உள்ளடக்கத்திற்குச் செல்க

Journey of Israel Through The Desert பற்றிய பைபிள் வசனங்கள்

759 வசனங்கள் · 177 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. ஆகையால் நீ இப்பொழுதே போ. நான் என் மக்களான இஸ்ரயேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவருவதற்கு உன்னைப் பார்வோனிடம் அனுப்புகிறேன்” என்றார்.

  2. ஆனால் மோசேயோ இறைவனிடம், “பார்வோனிடம் போய், இஸ்ரயேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவருவதற்கு நான் யார்?” என்றான்.

  3. அதற்கு இறைவன், “நான் உன்னோடு இருப்பேன். நானே உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே உனக்கு அடையாளம்: நீ எகிப்திலிருந்து மக்களை வெளியே கொண்டுவந்ததும் நீங்கள் இந்த மலையிலேயே இறைவனை வழிபடுவீர்கள்” என்றார்.

  4. எகிப்தியர் அவர்களைத் துரத்திக்கொண்டு வந்தார்கள். பார்வோனின் எல்லா குதிரைகளும், தேர்களும், குதிரைவீரரும், இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து கடலுக்குள் வந்தார்கள்.

  5. யெகோவா விடியற்காலையில் நெருப்புத்தூணிலும், மேகத்தூணிலுமிருந்து எகிப்திய படையைப் பார்த்து அவர்களைக் கலங்கப்பண்ணினார்.

  6. யெகோவா அவர்களுடைய தேர்களின் சக்கரங்களைக் கழறப்பண்ணியதால், தேரை ஓட்டுவதற்கு அவர்களுக்குக் கஷ்டமாயிருந்தது. எனவே எகிப்தியர், “நாம் இஸ்ரயேலரைவிட்டு ஓடிப்போவோம், யெகோவா எகிப்தை எதிர்த்து அவர்களுக்காகப் போராடுகிறார்” என்றார்கள்.

  7. அப்பொழுது யெகோவா மோசேயிடம், “கடல் தண்ணீர் எகிப்தியர்மேலும் அவர்களுடைய தேர்கள், குதிரைவீரர்மேலும் வரும்படி நீ உன் கையை கடல்மேல் நீட்டு” என்றார்.

  8. அப்படியே மோசே தன் கையை கடலுக்கு மேலாக நீட்டினான். அதிகாலையில் கடல் தண்ணீர் திரும்பி, அதன் இடத்திற்கு வந்தது. ஆனால் எகிப்தியரோ கடலை நோக்கியே ஓடிக்கொண்டிருந்தார்கள். யெகோவா அவர்களைக் கடலின் நடுவே அமிழ்த்திவிட்டார்.

  9. கடல் தண்ணீர் திரும்பிவந்து, தேர்களையும், குதிரைவீரர்களையும், அவர்களைப் பின்தொடர்ந்து வந்த பார்வோனின் படை முழுவதையும் கடலுக்குள் மூடிவிட்டது. அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை.

  10. அப்பொழுது மோசேயும் இஸ்ரயேலரும் யெகோவாவுக்குப் பாடிய பாடலாவது: “நான் யெகோவாவைப் பாடுவேன், அவர் மிகவும் புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார். குதிரையையும், அதை ஓட்டியவனையும் அவர் கடலுக்குள் வீசியெறிந்தார்.

  11. “யெகோவா என் பெலனும், என் பாடலுமாயிருக்கிறார், அவரே என் இரட்சிப்புமானார். அவர் என் இறைவன், அவரைத் துதிப்பேன். அவர் என் தந்தையின் இறைவன், அவரை நான் உயர்த்துவேன்.

  12. யெகோவா யுத்தத்தில் வீரர்; யெகோவா என்பதே அவரது பெயர்.

  13. அவர் பார்வோனின் தேர்களையும், அவனுடைய இராணுவத்தையும் கடலுக்குள் தள்ளிவிட்டார். பார்வோனின் அதிகாரிகளில் சிறந்தவர்கள் செங்கடலில் அழிந்தார்கள்.

  14. ஆழமான தண்ணீர் அவர்களை மூடியது; ஒரு கல்லைப்போல் ஆழத்திலே அவர்கள் அமிழ்ந்தார்கள்.

  15. யெகோவாவே, உமது வலதுகரம் வல்லமையில் மாட்சிமையாய் இருந்தது. யெகோவாவே, உமது வலதுகரமே எதிரியை நொறுக்கியது.

  16. “உமது மாட்சிமையின் மகத்துவத்தினால் உம்மை எதிர்த்தவர்களை கீழே விழத்தள்ளினீர். உமது எரியும் கோபத்தைக் கட்டவிழ்த்தீர்; அது அவர்களை வைக்கோலைப்போல் எரித்தது.

  17. உமது நாசியின் சுவாசத்தினால் தண்ணீர் குவிந்தது. பொங்கியெழும் வெள்ளங்கள் மதிலைப்போல உறுதியாய் நின்றன; ஆழத்தின் தண்ணீர் கடலின் அடியில் உறைந்துபோயிற்று.

  18. பகைவன் பெருமையாக, ‘நான் பின்தொடர்வேன், அவர்களைப் பிடிப்பேன். நான் கொள்ளையைப் பங்கிடுவேன்; அவர்களில் என் ஆசையைத் தீர்த்துக்கொள்வேன். என் வாளை உருவுவேன், என் கை அவர்களை அழிக்கும்’ என பேசினான்.

  19. ஆனால், நீரோ உமது சுவாசத்தை ஊதினீர், கடல் அவர்களை மூடியது. அவர்கள் ஈயத்தைப் போல் பெரும் தண்ணீர்களுக்குள் அமிழ்ந்தார்கள்.

  20. யெகோவாவே, தெய்வங்களுக்குள் உம்மைப்போல் யார் உண்டு? பரிசுத்தத்தில் மாட்சிமையும், மகிமையில் வியக்கத்தக்கவரும், அதிசயங்களையும் செய்கிற உம்மைப்போல் யார் உண்டு?

  21. “உமது வலது கரத்தை நீட்டினீர், பூமி அவர்களை விழுங்கிற்று.

  22. நீர் மீட்டுக்கொண்ட மக்களை உமது நேர்மையான அன்பினால் வழிநடத்துவீர். நீர் வசிக்கும் பரிசுத்த இடத்திற்கு, உமது வல்லமையினால் அவர்களுக்கு வழிகாட்டுவீர்.

  23. மக்கள் அதைக்கேட்டு நடுங்குவார்கள்; பெலிஸ்திய மக்களை வேதனை பற்றிக்கொள்ளும்.

  24. ஏதோமின் தலைவர்கள் திகிலடைவார்கள், மோவாபின் தலைவர்களை நடுக்கம் பிடிக்கும், கானானின் மக்களும் கரைந்து போவார்கள்;

  25. பயமும் திகிலும் அவர்கள்மேல் வரும். யெகோவாவே, உமது மக்கள் கடந்துபோகும்வரை, நீர் கொண்டுவந்த மக்கள் கடந்துபோகும்வரை, உமது கரத்தின் வல்லமையால் அவர்கள் கல்லைப்போல் அசைவில்லாமல் கிடப்பார்கள்.