உள்ளடக்கத்திற்குச் செல்க

Holy Spirit பற்றிய பைபிள் வசனங்கள்

145 வசனங்கள் · 2 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. மாம்ச இயல்புக்குக் கட்டுப்பட்டு இருக்கிறவர்களால் இறைவனைப் பிரியப்படுத்தமுடியாது.

  2. ஆனால் நீங்களோ, மாம்ச இயல்பின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவர்கள் அல்ல. ஆனால் பரிசுத்த ஆவியானவர் உங்களில் குடியிருந்தால், நீங்கள் ஆவியானவரின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவர்களே. யாராவது கிறிஸ்து இயேசுவின் பரிசுத்த ஆவியானவர் இல்லாதவர்களாயிருந்தால், அவர்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்கள் அல்ல.

  3. கிறிஸ்து உங்களில் இருந்தால், உங்கள் உடல் பாவத்தின் நிமித்தம் மரித்திருந்தாலும், உங்கள் ஆவியோ, நீதியின் நிமித்தம் உயிர்பெற்றிருக்கிறது.

  4. இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பிய இறைவனுடைய பரிசுத்த ஆவியானவர் உங்களில் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பிய அவர் இறைவன், உங்களில் குடிகொண்டிருக்கும் தமது பரிசுத்த ஆவியானவர் மூலமாய், சாகும் தன்மையுள்ள உங்கள் உடல்களுக்கு உயிர் கொடுப்பார்.

  5. ஆகையால் பிரியமானவர்களே, நாம் நம்முடைய மாம்ச இயல்புக்குக் கட்டுப்பட்டு அதன்படி வாழ நமக்கு கடமை இல்லை.

  6. ஏனெனில் மாம்ச இயல்புக்கு ஏற்றபடி நீங்கள் வாழ்ந்தால், நீங்கள் சாவீர்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவரைக்கொண்டு, உங்கள் உடல் செய்யும் பாவ செயல்களைச் சாகடிப்பீர்களானால், நீங்கள் வாழ்வீர்கள்.

  7. ஏனெனில் இறைவனின் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுகிறவர்களே, இறைவனின் மகன்களாய் இருக்கிறார்கள்.

  8. நீங்களோ, உங்களைத் திரும்பவும் பயத்திற்கு அடிமையாக்குகின்ற ஆவியைப் பெறவில்லை, ஆனால், உங்களை “பிள்ளைகளாக ஏற்றுக்கொள்கின்ற” பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிருக்கிறீர்கள். அதனாலேயே நாம், “அப்பா, பிதாவே” என்று கூப்பிடுகிறோம்.

  9. நாம் இறைவனுடைய பிள்ளைகள் என்று பரிசுத்த ஆவியானவரே நம்முடைய ஆவியோடு சேர்ந்து சாட்சி கொடுக்கிறார்.

  10. நாம் இப்பொழுது இறைவனுடைய பிள்ளைகளாய் இருப்பதானால் நாம் உரிமையாளர்களாயும் இருக்கிறோம். நாம் இறைவனுடைய உரிமையாளர்களாயும், கிறிஸ்துவோடு உடன் உரிமையாளர்களாயும் இருக்கிறோம். நாம் அவருடைய பாடுகளில் பங்குகொள்கின்றபடியால் நாம் அவருடைய மகிமையிலும் பங்குகொள்வோம்.

  11. தற்காலத்தில் நாம் அனுபவிக்கும் கஷ்டங்கள் நம்மில் வெளிப்படப்போகின்ற அந்த மகிமையோடு, ஒப்பிடத்தக்கதல்ல என்றே நான் எண்ணுகிறேன்.

  12. இறைவனுடைய மகன்கள் வெளிப்படுவதைக் காண படைக்கப்பட்டவை எல்லாமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றன.

