உள்ளடக்கத்திற்குச் செல்க

Parents பற்றிய பைபிள் வசனங்கள்: Involved in children's wickedness

23 வசனங்கள் · 48 அம்சங்கள்

Involved in children's wickedness பற்றிய வசனங்கள்

  1. அப்பொழுது இறைமனிதன் ஒருவன் ஏலியிடம் வந்து, “யெகோவா சொல்வது இதுவே: ‘உன் தகப்பன் குடும்பத்தார் எகிப்தில் பார்வோனுக்கு அடிமைகளாய் இருந்தபோது, நான் என்னை அவர்களுக்குத் தெளிவாக வெளிப்படுத்தவில்லையா?

  2. இஸ்ரயேலின் எல்லா கோத்திரங்களிலுமிருந்து உன் தகப்பனை எனது பலிபீடத்தின்மேல் செல்லவும், தூபங்காட்டவும், என் முன்னிலையில் ஏபோத்தை அணியவும், ஆசாரியனாக இருக்கும்படி தெரிந்துகொண்டேன். இஸ்ரயேலரால் செலுத்தப்பட்ட நெருப்பின் காணிக்கைகளையும் உன் தகப்பன் குடும்பத்திற்கு நான் கொடுத்தேன்.

  3. எனது குடியிருப்புக்களுக்கென நான் வகுத்த பலிகளையும், காணிக்கைகளையும் நீங்கள் ஏன் இகழ்கிறீர்கள்? என் மக்களாகிய இஸ்ரயேலர் செலுத்திய எல்லாக் காணிக்கைகளிலும் சிறந்தவற்றை உனது மகன்களுக்குக் கொடுத்து, அவர்களைக் கொழுக்கப்பண்ணுவதால் அவர்களை என்னிலும் மேன்பட்டவர்களாக ஏன் மதிக்கிறாய்?’

  4. “எனவே இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா அறிவிக்கிறதாவது, ‘உன் குடும்பத்தாரும், உன் தகப்பன் குடும்பத்தாரும் என்றென்றைக்கும் என் முன்னிலையில் எனக்குப் பணிசெய்வீர்கள்’ என்று வாக்குப்பண்ணினேன்; ஆனால் இப்பொழுது யெகோவா அறிவிக்கிறதாவது: நான் முன் சொன்னபடியே இது நடக்காது! என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம்பண்ணுவேன். என்னை அவமதிக்கிறவர்கள் வெறுக்கப்படுவார்கள்.

  5. உனது வல்லமையையும், உனது தகப்பன் குடும்பத்தாரின் வல்லமையையும் நான் குறைக்கும் காலம் வருகிறது. எனவே உனது பரம்பரையில் ஒரு முதியவனும் இருக்கமாட்டான்.

  6. அப்பொழுது என் உறைவிடத்தில் நீ துன்பத்தைக் காண்பாய். இஸ்ரயேலருக்கு நன்மை செய்யப்பட்டாலும், உன் குடும்பத்தில் முதியவன் ஒருவனும் ஒருபோதும் இருக்கமாட்டான்.

  7. என் பலிபீடத்திலிருந்து, நான் நீக்காத உன் குடும்பத்தவரில் ஒவ்வொருவரும் தங்கள் கண்களைக் கண்ணீரால் மூடவும், தங்கள் இருதயத்தைத் துக்கப்படுத்தவுமே தப்பவிடப்படுவீர்கள். ஆனாலும் உன் சந்ததியினர் ஒவ்வொருவனும் இளவயதில் இறந்துபோவான்.

  8. “ ‘உன் மகன்களான ஒப்னிக்கும், பினெகாசுக்கும் நேரிடுவது உனக்கு ஒரு அடையாளமாயிருக்கும். அவர்கள் இருவரும் ஒரே நாளில் சாவார்கள்.

  9. அதன்பின்பு நான் என் மன எண்ணப்படியும் விருப்பப்படியும் செய்யக்கூடிய ஒரு உண்மையுள்ள ஆசாரியனை ஏற்படுத்துவேன். அவன் குடும்பத்தை நிலைநிறுத்துவேன்; அவன் நான் அபிஷேகம் பண்ணினவருக்கு முன்பாக எப்பொழுதும் பணிசெய்வான்.

  10. அப்பொழுது உன் வழித்தோன்றலில் மீதியாயிருப்பவன் ஒவ்வொருவனும் அவன் முன்வந்து பணிந்து ஒரு வெள்ளிக் காசுக்காகவும், ஒரு துண்டு அப்பத்துக்காகவும் கெஞ்சி, “நான் சாப்பிடுவதற்கு உணவு கிடைக்கும்படி ஆசாரியனுக்குரிய ஏதாவது ஒரு பணியை எனக்குக் கொடுக்கவேண்டும்” என்று கேட்பான்’ என்றான்.”

