உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 1050–1010 BC

Samuel & King Saul

Israel demands a king; Samuel anoints Saul, whose disobedience leads to his rejection as God chooses a man after his own heart.

810 வசனங்கள் · 1 புத்தகம் உள்ளடக்கப்பட்டது

இந்தக் காலத்தின் வசனங்கள்

  1. 1 சாமுயேல் 19:7சுமார் கி.மு. 1062

    அதன்பின் யோனத்தான் தாவீதை அழைத்து, தான் தனது தகப்பனுடன் பேசிய எல்லாவற்றையும் சொல்லி, அவனைச் சவுலிடம் அழைத்து வந்தான். அவன் முன்போலவே சவுலுடன் இருந்தான்.

  2. 1 சாமுயேல் 19:8சுமார் கி.மு. 1062

    மறுபடியும் யுத்தம் மூண்டது. தாவீது போய் பெலிஸ்தியருடன் சண்டையிட்டு அவன் அதிக பெலத்துடன் அவர்களைத் தாக்கினான். அவர்கள் அவனுக்கு முன் நிற்காது தப்பி ஓடினார்கள்.

  3. 1 சாமுயேல் 19:9சுமார் கி.மு. 1062

    ஒரு நாள் சவுல் தன் வீட்டில் இருந்தபோது, யெகோவாவிடமிருந்து வந்த பொல்லாத ஆவி அவன்மேல் இறங்கியது. அப்பொழுது தாவீது தன் யாழை வாசித்துக்கொண்டிருந்தான்.

  4. 1 சாமுயேல் 19:10சுமார் கி.மு. 1062

    அவ்வேளையில் சவுல் தன் கையிலிருந்த ஈட்டியால் தாவீதைச் சுவரோடு சேர்த்துக் குத்த முயன்றான். ஆனால் தாவீது விலகிக்கொண்டதால், ஈட்டி சுவரில் பாய்ந்தது. தாவீது அன்றிரவு தப்பி ஓடிவிட்டான்.

  5. 1 சாமுயேல் 19:11சுமார் கி.மு. 1062

    அதன்பின், சவுல் தாவீதின் வீட்டை நோட்டமிட்டு அவனை மறுநாள் அதிகாலையில் கொலை செய்யும்படி, அவன் வீட்டிற்கு ஆட்களை அனுப்பினான். இதை அறிந்த அவன் மனைவி மீகாள் தாவீதிடம், “இன்றிரவு உமது உயிருக்காகத் தப்பி ஓடாவிட்டால் நாளை நீர் கொல்லப்படுவீர்” என்று எச்சரித்தாள்.

  6. 1 சாமுயேல் 19:12சுமார் கி.மு. 1062

    எனவே மீகாள் தாவீதை ஜன்னல் வழியாய் இறக்கிவிட அவன் தப்பி ஓடினான்.

  7. 1 சாமுயேல் 19:13சுமார் கி.மு. 1062

    பின்பு மீகாள் ஒரு விக்கிரகத்தை எடுத்து அவனுடைய கட்டிலின்மேல் வைத்து, ஒரு போர்வையால் மூடி வெள்ளாட்டு மயிரைத் தலைமாட்டில் வைத்தாள்.

  8. 1 சாமுயேல் 19:14சுமார் கி.மு. 1062

    தாவீதைப் பிடித்து வரும்படி சவுல் தன் ஆட்களை அனுப்பியபோது அவன் வியாதியாய் இருப்பதாக மீகாள் சொன்னாள்.

  9. 1 சாமுயேல் 19:15சுமார் கி.மு. 1062

    திரும்பவும் தாவீதைப் பார்ப்பதற்காக சவுல் தன் ஆட்களை அனுப்பி, “அவனைக் கொலை செய்யும்படி கட்டிலோடு என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று சொன்னான்.

