உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 1406–1380 BC

Conquest of Canaan

Joshua leads Israel across the Jordan into the promised land, defeating the Canaanite kingdoms one by one.

658 வசனங்கள் · 1 புத்தகம் உள்ளடக்கப்பட்டது

இந்தக் காலத்தின் வசனங்கள்

  1. யோசுவா 22:26சுமார் கி.மு. 1443

    “அதனால்தான், ‘நாங்கள் முன் ஆயத்தமாகவே ஒரு பலிபீடத்தைக் கட்டுவோம்’ எனச் சொன்னோம். தகனபலிக்காகவோ, வேறு பலிகளுக்காகவோ அல்ல;

  2. யோசுவா 22:27சுமார் கி.மு. 1443

    மாறாக இது எங்களுக்கும், உங்களுக்கும், பின்வரும் சந்ததிகளுக்கும் இடையே சாட்சியாயிருக்கும். நாங்கள் எங்கள் தகன காணிக்கைகளாலும், மற்ற பலிகளாலும், சமாதான காணிக்கைகளாலும் யெகோவாவை அவருடைய பரிசுத்த இடத்தில் வழிபடுவோம் என்பதற்கு இது சாட்சியாயிருக்கும். அப்பொழுது வருங்காலத்தில் உங்கள் வழித்தோன்றல்கள் எங்கள் சந்ததிகளிடம், ‘யெகோவாவிடம் உங்களுக்குப் பங்கில்லை’ எனச் சொல்ல இயலாதிருக்கும்.

  3. யோசுவா 22:28சுமார் கி.மு. 1443

    “மேலும் நாங்கள், ‘அவர்கள் எப்பொழுதாவது எங்களிடமோ, அல்லது எங்கள் சந்ததிகளிடமோ இப்படிச் சொன்னால், நாங்கள் எங்கள் தந்தையர் கட்டிய யெகோவாவின் பலிபீடத்தின் மாதிரி அமைப்பைப் பாருங்கள்! இது தகன காணிக்கைகளுக்காகவோ அல்லது மற்ற பலிகளுக்காகவோ அல்ல; ஆனால் இது எங்களுக்கும், உங்களுக்கும் ஒரு சாட்சியாகவே கட்டப்பட்டிருக்கிறது என்று பதிலளிப்போம்’ என்று சொல்லி இதைக் கட்டினோம்.

  4. யோசுவா 22:29சுமார் கி.மு. 1443

    “எங்கள் இறைவனாகிய யெகோவாவின் இறைசமுகக் கூடாரத்தின் முன் இருக்கும் பலிபீடத்தைத் தவிர வேறு பலிபீடத்தைக் கட்டுவதனால், யெகோவாவுக்கு எதிராகக் கலகம் செய்வதும் அவரைவிட்டு விலகுவதும் எமக்குத் தூரமாயிருப்பதாக. இதில் தகன காணிக்கைகளையும், தானியக் காணிக்கைகளையும், மற்றப் பலிகளையும் செலுத்துவதும் எமக்குத் தூரமாயிருப்பதாக என்போம்” என்றார்கள்.

  5. யோசுவா 22:30சுமார் கி.மு. 1443

    அப்பொழுது ஆசாரியன் பினெகாசும், சமுதாயத் தலைவர்களும், இஸ்ரயேல் கோத்திரத் தலைவர்களும் ரூபனியர், காத்தியர், மனாசேயினர் ஆகியோர் கூறியதைக் கேட்டதும், மனதில் திருப்தியடைந்தார்கள்.

  6. யோசுவா 22:31சுமார் கி.மு. 1443

    அப்பொழுது ஆசாரியன் எலெயாசாரின் மகனாகிய பினெகாஸ், ரூபனியரிடமும், காத்தியரிடமும் மனாசேயினரிடமும், “நீங்கள் இந்த விஷயத்தில் யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாய் இருந்தபடியால், யெகோவா நம்முடைய நடுவில் இருக்கிறார் என்பதை நாங்கள் இன்று அறிந்திருக்கிறோம். இப்பொழுது இஸ்ரயேலரை யெகோவாவின் கரத்திலிருந்து தப்புவித்திருக்கிறீர்கள்” என்று சொன்னான்.

