Skip to content

Justification பற்றிய பைபிள் வசனங்கள்

132 வசனங்கள் · 1 அம்சம்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. ஆனால் ஒருவன் மோசேயின் சட்டத்தின் கிரியைகளைக் கைக்கொள்வதனாலே அல்ல, இயேசுகிறிஸ்துவின் விசுவாசத்தின் மூலமாகவே, நீதிமானாக்கப்படுகிறான் என்பது நமக்குத் தெரியும். அதனாலேதான், நாமும் மோசேயின் சட்டத்தின் கிரியைகளைக் கைக்கொள்வதனால் அல்ல, கிறிஸ்துவின் விசுவாசத்தின்மூலமாய் நீதிமான்கள் ஆக்கப்படும்படி, கிறிஸ்து இயேசுவில் விசுவாசம் வைத்துள்ளோம். ஏனெனில் மோசேயின் சட்டத்தின் கிரியைகளைக் கைக்கொள்வதனால், ஒருவனுமே நீதிமானாக்கப்படுவதில்லை.

  2. “கிறிஸ்துவில் நீதிமான்களாக்கப்படும்படி விரும்புகிற, நாமும் பாவிகளாய் இருக்கிறோம் என்றால் கிறிஸ்து பாவத்தைப் பெருகச்செய்கிறார் என்பது அர்த்தமா? ஒருபோதும் இல்லை.

  3. ஆனால் நான் அழித்ததைத் திரும்பவும் நான் கட்ட முயன்றால், மோசேயின் சட்டத்தை மீறுகிறவன் என்பதையே அது காட்டுகிறது.

  4. “நான் இறைவனுக்கென்று வாழும்படி மோசேயின் சட்டத்தின் மூலமாக மோசேயின் சட்டத்திற்கே இறந்தேன்.

  5. கிறிஸ்துவுடனேகூட நான் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். ஆகவே இப்பொழுது வாழ்வது நானல்ல, கிறிஸ்துவே எனக்குள் வாழ்கிறார். இந்த மாம்சத்தில் இப்பொழுது நான் வாழ்கிற வாழ்க்கையை இறைவனுடைய மகனின் விசுவாசத்தினாலேயே வாழ்கிறேன். அவரே என்னை நேசித்து, எனக்காகத் தம்மையே கொடுத்தார்.

  6. இறைவனுடைய கிருபையை நான் புறக்கணிக்கமாட்டேன். ஏனெனில் நீதியை மோசேயின் சட்டத்தின் மூலமாய் அடைய முடியுமானால், கிறிஸ்து இறந்தது வீணானதே!”

  7. இறைவன் விசுவாசத்தினாலே யூதரல்லாத மக்களை நீதிமான்களாக்குவார் என்று வேதவசனத்தில் முன்னமே எழுதப்பட்டிருந்தது. அதனாலேயே, “எல்லா நாடுகளும் உன் மூலமாய் ஆசீர்வதிக்கப்படுவார்கள்” என்று ஏற்கெனவே ஆபிரகாமுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டது.

  8. எனவே விசுவாசமுள்ளவர்கள் விசுவாசத்தின் மனிதனான ஆபிரகாமுடனேகூட ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.

  9. அப்படியானால் மோசேயின் சட்டம் இறைவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமானதா? ஒருபோதும் இல்லை. மோசேயின் சட்டம் வாழ்வை அளிக்கும்படி கொடுக்கப்பட்டிருந்தால், நிச்சயமாக மோசேயின் சட்டத்தின் மூலமாகவே நீதி வந்திருக்கும்.

  10. ஆனால் வேதவசனமோ, முழு உலகமும் பாவத்தின்கீழ் கைதியாய் இருப்பதாகவே அறிவிக்கிறது. அதனால், கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தமானது, இயேசுகிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தின்மூலமாய் விசுவாசிக்கிறவர்களுக்கே கொடுக்கப்படுகிறது.

  11. மோசேயின் சட்டத்திற்கு கீழ்ப்பட்டிருக்க விரும்புகிறவர்களே, மோசேயின் சட்டம் சொல்வதை நீங்கள் அறியாதிருக்கிறீர்களா? அதை எனக்குச் சொல்லுங்கள்.

  12. ஆபிரகாமுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள் என்றும், ஒருவன் அடிமைப் பெண்ணிடத்தில் பிறந்தான் என்றும், மற்றவன் சுதந்திரமுள்ள பெண்ணிடத்தில் பிறந்தான் என்றும் எழுதப்பட்டிருக்கிறதே.