  10. 1 சாமுயேல் 19:16சுமார் கி.மு. 1062

    அந்த மனிதர் அவனுடைய வீட்டுக்குள் வந்தபோது, அவனுடைய கட்டிலின்மேல் ஒரு விக்கிரகமும் அதன் தலையில் ஒரு வெள்ளாட்டு மயிர்த்தோலும் இருப்பதைக் கண்டார்கள்.

  11. 1 சாமுயேல் 19:17சுமார் கி.மு. 1062

    அப்பொழுது சவுல் மீகாளிடம், “என்னை ஏமாற்றி என் பகைவனை ஏன் இப்படி தப்பவைத்தாய்?” என்று கேட்டான். அதற்கு மீகாள், “தாவீது என்னிடம், என்னைத் தப்பிப் போகவிடு. இல்லாவிட்டால் நான் உன்னைக் கொன்றுவிடுவேன் என்று சொன்னான்” என்றாள்.

  12. 1 சாமுயேல் 19:18சுமார் கி.மு. 1062

    இவ்விதமாய்த் தாவீது தப்பி ஓடி ராமாவிலிருந்த சாமுயேலிடம் போய் சவுல் தனக்குச் செய்தவற்றையெல்லாம் சொன்னான். அதன்பின் அவனும் சாமுயேலும் நாயோத்திற்குப் போய் அங்கே தங்கியிருந்தார்கள்.

  13. 1 சாமுயேல் 19:19சுமார் கி.மு. 1062

    அப்பொழுது தாவீது ராமாவிலுள்ள நாயோதிலே தங்கியிருக்கிறான் என்பதைச் சவுல் கேள்விப்பட்டான்.

  14. 1 சாமுயேல் 19:20சுமார் கி.மு. 1062

    எனவே சவுல் தாவீதைப் பிடித்துக் கொண்டுவரும்படி தன் மனிதரை அனுப்பினான். அவர்கள் அங்கே இறைவாக்கு உரைப்போர் கூட்டத்தையும், அவர்களுக்குத் தலைவனாக சாமுயேல் நிற்பதையும் கண்டார்கள். அப்போது சவுலின் ஆட்கள் மேலும் யெகோவாவின் ஆவியானவர் இறங்கினார். அவர்களும் இறைவாக்கு உரைத்தார்கள்.

  15. 1 சாமுயேல் 19:21சுமார் கி.மு. 1062

    இதைப்பற்றிச் சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது வேறு மனிதரை அனுப்பினான். அவர்களும் அவ்வாறே இறைவாக்கு உரைத்தார்கள். மூன்றாம் முறையும் சவுல் மனிதரை அனுப்பினான். அவர்களும் இறைவாக்கு உரைத்தார்கள்.

  16. 1 சாமுயேல் 19:22சுமார் கி.மு. 1062

    இறுதியாகச் சவுல் தானே ராமாவிற்குப் போவதற்கு புறப்பட்டான். அவன் சேக்குவிலுள்ள பெரிய துரவுக்கு வந்தபோது, அங்கு நின்றவர்களிடம், “சாமுயேலும், தாவீதும் எங்கே?” என்று கேட்டான். அதற்கு அங்கு நின்றவர்கள், “ராமாவிலுள்ள நாயோதிலே அவர்கள் இருக்கிறார்கள்” என்றார்கள்.

  17. 1 சாமுயேல் 19:23சுமார் கி.மு. 1062

    அப்பொழுது சவுல் ராமாவிலுள்ள நாயோதுக்குப் போகும் வழியில் இறைவனின் ஆவியானவர் அவன் மேலும் இறங்கினார். அவன் நாயோதுக்குப் போய்ச் சேரும்வரைக்கும் இறைவாக்கு உரைத்துக்கொண்டே போனான்.

  18. 1 சாமுயேல் 19:24சுமார் கி.மு. 1062

    சவுல் தன் மேலுடையைக் கழற்றிவிட்டு சாமுயேலுக்கு முன்பாக மற்றவர்களைப்போல் இறைவாக்கு உரைத்தான். அன்று பகலும் இரவும் அவ்வாறே விழுந்து கிடந்தான். இதனாலேயே, “சவுலும் இறைவாக்கு உரைப்போரில் ஒருவனோ?” என்று மக்கள் கேட்கும் வழக்கம் உண்டாயிற்று.