  7. யோசுவா 22:32சுமார் கி.மு. 1443

    எலெயாசாரின் மகன் ஆசாரியன் பினெகாசும் தலைவர்களும் ரூபனியரையும், காத்தியரையும் சந்தித்துவிட்டு கீலேயாத்திலிருந்து கானானுக்குத் திரும்பிவந்து இஸ்ரயேலரிடம் நடந்தவற்றை விவரித்துக் கூறினார்கள்.

  8. யோசுவா 22:33சுமார் கி.மு. 1443

    அவர்கள் கூறியதைக் கேட்டு இஸ்ரயேலர் சந்தோஷப்பட்டு இறைவனுக்குத் துதி செலுத்தினார்கள். ரூபனியரும், காத்தியரும் வாழ்ந்த நாட்டிற்கு விரோதமாகப் படையெடுத்து, அதை அழிப்பதைப்பற்றி பின் ஒருபோதும் அவர்கள் பேசியதில்லை.

  9. யோசுவா 22:34சுமார் கி.மு. 1443

    அப்பொழுது ரூபனியரும், காத்தியரும் அந்த பலிபீடத்திற்கு, “யெகோவாவே இறைவன் என்பதற்கு நமக்கு ஒரு சாட்சி” என்று பெயரிட்டார்கள்.

  10. யோசுவா 23:1சுமார் கி.மு. 1427

    யெகோவா இஸ்ரயேலரைச் சுற்றியிருந்த அவர்களுடைய பகைவரிடமிருந்து அவர்களுக்குச் சமாதானத்தைக் கொடுத்த நீண்டகாலத்திற்குபின், யோசுவா வயதுசென்று முதியவனாய் இருந்தான்.

  11. யோசுவா 23:2சுமார் கி.மு. 1427

    அப்பொழுது யோசுவா இஸ்ரயேலரின் சபைத்தலைவர்கள், தலைவர்கள், நீதிபதிகள், அதிகாரிகள் ஆகிய எல்லோரையும் அழைத்து கூறியதாவது: “நான் வயதுசென்று முதியவனாகிவிட்டேன்.

  12. யோசுவா 23:3சுமார் கி.மு. 1427

    உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் நிமித்தம் இந்த நாடுகளுக்குச் செய்த எல்லாவற்றையும் கண்டிருக்கிறீர்கள். உங்கள் இறைவனாகிய யெகோவாவே உங்களுக்காகப் போர் புரிந்தவர்.

  13. யோசுவா 23:4சுமார் கி.மு. 1427

    வெற்றியடையாமல் மீதியாயிருக்கும் நாடுகளின் நாட்டை நான் உங்கள் ஒவ்வொரு கோத்திரத்திற்கும் எப்படி, சொத்துரிமையாகப் பங்கிட்டுக் கொடுத்திருக்கிறேன் என்பதை நினைவில்கொள்ளுங்கள். மேற்கே மத்திய தரைக்கடலுக்கும், யோர்தான் நதிக்கும் இடையே நான் வெற்றிகொண்ட நாடுகளின் நாட்டைப் பிரித்துக் கொடுத்ததுபோலவே, இதையும் நான் கொடுத்திருக்கிறேன்.

  14. யோசுவா 23:5சுமார் கி.மு. 1427

    உங்கள் இறைவனாகிய யெகோவா தாமே அவர்களை உங்கள் வழியிலிருந்து துரத்திவிடுவார். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு முன்பாக அவர்களை துரத்தி, உங்களுக்கு வாக்குக்கொடுத்தபடியே அவர்களுடைய நாட்டை உங்களுக்கு உரிமையாக்கிக்கொள்வீர்கள்.

  15. யோசுவா 23:6சுமார் கி.மு. 1427

    “மிகவும் பலங்கொண்டிருங்கள்; இடப்புறமோ வலப்புறமோ சாயாமல், மோசேயினால் சட்ட நூலில் எழுதப்பட்டிருக்கும் எல்லாவற்றுக்கும் கீழ்ப்படியக் கவனமாயிருங்கள்.