  11. அப்படியே பெலிஸ்தியர் போரிட்டார்கள். இஸ்ரயேலர் முறியடிக்கப்பட்டு அனைவரும் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள். மிகப்பெரிய அழிவு ஏற்பட்டது; இஸ்ரயேலர் காலாட்படையினரில் முப்பதாயிரம்பேரை இழந்தார்கள்.

  12. இறைவனின் பெட்டி பெலிஸ்தியரால் கைப்பற்றப்பட்டது. ஏலியின் இரு மகன்களான ஒப்னியும், பினெகாசும் இறந்தார்கள்.

  13. அன்றையதினம் பென்யமீன் கோத்திரத்தானொருவன் கிழிந்த உடையுடனும், தலையில் புழுதியுடனும் யுத்தகளத்திலிருந்து சீலோவுக்கு ஓடிப்போனான்.

  14. அவன் ஓடிவந்து சேரும்போது, ஏலி பாதையருகே தன் நாற்காலியில் உட்கார்ந்து வழியையே உற்றுநோக்கிக் கொண்டிருந்தான். ஏனெனில் இறைவனின் பெட்டிக்காக அவன் உள்ளம் பயமடைந்திருந்தது. அவ்வேளை நகரத்துக்குள் வந்தவன் நடந்ததைச் சொன்னபோது பட்டணத்திலுள்ளவர்கள் எல்லோரும் புலம்பி அழுதார்கள்.

  15. அவர்கள் கூக்குரலிட்டதைக் கேட்ட ஏலி அவர்களிடம், “இந்த அமளிக்குக் காரணமென்ன?” என்று கேட்டான். அப்பொழுது அந்த மனிதன் ஏலியிடம் விரைந்து வந்தான்.

  16. ஏலி அப்பொழுது தொண்ணூற்றெட்டு வயதுடையவனாயிருந்தான். அவன் கண்பார்வை குன்றி பார்வை குறைந்தவனாயிருந்தான்.

  17. அந்த மனிதன் ஏலியிடம், “நான் இப்பொழுதுதான் யுத்தகளத்திலிருந்து வந்திருக்கிறேன். இன்றுதான் அதிலிருந்து தப்பி ஓடிவந்தேன்” என்றான். அதற்கு ஏலி அவனிடம், “அங்கு என்ன நடந்தது மகனே?” என்று கேட்டான்.

  18. அதற்குச் செய்தி கொண்டுவந்தவன் ஏலியிடம், “இஸ்ரயேலர் பெலிஸ்தியர் முன்பாக தப்பியோடிவிட்டார்கள். படைக்கு பெரும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. உம்முடைய மகன்களான ஒப்னியும், பினெகாசும் இறந்துவிட்டார்கள். இறைவனின் பெட்டியையும் கைப்பற்றிவிட்டார்கள்” என்றான்.

  19. இறைவனின் பெட்டிக்கு நடந்ததைப்பற்றி அவன் சொன்னவுடனே, ஏலி தன் வாசலருகேயிருந்த நாற்காலியிலிருந்து பிடரி அடிபட விழுந்தான். அவன் முதியவனும், உடல் பெருத்தவனுமாயிருந்ததால் கழுத்து முறிந்து இறந்தான். அவன் நாற்பது வருடங்கள் இஸ்ரயேலருக்கு நீதிபதியாக இருந்தான்.

  20. பினெகாசின் மனைவியான, அவன் மருமகள் கர்ப்பவதியாயிருந்தாள். அவளுக்குப் பேறுகாலமாயிருந்தது. இறைவனின் பெட்டி கைப்பற்றப்பட்ட செய்தியையும், தன் மாமனும், கணவனும் இறந்த செய்தியையும் கேள்விப்பட்டவுடனே, பிரசவ வேதனையுண்டாகி அவள் பிள்ளை பெற்றாள். ஆனால் அவளுடைய வேதனை மரணத்துக்கேதுவாக இருந்தது.

  21. அவள் மரணத் தருவாயில் இருந்தபோது அவளருகில் இருந்த பெண்கள் அவளிடம், “சோர்ந்து போகாதே. நீ ஒரு மகனைப் பெற்றிருக்கிறாய்” என்றார்கள். அவளோ அதற்குப் பதில் சொல்லவுமில்லை, கவனிக்கவுமில்லை.

  22. இறைவனின் பெட்டி கைப்பற்றப்பட்டுத் தன் மாமனும், கணவனும் இறந்துபோனதால், “இஸ்ரயேலரைவிட்டு மகிமை நீங்கிற்று” என்று சொல்லி, அவனுக்கு, “இக்கபோத்” என்று பெயரிட்டாள்.

  23. அவள், “இறைவனின் பெட்டி கைப்பற்றப்பட்டதால் இஸ்ரயேலின் மகிமை நீங்கிற்று” என்றாள்.