  19. 1 சாமுயேல் 20:1சுமார் கி.மு. 1062

    அதன்பின் தாவீது ராமாவிலுள்ள நாயோதிலிருந்து தப்பி யோனத்தானிடம் போனான். அவன் யோனத்தானிடம், “நான் செய்தது என்ன? நான் செய்த குற்றம் என்ன? உமது தகப்பன் என்னைக் கொலைசெய்யத் தேடும்படி, நான் அவருக்கு என்ன பிழை செய்தேன்?” என்று கேட்டான்.

  20. 1 சாமுயேல் 20:2சுமார் கி.மு. 1062

    அதற்கு யோனத்தான், “ஒருபோதும் இல்லை. நீ சாகப் போவதில்லை. பார், எனது தகப்பன் சிறிதோ, பெரிதோ எதையும் எனக்குச் சொல்லாமல் செய்யமாட்டார். இதைமட்டும் ஏன் எனக்கு மறைக்கவேண்டும். அப்படியிருக்காது” என்று சொன்னான்.

  21. 1 சாமுயேல் 20:3சுமார் கி.மு. 1062

    அப்பொழுது தாவீது யோனத்தானிடம், “எனக்கு உனது கண்களில் தயவு கிடைத்திருக்கிறது என்பது உனது தகப்பனுக்கு நன்றாகத் தெரியும். அதனால் அவர், இது யோனத்தானுக்குத் தெரியவந்தால் அவன் மனம் வருந்துவான். அவனுக்குத் தெரியக்கூடாது என்று தனக்குள்ளே எண்ணிக் கொண்டிருக்கிறார். யெகோவா இருப்பதும், நீ வாழ்வதும் நிச்சயம்போல, மரணத்துக்கும், எனக்கும் ஒரு அடி தூரம் மட்டும் இருக்கிறதென்பதும் நிச்சயம்” என்று சத்தியம் செய்து சொன்னான்.

  22. 1 சாமுயேல் 20:4சுமார் கி.மு. 1062

    அப்பொழுது யோனத்தான் தாவீதிடம், “இப்பொழுது நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என நீ விரும்புகிறாயோ அதை நான் செய்வேன்” என்றான்.

  23. 1 சாமுயேல் 20:5சுமார் கி.மு. 1062

    அதற்குத் தாவீது யோனத்தானை நோக்கி, “நாளைக்கு அமாவாசைப் பண்டிகை. நான் அப்பொழுது அரசனுடன் பந்தியிலிருந்து சாப்பிடவேண்டும். ஆனால் நாளை மறுநாள் மாலைவரைக்கும் வயல்வெளியில் ஒளித்திருப்பதற்கு என்னைப் போகவிடு.

  24. 1 சாமுயேல் 20:6சுமார் கி.மு. 1062

    உனது தந்தை நான் அங்கு இல்லாததைக் கண்டு விசாரித்தால், நீ அவரிடம், ‘தாவீது தன் முழு வம்சத்தாருக்குமான வருடாந்த பலி செலுத்தப்படுவதற்குத் தன் ஊரான பெத்லெகேமுக்கு விரைவாகப் போக வேண்டுமென்று என்னிடம் ஆவலுடன் அனுமதி கேட்டான்’ என்று சொல்.

  25. 1 சாமுயேல் 20:7சுமார் கி.மு. 1062

    அதற்கு உனது தந்தை, ‘மிக நல்லது’ என்று பதிலளித்தால், உனது அடியவனுக்கு பாதுகாப்பு உண்டு. அவர் கோபமடைந்தால், அவர் எனக்குத் தீமைசெய்யத் தீர்மானித்திருக்கிறார் என்று அப்பொழுது நிச்சமாய் அறிந்துகொள்வாய்.