உள்ளடக்கத்திற்குச் செல்க

Egypt பற்றிய பைபிள் வசனங்கள்

328 வசனங்கள் · 105 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. எனவே இஸ்ரயேலர்களைக் கட்டாய வேலைக்கு உட்படுத்தி ஒடுக்குவதற்கு, அடிமைகளை நடத்தும் அதிகாரிகளை அவர்களுக்கு மேலாக நியமித்தார்கள்; இவ்வாறு அவர்கள் பித்தோம், ராமசேஸ் என்னும் களஞ்சியப் பட்டணங்களைப் பார்வோனுக்காகக் கட்டினார்கள்.

  2. ஆனால் இஸ்ரயேலர் எவ்வளவு அதிகமாய் ஒடுக்கப்பட்டார்களோ, அவ்வளவு அதிகமாய் அவர்கள் பெருகிப் பரவினார்கள்; இதனால் எகிப்தியர் இஸ்ரயேலர்களுக்குப் பயந்து,

  3. அவர்கள் இஸ்ரயேலரைக் கொடூரமாய் நடத்தி வேலை வாங்கினார்கள்.

  4. செங்கல்லும் சாந்தும் செய்யும் கடினமான வேலைகளினாலும், வயல்களில் செய்யும் எல்லா விதமான வேலைகளினாலும், எகிப்தியர் அவர்களுடைய வாழ்க்கையைக் கசப்பாக்கினார்கள்; இரக்கமின்றி அவர்களுடைய எல்லாக் கடின வேலைகளிலும் அவர்களைக் கொடூரமாய் நடத்தினார்கள்.

  5. எகிப்திய அரசன், சிப்பிராள், பூவாள் என்னும் எபிரெய மருத்துவச்சிகளிடம்,

  6. “எபிரெய பெண்களின் பிரசவ நேரத்தில் அவர்கள் மணையின்மேல் இருக்கையில் நீங்கள் பார்த்து, பிறக்கும் பிள்ளை ஆண் குழந்தையானால், அதைக் கொன்றுபோடுங்கள்; பெண் குழந்தையானால் அதை வாழவிடுங்கள்” என்றான்.

  7. ஆனாலும் மருத்துவச்சிகளோ இறைவனுக்குப் பயந்து, எகிப்திய அரசன் தங்களுக்குச் செய்யச் சொல்லியிருந்ததைச் செய்யவில்லை; அவர்கள் ஆண்பிள்ளைகளையும் வாழவிட்டார்கள்.

  8. இதை அறிந்த எகிப்திய அரசன் மருத்துவச்சிகளை அழைப்பித்து, “நீங்கள் ஏன் இதைச் செய்தீர்கள்? ஆண் பிள்ளைகளை ஏன் வாழ விட்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டான்.

  9. மருத்துவச்சிகள் பார்வோனுக்குப் பதிலளித்து, “எபிரெய பெண்கள் எகிப்திய பெண்களைப் போன்றவர்களல்ல; அவர்கள் பலமுள்ளவர்கள், அதனால் மருத்துவச்சிகள் வந்து சேருமுன்பே அவர்கள் குழந்தைகளைப் பெற்றுவிடுகிறார்கள்” என்றார்கள்.

  10. இறைவன் மருத்துவச்சிகளுக்குத் தயவு காட்டினார்; இஸ்ரயேல் மக்கள் பெருகி எண்ணிக்கையில் இன்னும் அதிகரித்தார்கள்.

  11. மருத்துவச்சிகள் இறைவனுக்குப் பயந்தபடியால், அவர் அவர்களுடைய சொந்தக் குடும்பங்களை விருத்தியடையச் செய்தார்.

  12. பின்பு பார்வோன் தன் மக்கள் எல்லோருக்கும் கட்டளை கொடுத்து, “எபிரெயருக்குப் பிறக்கும் ஒவ்வொரு ஆண் குழந்தையையும் நீங்கள் நைல் நதியில் எறிந்துவிடவேண்டும்; ஆனால், எல்லா பெண் குழந்தைகளையும் வாழவிடுங்கள்” என்றான்.

  13. அப்பொழுது பார்வோனின் மகள் குளிப்பதற்காக நைல் நதிக்குப் போனாள்; அவளுடன் வந்த தோழியர்கள் நதிக்கரையில் உலாவினார்கள். பார்வோனின் மகள், நாணல்களுக்கிடையில் கிடந்த கூடையைக் கண்டு, அதை எடுத்துவரும்படி தன் வேலைக்காரப் பெண்ணை அனுப்பினாள்.

