Journey of Israel Through The Desert பற்றிய பைபிள் வசனங்கள்
முக்கிய பைபிள் வசனங்கள்
ஆனால் சீகோன் தன் பிரதேசத்தின் வழியாக இஸ்ரயேலரைப் போகவிடாதிருந்தான். அவன் தன் முழு படையையும் திரட்டிக்கொண்டு இஸ்ரயேலருக்கு விரோதமாகப் பாலைவனத்திற்கு அணிவகுத்துச் சென்றான். அவன் யாகாசை அடைந்தபோது இஸ்ரயேலருடன் சண்டையிட்டான்.
ஆனால் இஸ்ரயேலரோ அவனை வாளுக்கு இரையாக்கி அர்னோன் முதல் யாப்போக்கு வரையுள்ள அவனுடைய நாட்டைக் கைப்பற்றிக்கொண்டார்கள். ஆனால் அம்மோனியரின் எல்லைவரை மட்டுமே கைப்பற்றினார்கள். ஏனெனில் அவர்களுடைய எல்லை அரண் செய்யப்பட்டு இருந்தது.
இஸ்ரயேலர் எமோரியரின் எல்லா பட்டணங்களையும் கைப்பற்றி அவற்றில் குடியேறினார்கள். எஸ்போனும், அதைச் சுற்றியுள்ள எல்லா குடியிருப்புகளும் இவற்றுள் அடங்கும்.
எஸ்போன் எமோரிய அரசன் சீகோனின் பட்டணமாயிருந்தது. அவன் முன்னிருந்த மோவாபின் அரசனுடன் சண்டையிட்டு அர்னோன் வரையிலிருந்த அவனுடைய நாட்டை அவனிடமிருந்து எடுத்திருந்தான்.
அதினாலே அவர்களுடைய கவிஞர்கள்: “எஸ்போனுக்கு வாருங்கள், அது திரும்பவும் கட்டப்படட்டும்; சீகோன் பட்டணம் புதுப்பிக்கப்படட்டும்.
“எஸ்போனில் இருந்து நெருப்பு வெளியேறிற்று, சீகோன் பட்டணத்திலிருந்து சுவாலை வெளியேறிற்று. அது மோவாபின் ஆர் பட்டணத்தை எரித்தது அர்னோன் மேடுகளின் குடிகளையும் எரித்துப்போட்டது.
மோவாபியரே உங்களுக்கு ஐயோ கேடு! கேமோஷின் மக்களே நீங்கள் அழிந்தீர்கள்! அவன் தன் மகன்களை அகதிகளாகவும், தன் மகள்களை சிறைக்கைதிகளாகவும் எமோரிய அரசன் சீகோனிடம் ஒப்புக்கொடுத்தான்.
“ஆனால், நாங்களோ அவர்களைத் தள்ளி வீழ்த்தினோம்; தீபோன்வரை எஸ்போன் அழிந்தது. மேதேபாவரை பரந்திருக்கும் நோப்பா பகுதிவரையும் அவர்களை அழித்தோம் என்று பாடுகிறார்கள்.”
இப்படியாக இஸ்ரயேலர் எமோரியரின் நாட்டில் குடியேறினார்கள்.
மோசே யாசேருக்கு உளவாளிகளை அனுப்பியபின், இஸ்ரயேலர் அதைச் சுற்றியுள்ள குடியிருப்புகளைக் கைப்பற்றி, அங்கு வாழ்ந்த எமோரியரை வெளியே துரத்திவிட்டார்கள்.
பின்பு இஸ்ரயேலர் திரும்பி பாசானுக்குப்போகும் வழியாய்ப் போனார்கள். அப்பொழுது பாசானின் அரசன் ஓக் என்பவன் இஸ்ரயேலரை எதிர்த்து யுத்தம் செய்ய தனது முழு படையுடன் எத்ரேயுக்குப் போனான்.
ஆனால் யெகோவா மோசேயிடம், “நீ அவனுக்குப் பயப்படவேண்டாம். அவனையும் அவனுடைய முழு படையையும், அவனுடைய நாட்டையும் நான் உன் கையில் ஒப்புவித்தேன். நீ எஸ்போனில் அரசாண்ட எமோரியரின் அரசன் சீகோனுக்குச் செய்ததுபோல இவனுக்கும் செய்” என்றார்.