  13. அடிமைப் பெண்ணிடத்தில் பிறந்த அவனுடைய மகன், சாதாரண முறையிலேயே பிறந்தான்; சுதந்திரமான பெண்ணிடத்தில் பிறந்த அவனுடைய மகனோ, இறைவனுடைய வாக்குத்தத்தத்தின் பிரதிபலனின்படி பிறந்தான்.

  14. இதை ஒரு அடையாளப்பூர்வமாக எடுத்துக்கொள்ளலாம். இந்த இரண்டு பெண்களும், இரண்டு உடன்படிக்கைகளுக்கும் எடுத்துக்காட்டாய் இருக்கிறார்கள். ஒரு உடன்படிக்கை சீனாய் மலையைச் சேர்ந்தது. அது அடிமைகளாகப் போகும் பிள்ளைகளைப் பெறுகிறது. இது ஆகாருக்கு ஒப்பாய் இருக்கிறது.

  15. அரேபியாவிலுள்ள சீனாய் மலைக்கு ஆகார் அடையாளமாய் இருக்கிறாள். அவள் இப்பொழுது இருக்கும் எருசலேம் நகருக்கும் ஒப்பாய் இருக்கிறாள். ஏனெனில் எருசலேமும், அதன் பிள்ளைகளுடன் அடிமையாய் இருக்கிறதே.

  16. ஆனால் மேலே பரலோகத்திலுள்ள எருசலேமோ சுதந்தரமானவள். அவளே நம்முடைய தாய்.

  17. ஏனெனில், “பிள்ளை பிள்ளைபெறாத மலடியே, சந்தோஷப்படு; பிரசவ வேதனைப்படாதவளே, மகிழ்ச்சியுடன் சத்தமிடு; ஏனெனில் கைவிடப்பட்டவளின் பிள்ளைகள் கணவனுடன் வாழ்கிறவளுடைய பிள்ளைகளைவிட அதிகமாயிருப்பார்கள்” என்று எழுதியிருக்கிறதே.

  18. பிரியமானவர்களே, நீங்களோ ஈசாக்கைப் போல் வாக்குத்தத்தத்தின் பிள்ளைகளாய் இருக்கிறீர்கள்.

  19. அக்காலத்தில் சாதாரண முறையில் பிறந்த மகன், பரிசுத்த ஆவியானவருடைய வல்லமையின் மூலமாய் பிறந்த மகனைத் துன்புறுத்தினான். அவ்விதமாகவே, இப்பொழுதும் நடைபெறுகிறது.

  20. ஆனால் வேதவசனம் என்ன சொல்கிறது? “அடிமைப் பெண்ணையும், அவள் மகனையும் வெளியே அனுப்பிவிடும்; ஏனெனில், அடிமைப்பெண்ணின் மகன் சுதந்திரமான பெண்ணின் மகனுடனே, சொத்துரிமையை ஒருபோதும் பகிர்ந்துகொள்ளக் கூடாது.”

  21. ஆகவே பிரியமானவர்களே, நாம் மோசேயின் சட்டத்தில் கட்டுப்பட்ட அடிமைப்பெண்ணின் பிள்ளைகள் அல்ல, சுதந்திரமான பெண்ணின் விசுவாசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிள்ளைகள்.

  22. மோசேயின் சட்டத்தினால் நீதிமான்கள் ஆக்கப்பட முயற்சிக்கிற நீங்கள் கிறிஸ்துவிலிருந்து விலகிவிட்டீர்கள்; நீங்கள் கிருபையிலிருந்து விழுந்துவிட்டீர்கள்.

  23. ஆனால் நாங்களோ, எதிர்பார்த்திருக்கும் நீதிக்காக பரிசுத்த ஆவியானவர் மூலமாய் விசுவாசத்தில் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறோம்.

  24. ஏனெனில் கிறிஸ்து இயேசுவில் ஒருவன் விருத்தசேதனத்தைச் செய்துகொண்டானா அல்லது அதைச் செய்யாதிருக்கிறானா என்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. அன்பின் செயல்களினால் வெளிக்காட்டப்படுகிற விசுவாசம் மட்டுமே முக்கியமானது.

  25. அதுமட்டுமல்ல, நான் என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறியும் அந்த அறிவின் மேன்மையுடன் அவைகளை ஒப்பிடும்போது, எல்லாமே நஷ்டம் என்று கருதுகிறேன். நான் அவருக்காக எல்லாவற்றையும் அகற்றி, கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள, அவைகளைக் குப்பையாக எண்ணுகிறேன்.