Journey of Israel Through The Desert பற்றிய பைபிள் வசனங்கள்
முக்கிய பைபிள் வசனங்கள்
அதைக்கேட்ட மோசேயும், ஆரோனும் மக்கள் கூட்டத்தைவிட்டு சபைக் கூடாரவாசலுக்கு வந்து முகங்குப்புற விழுந்தார்கள், அவ்வேளையில் யெகோவாவினுடைய மகிமை அவர்கள்முன் தோன்றியது.
யெகோவா மோசேயிடம் சொன்னதாவது,
“நீ கோலை எடுத்துக்கொள். நீயும், உன் சகோதரன் ஆரோனும் மக்கள் சபையை ஒன்றுகூட்டுங்கள். அவர்கள் கண்களுக்கு முன்பாக நீ அக்கற்பாறையைப் பார்த்து பேசு. அதிலிருந்து அதன் தண்ணீர் பொங்கிவரும். நீ கற்பாறையிலிருந்து இந்த மக்கள் சமுதாயத்திற்குத் தண்ணீரை வரப்பண்ணுவாய். அவர்களும் அவர்களுடைய மிருகங்களும் குடிப்பார்கள்” என்றார்.
யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே அவர் முன்னிருந்த கோலை எடுத்தான்.
அவனும், ஆரோனும் கற்பாறைக்கு முன்பாக மக்கள் சபையை ஒன்றுகூட்டினார்கள். மோசே அவர்களிடம், “கலகக்காரரே, கேளுங்கள், இந்தக் கற்பாறையிலிருந்து நாங்கள் உங்களுக்குத் தண்ணீரை வரப்பண்ணவேண்டுமோ?” என்று கேட்டான்.
பின்பு மோசே தன் கையை உயர்த்தி, தனது கோலினால் கற்பாறையை இரண்டுமுறை அடித்தான். அப்பொழுது தண்ணீர் பீறிட்டுப் பாய்ந்து வந்தது. மக்கள் கூட்டத்தினர் தாங்களும் குடித்து, தங்கள் வளர்ப்பு மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுத்தார்கள்.
பின்பு மோசே காதேசிலிருந்து தூதுவர்களை ஏதோம் அரசனிடம் அனுப்பி: “உமது சகோதரனான இஸ்ரயேல் சொல்வதாவது, எங்களுக்கு நேரிட்ட கஷ்டங்களையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.
எங்கள் முற்பிதாக்கள் எகிப்திற்குப் போனார்கள். நாங்களும் பல ஆண்டுகள் அங்கே குடியிருந்தோம். எகிப்தியர் எங்களையும், எங்கள் முற்பிதாக்களையும் துன்புறுத்தினார்கள்.
ஆனாலும் நாங்கள் யெகோவாவிடம் அழுதபோது அவர் எங்கள் அழுகையைக் கேட்டு, ஒரு தூதனை அனுப்பி எங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார். “இப்போது நாங்கள் உமது பிரதேசத்தின் எல்லையிலுள்ள காதேஸ் என்னும் பட்டணத்தில் இருக்கிறோம்.
தயவுசெய்து உமது நாட்டின் வழியாகக் கடந்துசெல்ல எங்களை அனுமதியும். நாங்கள் எந்தவொரு வயலின் வழியாகவோ, திராட்சைத் தோட்டத்தின் வழியாகவோ செல்லமாட்டோம். எந்தவொரு கிணற்றிலிருந்து தண்ணீர் குடிக்கவுமாட்டோம்; நாங்கள் அரசனின் பெருந்தெருவழியாகவே போவோம். உமது நாட்டைக் கடந்து முடிக்கும்வரை வலதுபக்கமோ, இடது பக்கமோ திரும்பமாட்டோம் என்று சொல்லுங்கள்” என்றான்.
அவ்வாறே அவர்கள் சொன்னபோது, ஏதோம் பதிலாக, “நீங்கள் நாட்டின் வழியாகக் கடந்துபோக முடியாது. அப்படிப்போக முயற்சித்தால், நாங்கள் அணிவகுத்து வந்து உங்களை வாளினால் தாக்குவோம்” என்றான்.
திரும்பவும் இஸ்ரயேலர் அவனிடம்: “நாங்கள் உமது பிரதான வீதியிலே மாத்திரம் போவோம். நாங்களோ, எங்கள் வளர்ப்பு மிருகங்களோ உங்கள் தண்ணீரைக் குடித்தால் அதற்குரிய பணத்தை நாங்கள் தருவோம். நாங்கள் எங்கள் கால்களால் நடந்து உமது நாட்டைக் கடந்துசெல்ல மட்டும் விரும்புகிறோமே தவிர வேறோன்றும் இல்லை” என்றார்கள்.