  14. அவள் அக்கூடையைத் திறந்தபோது, ஒரு குழந்தையைக் கண்டாள். அது அழுது கொண்டிருந்தது, அவள் அக்குழந்தைமேல் அனுதாபப்பட்டாள். அவள், “இது எபிரெயக் குழந்தைகளில் ஒன்று” என்றாள்.

  15. அந்நேரத்தில் அங்கு வந்த குழந்தையின் சகோதரி பார்வோனின் மகளிடம், “உமக்காக இந்தப் பிள்ளைக்குப் பால்கொடுத்து வளர்க்க, எபிரெயப் பெண்களில் ஒருத்தியை போய்க்கூட்டிக்கொண்டு வரட்டுமா?” என்று கேட்டாள்.

  16. அதற்குப் பார்வோனின் மகள், “ஆம், போய் அழைத்து வா” என்றாள். அவள் உடனேபோய் குழந்தையின் தாயையே அழைத்து வந்தாள்.

  17. பார்வோனின் மகள் அவளிடம், “இக்குழந்தையை எடுத்துக்கொண்டுபோய் அதை எனக்காகப் பாலூட்டி வளர்த்து வா; நான் உனக்குச் சம்பளம் கொடுப்பேன்” என்றாள். எனவே அப்பெண் அவனைக் கொண்டுபோய்ப் பாலூட்டி வளர்த்தாள்.

  18. குழந்தை வளர்ந்து பெரியவனானபோது, அவன் தாய் அவனைப் பார்வோனின் மகளிடம் ஒப்படைத்தாள்; அவன் அவளுடைய மகனானான். பார்வோனின் மகள் இவனை நான் தண்ணீரிலிருந்து எடுத்தேன் என்று சொல்லி, அவனுக்கு மோசே என்று பெயரிட்டாள்.

  19. அப்பொழுது அங்கே புதரிலிருந்து வந்த ஒரு அக்கினி ஜூவாலையில், யெகோவாவின் தூதனானவர் அவனுக்குக் காட்சியளித்தார்; அந்தப் புதரில் நெருப்பு பற்றியிருந்தும் எரிந்து போகாதிருந்ததை மோசே கண்டான்.

  20. எனவே மோசே, “புதர் எரிந்து போகாதிருக்கும் இந்த ஆச்சரியமான காட்சியை நான் போய்ப்பார்ப்பேன்” என்றான்.

  21. அவன் அதைப் பார்ப்பதற்காக அங்கு போயிருந்ததை யெகோவா கண்டபோது, இறைவன் புதரின் நடுவிலிருந்து, “மோசே! மோசே!” என்று அவனைக் கூப்பிட்டார். அதற்கு அவன், “இதோ நான் இருக்கிறேன்” என்றான்.

  22. இறைவன் அவனிடம், “இதற்குமேல் நெருங்கி வராதே, உன் காலிலுள்ள செருப்பைக் கழற்றிப்போடு; நீ நிற்கின்ற இந்த இடம் பரிசுத்தமான நிலமாய் இருக்கிறது” என்றார்.

  23. மேலும் அவர், “நான் உன் முற்பிதாக்களின் இறைவனாகிய ஆபிரகாமின் இறைவன், ஈசாக்கின் இறைவன், யாக்கோபின் இறைவன்” என்றார். அதைக் கேட்டதும் மோசே இறைவனைப் பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான்.

  24. பின்னும் யெகோவா, “எகிப்தில் என் மக்களின் துன்பத்தை நான் உண்மையாகவே கண்டேன்; அடிமைகளை நடத்தும் கண்காணிகளின் நிமித்தம் அவர்கள் அழுவதைக் கேட்டேன்; அவர்களுடைய துன்பங்களைக்குறித்து கரிசனையாயிருக்கிறேன்.

  25. அதனால் அவர்களை எகிப்தியரின் கையிலிருந்து விடுவித்து, அந்த நாட்டிலிருந்து அவர்களை வெளியே கொண்டுவரவே வந்திருக்கிறேன்; அவர்களைப் பாலும் தேனும் வழிந்தோடுகிற, நலமும் விசாலமுமான நாட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பேன். அந்நாடு கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியோர் வாழும் நாடாகும்.