அப்படியே இஸ்ரயேலர் அவனையும், அவன் மகன்களையும், அவனுடைய முழு படையையும் வெட்டி வீழ்த்தினார்கள். ஒருவரையும் தப்பிப்போக விடவில்லை. அவர்கள் அவனுடைய நாட்டைத் தங்கள் உடைமையாக்கிக்கொண்டார்கள்.
அப்பொழுது இறைவன் பிலேயாமிடம் வந்து, “உன்னுடன் இருக்கும் இந்த மனிதர்கள் யார்?” என்று கேட்டார்.
அதற்கு பிலேயாம் இறைவனிடம், “சிப்போரின் மகனான மோவாபின் அரசன் பாலாக் இவர்கள்மூலம் ஒரு செய்தியை எனக்கு அனுப்பியிருக்கிறான்:
அவன், ‘எகிப்திலிருந்து வந்த இந்த மக்கள் கூட்டம் நாடெங்கிலும் பரவியிருக்கிறது. நீர் வந்து எனக்காக இவர்கள்மேல் ஒரு சாபத்தைப்போடும். அப்படிச் சாபமிட்டால் ஒருவேளை நான் அவர்களுடன் சண்டையிட்டு அவர்களைத் துரத்திவிட என்னால் முடியும்’ என்று சொல்லியிருக்கிறான்” என்றான்.
அப்பொழுது இறைவன் பிலேயாமிடம், “நீ அவர்களுடன் போகவேண்டாம்; அந்த மக்கள்மேல் சாபத்தைப்போடவும் வேண்டாம். ஏனெனில் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்றார்.
மறுநாள் காலையில் பிலேயாம் எழுந்து பாலாக்கின் தலைவர்களிடம், “நீங்கள் உங்கள் நாட்டிற்குத் திரும்பிப்போங்கள்; யெகோவா என்னை உங்களோடு வருவதற்கு அனுமதிக்கவில்லை” என்றான்.
எனவே மோவாபின் தலைவர்கள் பாலாக்கிடம் திரும்பிப்போய், “பிலேயாம் எங்களோடு வருவதற்கு மறுத்துவிட்டான்” என்றார்கள்.
திரும்பவும் பாலாக் முந்தினவர்களைவிட அதிக புகழ்ப்பெற்ற, அதிக எண்ணிக்கையான தலைவர்களை அனுப்பினான்.
அவர்கள் பிலேயாமிடம் வந்து, “சிப்போரின் மகனாகிய பாலாக் சொன்னதாவது: ‘நீர் என்னிடம் வருவதற்குத் தடையாயிருக்க எதையும் அனுமதிக்காதேயும்.
நான் உமக்கு அதிகமான வெகுமதிகளைத் தருவேன். நீர் சொல்வதையெல்லாம் செய்வேன். நீர் வந்து எனக்காக இந்த மக்களின்மேல் ஒரு சாபத்தைப்போடும்’ என்கிறார்” என்றார்கள்.
பிலேயாம் அவர்களுக்குப் மறுமொழியாக, “பாலாக் எனக்கு வெள்ளியினாலும், தங்கத்தினாலும் தன் அரண்மனையை நிறைத்து அதைத் தந்தாலும், என் இறைவனான யெகோவாவின் கட்டளையை மீறி, பெரிதோ சிறிதோ எதையுமே என்னால் செய்யமுடியாது.
உங்களுக்குமுன் வந்தவர்கள் செய்ததுபோல் இன்று இரவு இங்கே தங்கியிருங்கள். யெகோவா வேறு என்ன சொல்வார் என்று நான் அறிந்து பார்க்கிறேன்” என்றான்.
அந்த இரவிலே இறைவன் பிலேயாமிடம் வந்து, “இந்த மனிதர்கள் உன்னை அழைத்துப்போக வந்திருந்தால் அவர்களுடன் போ. ஆனால் நான் சொல்வதை மட்டுமே செய்” என்றார்.