அதற்கு அவன்: “நீங்கள் என் நாட்டின் வழியாகக் கடந்துசெல்லவே முடியாது” என்று பதிலளித்தான். பின்பு ஏதோம் அவர்களுக்கு எதிராகப் பெரிதும் வலிமையுமான படையுடன் புறப்பட்டு வந்தான்.
ஏதோமியர் இஸ்ரயேலரைத் தங்கள் பிரதேசத்தின் வழியாகக் கடந்துபோகவிட மறுத்தபடியால், இஸ்ரயேலர் அங்கிருந்து திரும்பிப் போனார்கள்.
தெற்கு பகுதியில் வாழ்ந்த கானானியனான ஆராத் பட்டணத்து அரசன், இஸ்ரயேலர் அத்தரீமுக்குப் போகிறவழியாய் வருகிறதைக் கேள்விப்பட்டான். உடனே அவன் இஸ்ரயேலரைத் தாக்கி சிலரைச் சிறைப்பிடித்தான்.
அப்பொழுது இஸ்ரயேலர் யெகோவாவிடம்: “நீர் இந்த மக்களை விடுவித்து எங்கள் கையில் கொடுத்தால், நாங்கள் அவர்கள் பட்டணத்தை முழுவதும் அழித்துப்போடுவோம்” என்று நேர்த்திக்கடன் செய்தார்கள்.
யெகோவா இஸ்ரயேலரின் வேண்டுதலுக்குச் செவிகொடுத்து, கானானியரை அவர்களிடம் ஒப்படைத்தார். அப்பொழுது இஸ்ரயேலர் அவர்களையும், அவர்கள் பட்டணங்களையும் முழுவதும் அழித்தார்கள். அதனால் அவ்விடம், ஓர்மா என்று அழைக்கப்பட்டது.
எனவே மக்கள் மோசேயிடம் வந்து, “நாங்கள் யெகோவாவுக்கும், உமக்கும் விரோதமாய்ப் பேசியதனால் பாவம்செய்தோம். இந்தப் பாம்புகளை எங்களைவிட்டு அகற்றும்படி யெகோவாவிடம் மன்றாடும்” என்றார்கள். அப்பொழுது மோசே மக்களுக்காக மன்றாடினான்.
யெகோவா மோசேயிடம், “நீ ஒரு பாம்பைச் செய்து, ஒரு கம்பத்தின்மேல் வைத்து உயர்த்திவை. கடிக்கப்பட்டவன் எவனும் அதைப்பார்த்தால் பிழைப்பான்” என்றார்.
அவ்வாறே மோசே வெண்கலத்தினால் ஒரு பாம்பைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் உயர்த்திவைத்தான். பாம்பினால் கடிக்கப்பட்ட எவனும் வெண்கலப்பாம்பை நோக்கிப் பார்த்தபோது பிழைத்தான்.
அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு பாலைவனத்தில் உள்ளதும், எமோரியரின் பிரதேசத்துக்குள் நீண்டு செல்கிறதுமான அர்னோன் ஆற்றின் அருகே முகாமிட்டார்கள். மோவாபுக்கும், எமோரியருக்கும் இடையில் மோவாபின் எல்லையாக அர்னோன் ஆறு ஓடுகிறது.
அதனால்தான் யெகோவாவினுடைய யுத்தங்களின் புத்தகத்தில் எழுதியிருக்கிறதாவது: “சூப்பாவிலுள்ள வாகேபும் அர்னோனின் பள்ளத்தாக்கும்
ஆர் என்னும் பட்டணம்வரை சென்று மோவாபின் எல்லை ஓரமாக சாய்ந்திருக்கும் பள்ளத்தாக்கின் மலைச்சரிவும்.”
பின்பு இஸ்ரயேலர் எமோரியரின் அரசன் சீகோனிடத்தில் தூதுவர்களை அனுப்பி,
“உங்களுடைய நாட்டை கடந்துசெல்ல எங்களை அனுமதியுங்கள். நாங்கள் எந்த வயல் வழியாகவோ, திராட்சைத் தோட்டத்தின் வழியாகவோ செல்லமாட்டோம்; எந்தவொரு கிணற்றிலிருந்தும் தண்ணீர்கூட குடிக்கமாட்டோம். நாங்கள் நாட்டைக் கடக்கும்வரைக்கும் அரசபாதையின் வழியாகவே செல்வோம்” என்று சொல்லச் சொன்னார்கள்.