  16. யோசுவா 23:7சுமார் கி.மு. 1427

    உங்கள் மத்தியில் மீதியாயிருக்கும் இந்த பிற நாடுகளுடன் ஒன்றுசேர்ந்து உறவுகொள்ளாதிருங்கள். அவர்களின் தெய்வங்களின் பெயர்களைச் சொல்லிக் கூப்பிடவோ, ஆணையிடவோ வேண்டாம். நீங்கள் அவற்றுக்குச் சேவை செய்யவோ, வணங்கவோ கூடாது.

  17. யோசுவா 23:8சுமார் கி.மு. 1427

    இன்றுவரை நீங்கள் செய்ததுபோலவே உங்கள் இறைவனாகிய யெகோவாவை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருங்கள்.

  18. யோசுவா 23:9சுமார் கி.மு. 1427

    “இதன் நிமித்தமே யெகோவா பெரிதும் வல்லமையுள்ளதுமான நாடுகளை உங்கள் முன்பாகத் துரத்தியடித்துள்ளார். இன்றுவரை ஒருவராலும் உங்களை எதிர்த்துநிற்க முடியவில்லை.

  19. யோசுவா 23:10சுமார் கி.மு. 1427

    உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு வாக்களித்தபடி, அவரே உங்களுக்காகப் போராடுவதனால் உங்களில் ஒருவன் ஆயிரம்பேரை எதிர்த்து முறியடிக்கிறான்.

  20. யோசுவா 23:11சுமார் கி.மு. 1427

    ஆதலால் உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் அன்புகூருவதில் மிகக் கவனமாயிருங்கள்.

  21. யோசுவா 23:12சுமார் கி.மு. 1427

    “ஆனால் நீங்கள் வழிவிலகி, உங்கள் மத்தியில் வசிக்கும் பிற நாடுகளுக்குள் தப்பியவர்களுடன், நட்புகொண்டு, அவர்களுடன் கலப்புத்திருமணம் செய்யவோ, அவர்களுடன் உறவுகொள்ளவோ வேண்டாம்.

  22. யோசுவா 23:13சுமார் கி.மு. 1427

    அப்படிச் செய்தால் உங்கள் இறைவனாகிய யெகோவா இனி ஒருபோதும் இந்த நாடுகளை உங்கள்முன் துரத்திவிடமாட்டார் என்பதை நிச்சயமாக அறிந்துகொள்ளுங்கள். ஆனால் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல நாட்டிலிருந்து நீங்கள் அழிந்துபோகும் வரையும், அவர்கள் உங்களுக்கு ஒரு கண்ணியாகவும், பொறியாகவும், உங்கள் முதுகுக்குச் சவுக்காகவும், உங்கள் கண்களில் முட்களாகவும் இருப்பார்கள்.

  23. யோசுவா 23:14சுமார் கி.மு. 1427

    “இதோ, பூமியின் மனிதர் எல்லோரும் போகும் வழியில் நானும் போகப்போகிறேன். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றாகிலும் தவறவில்லை என்று நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் அறிவீர்கள். அத்தனை வாக்குறுதிகளும் நிறைவேறியிருக்கின்றன. ஒன்றாயினும் தவறவில்லை.

  24. யோசுவா 23:15சுமார் கி.மு. 1427

    உங்கள் இறைவனாகிய யெகோவாவின் நல்வாக்குறுதிகள் ஒவ்வொன்றும் உண்மையாய் நிறைவேறியது போலவே, அவர் உங்களுக்கு அளித்த இந்த நல்ல நாட்டிலிருந்து உங்களை அவர் அழித்துப்போடும்வரை, உங்கள்மேல் வருமென அவர் அச்சுறுத்திய தீமைகள் எல்லாவற்றையும் வரப்பண்ணுவார்.

  25. யோசுவா 23:16சுமார் கி.மு. 1427

    உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையை மீறிப்போய் வேறு தெய்வங்களுக்குச் சேவைசெய்து, அவற்றை வணங்கினால், அவை எல்லாம் உங்கள்மேல் வரும். அப்பொழுது யெகோவாவின் கடுங்கோபம் உங்களுக்கு விரோதமாய் பற்றியெரியும். அவர் உங்களுக்குக் கொடுத்த நல்ல நாட்டிலிருந்து நீங்களும் விரைவில் அழிந்துபோவீர்கள்” என்றான்.