ளவுமே இப்படிச் செய்வேன்.
“உங்கள் வழக்கைச் சொல்லுங்கள்” என்று யெகோவா சொல்லுகிறார். “உங்களுடைய நியாயங்களை எடுத்துக் கூறுங்கள்” என்று யாக்கோபின் அரசர் சொல்கிறார்.
“நான் வடக்கிலிருந்து ஒருவனை எழும்பப் பண்ணியிருக்கிறேன்; அவன் வருகிறான். அவன் சூரிய உதயத்தில் இருந்து என் பெயரைச்சொல்லிக் கூப்பிடுகிறான். அவன் ஆளுநர்களை சுண்ணாம்புக் கலவையைப்போல் மிதிக்கிறான்; குயவன் களிமண்ணை மிதித்துத் துவைப்பதுபோல் அவர்களை மிதிக்கிறான்.
‘இதோ, அவர்கள் வருகிறார்கள்’ என்று நானே சீயோனிடம் முதன் முதலாகச் சொன்னேன். நானே நற்செய்தியின் தூதுவனை எருசலேமுக்குக் கொடுத்தேன்.
தெய்வங்களுக்குள்ளே நான் பார்த்தேன், ஆனால் அங்கு ஒருவருமில்லை. ஆலோசனை கூற அவர்களில் ஒருவரும் இல்லை, நான் கேட்கும்போது எனக்கு விடையளிக்கவும் ஒருவரும் இல்லை.
“இதோ, நான் ஆதரிக்கிற என் ஊழியர், என்னால் தெரிந்துகொள்ளப்பட்ட இவரில் நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன்; இவர்மேல் என் ஆவியானவரை அமரப்பண்ணுவேன், அவர் நாடுகளுக்கு நீதியை வழங்குவார்.
அவர் சத்தமிடவோ, சத்தமிட்டுக் கூப்பிடவோமாட்டார். அவர் வீதிகளில் உரத்த குரலில் பேசவுமாட்டார்.
அவர் நெரிந்த நாணலை முறிக்கமாட்டார், மங்கி எரிகின்ற திரியை அணைத்துவிடவுமாட்டார்; அவர் உண்மையில் நீதியை வெளிப்படுத்தி, அதை நிலைநாட்டுவார்.
பூமியிலே அவர் நீதியை நிலைநாட்டும்வரை தயங்கவுமாட்டார் தளரவுமாட்டார். தீவுகள் அவரது வேதத்தில் தங்கள் நம்பிக்கையை வைக்கும்.”
யெகோவாவாகிய இறைவன் சொல்வதாவது: அவரே வானங்களைப் படைத்து அவைகளை விரித்து வைத்தார், அவரே பூமியையும், அதிலிருந்து வரும் அனைத்தையும் பரப்பினார். அவரே அதில் உள்ள மக்களுக்கு சுவாசத்தைக் கொடுத்தார். அதில் நடமாடுபவர்களுக்கு உயிரைக் கொடுத்தார். அவர் சொல்வது இதுவே:
“யெகோவாவாகிய நான் நீதியிலேயே உன்னை அழைத்து, நான் உனது கையைப் பிடித்து, நான் உன்னைக் காத்து, நீர் மக்களுக்கு ஒரு உடன்படிக்கையாகவும், பிற நாட்டவர்களுக்கு ஒரு ஒளியாகவும் இருக்கும்படி உம்மை ஏற்படுத்துவேன்.
“நான் யெகோவா; இதுவே எனது பெயர்! எனது மகிமையை வேறொருவருக்கும் கொடுக்கமாட்டேன்; எனக்குரிய துதியை விக்கிரகங்களுக்குக் கொடுக்கமாட்டேன்.
இதோ, முற்காலத்தில் சொல்லப்பட்டவை நடந்தேறிவிட்டன, இப்பொழுது நான் புதியவற்றை அறிவிக்கின்றேன். அவை தோன்றி உருவாகுமுன்பே அவைகளை நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.”
கடலில் பயணம் செய்கிறவர்களே, கடலில் வாழ்பவைகளே, தீவுகளே, அங்கு வாழும் குடிகளே, யெகோவாவுக்கு புதுப்பாட்டைப் பாடுங்கள், பூமியின் கடைசிகளில் இருந்து அவருக்குத் துதி பாடுங்கள்.
அவர்கள் யெகோவாவுக்கு மகிமையைக் கொடுக்கட்டும், அவரின் துதியைத் தீவுகளில் பிரசித்தப்படுத்தட்டும்.
யெகோவா வலிய மனிதனைப்போல் முன்சென்று, போர்வீரனைப்போல் தன் வைராக்கியங்கொண்டு எழும்புவார். அவர் உரத்த சத்தமாய் போர்க்குரல் எழுப்பி, பகைவரை வெற்றிகொள்வார்.