  13. படைக்கப்பட்டவை அழிந்துபோகிறது. ஆனால், தங்கள் சொந்த விருப்பத்தினால் அல்ல, இறைவனின் சித்தத்தின்படியே அப்படி இருக்கின்றன;

  14. இப்படி படைக்கப்பட்டவை எல்லாம் அழிவை ஏற்படுத்தும் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு இறைவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுதந்திரத்திற்குள் பங்குகொள்ளும் நம்பிக்கையுடன் இருக்கிறது.

  15. இன்றுவரைக்கும் படைக்கப்பட்டவை எல்லாம் பிரசவ வேதனையால், புலம்பிக்கொண்டே இருக்கின்றன என்பதை நாம் அறிவோம்.

  16. அதுமாத்திரமல்ல, பரிசுத்த ஆவியானவரின் முதற்பலனைப் பெற்றிருக்கின்ற நாமும்கூட, பிள்ளைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பூரணத்துவத்தை, அதாவது உடலிலிருந்து மீட்புப் பெறுவதற்கு, ஆவலாகக் காத்திருக்கும்போது உள்ளான வேதனையில் தவித்துக் கொண்டிருக்கிறோம்.

  17. இந்த எதிர்பார்ப்பில்தான் நாம் இரட்சிக்கப்பட்டோம். நாம் எதிர்பார்த்திருக்கும் காரியத்தை நாம் இப்போது காண்போமானால், அது எதிர்பார்ப்பு அல்ல. யார்தான் தம்மிடம் ஏற்கெனவே இருக்கும் ஒன்றை எதிர்பார்த்திருப்பார்கள்?

  18. ஆனால் நாம் நம்மிடம் இன்னும் இல்லாத ஒன்றை எதிர்பார்த்தால், அதற்காக நாம் பொறுமையோடு காத்திருப்போம்.

  19. அவ்வேளையில் பரிசுத்த ஆவியானவர் நமது பலவீனத்தில் நமக்கு உதவி செய்கிறார். நாம் எப்படி மன்றாட வேண்டும் என்று நாம் அறியாதிருக்கிறோம். ஆனால் பரிசுத்த ஆவியானவர் தாமே வார்த்தைகளால் விவரிக்க முடியாத தவிப்போடு, நமக்காகப் பரிந்து வேண்டுகிறார்.

  20. நமது இருதயத்தை ஆராய்கின்ற இறைவன், பரிசுத்த ஆவியானவருடைய மனதையும் அறிவார். ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் இறைவனுடைய சித்தத்திற்கு ஏற்றபடி, பரிசுத்தவான்களுக்காகப் பரிந்துவேண்டுதல் செய்கிறார்.

  21. ஆ, இறைவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவற்றின் நிறைவு எவ்வளவு ஆழமானது! அவருடைய தீர்ப்புகள் ஆராய்ந்து அறியமுடியாதவை, அவருடைய வழிமுறைகளோ விளங்கிக்கொள்ள முடியாதவை.

  22. “கர்த்தருடைய மனதை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசகனாய் இருந்தவன் யார்?”

  23. யூதரல்லாதவர்களை இறைவனுக்குக் கீழ்ப்படிய வழிநடத்தும்படி, கிறிஸ்து என் மூலமாய் சொன்னவைகளினாலும், செய்தவைகளினாலும் செய்திருக்கிற

  24. அவை அடையாளங்களையும் அற்புதங்களையும் ஆவியானவருடைய வல்லமையினாலேயே நடந்தேறினதைத் தவிர, வேறு எதையும் குறித்து நான் பேசத்துணிய மாட்டேன். எனவே எருசலேமிலிருந்து இல்லிரிக்கம் என்னும் நாடுவரைக்கும், முழுவதுமாய் நான் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்தேன்.

  25. இறைவன் தமது பரிசுத்த ஆவியானவரின் மூலமாய் இவைகளை நமக்கு வெளிப்படுத்தினார். பரிசுத்த ஆவியானவர் எல்லாவற்றையும் ஆராய்கிறார்; இறைவனுக்குரிய ஆழ்ந்த இரகசியங்களையுங்கூட ஆராய்கிறார்.