Skip to content

Commandments பற்றிய பைபிள் வசனங்கள்

394 வசனங்கள் · 3 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. யாரிடமும் உணவை இலவசமாய்ப் பெற்று, நாங்கள் சாப்பிட்டதில்லை. மாறாக, நாங்கள் இரவும் பகலும் கஷ்டப்பட்டு உழைத்தோம். இதனால், உங்களில் யாருக்கும் பாரமாய் இருந்ததில்லை.

  2. இவ்விதமான உதவியை உங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள எங்களுக்கு உரிமை இல்லை என்பதனால், நாங்கள் அப்படிச் செய்யவில்லை. ஆனால் நீங்கள் பின்பற்றக்கூடிய ஒரு முன்மாதிரியாக நாங்கள் இருக்கவேண்டும் என்பதற்காகவே, அப்படிச் செய்தோம்.

  3. ஏனெனில், நாங்கள் உங்களுடன் இருந்தபோதுங்கூட, இந்த கட்டளையை நாங்கள் உங்களுக்குக் கொடுத்தோம்: “ஒருவன் வேலைசெய்யாவிட்டால், அவன் சாப்பிடவும் கூடாது.”

  4. உங்களில் சிலர் சோம்பேறிகளாய் இருக்கிறார்கள் என்று நாங்கள் கேள்விப்படுகிறோம். அவர்கள் எவ்வித வேலையும் செய்யாமல், பிறர் வேலையில் ஈடுபடுகிறார்கள்.

  5. அப்படிப்பட்டவர்கள் வேலையில் நிலைத்திருந்து, தங்களுடைய உணவுக்காகத் தாங்களே உழைக்க வேண்டும் என்று, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவில் நாங்கள் கட்டளையிட்டு வேண்டிக்கொள்கிறோம்.

  6. நீங்களோ பிரியமானவர்களே, நல்லதைச் செய்வதில் மனந்தளர வேண்டாம்.

  7. இந்தக் கடிதத்திலுள்ள அறிவுறுத்தலுக்கு யாராவது கீழ்ப்படியாவிட்டால், அப்படிப்பட்டவனைக் குறித்துக்கொண்டு, அவன் வெட்கமடையும்படிக்கு, அவனோடு கூடிப்பழக வேண்டாம்.

  8. ஆனால், அவனைப் பகைவனாக எண்ணவேண்டாம்; ஒரு சகோதரனாக எண்ணி எச்சரியுங்கள்.

  9. எல்லாவற்றையும்விட முதலாவதாக, ஒவ்வொருவருக்காகவும் விண்ணப்பம் செய்யுங்கள்; மன்றாடுங்கள்; பரிந்துபேசுங்கள்; நன்றி செலுத்துங்கள். இதையே நான் உங்களிடம் வற்புறுத்திக் கேட்கிறேன்.

  10. அரசர்களுக்காகவும், அதிகாரத்தில் உள்ள எல்லோருக்காகவும் மன்றாடுங்கள். அப்பொழுதே நாம் இறை பக்தியும், பரிசுத்தமும் உள்ளவர்களாய் சமாதானமும் அமைதியும் உள்ள வாழ்வை வாழலாம்.

  11. எனவே எல்லா இடங்களிலும் உள்ள ஆண்கள் கோபம் கொள்ளாதவர்களாயும், வாக்குவாதம் செய்யாதவர்களாயும், பரிசுத்த கைகளை உயர்த்தி மன்றாட வேண்டும் என்று, நான் விரும்புகிறேன்.

  12. அவ்வாறு, பெண்கள் அடக்கமாய் உடை உடுத்தவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒழுக்கமான, தகுதியுடைய உடைகளையே உடுத்தவேண்டும். தலைமுடி அலங்காரத்தினாலோ, தங்கத்தினாலோ, முத்துக்களினாலோ, விலை உயர்ந்த உடைகளினாலோ தங்களை அலங்கரித்து அழகுபடுத்தாமல்,

  13. இறைவனை ஆராதிக்கின்ற பெண்களுக்கேற்றபடி நல்ல செயல்களினால் தங்களை அலங்கரிக்கவேண்டும்.

  14. ஒரு பெண் அமைதலுடனும் முழுமையான பணிவுடனும் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

  15. ஒரு பெண் போதிப்பதையோ, ஆணுக்கு மேலாக அதிகாரம் செலுத்துவதையோ, நான் அனுமதிப்பதில்லை. அவள் அமைதியாயிருக்க வேண்டும்.

  16. திருச்சபையின் மேற்பார்வையாளனாக இருக்கவேண்டியவன், குற்றம் காணப்படாதவனாகவும், ஒரு மனைவியை மட்டும் உடைய கணவனாகவும், சுயக்கட்டுப்பாடு உடையவனாகவும், எல்லாவற்றிலும் கட்டுப்பாடு உடையவனாகவும், மதிப்புக்குரியவனாகவும், உபசரிக்கும் பண்பு உடையவனாகவும், போதிக்கும் ஆற்றல் உடையவனாகவும் இருக்கவேண்டும்.

  17. அவன் மதுபான வெறிகொள்ளும் பழக்கம் இல்லாதவனாகவும், கலகக்காரனாக இல்லாமல், கனிவு உடையவனாகவும் இருக்கவேண்டும். அவன் வாக்குவாதம் செய்யாதவனாகவும், பண ஆசை இல்லாதவனாகவும் இருக்கவேண்டும்.

  18. அவன் தனது சொந்த குடும்பத்தை நல்லமுறையில் நடத்தவேண்டும். அவனது பிள்ளைகள் அவனுக்கு மதிப்புக்கொடுத்து, கீழ்ப்படியும்படி பார்த்துக்கொள்ளவும் வேண்டும்.

  19. தனது சொந்தக் குடும்பத்தைப் பராமரிப்பது எப்படியெனத் தெரியாதவன் இறைவனின் திருச்சபையை எப்படி பராமரிக்க முடியும்?

  20. அவன் ஒரு புதிதாக மனமாற்றம் அடைந்த விசுவாசியாய் இருக்கக்கூடாது. அப்படியிருந்தால், அவன் வீண்பெருமை அடைந்து, பிசாசு அடைந்த நியாயத்தீர்ப்புக்குள் விழக்கூடும்.

  21. அவன் திருச்சபையைச் சேராதவர்கள் மத்தியிலும் நற்பெயர் பெற்றவனாயிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் அவமானத்துக்குள்ளாகி, பிசாசின் கண்ணியில் விழுந்துபோக நேரிடலாம்.

  22. அதேபோல் திருச்சபையின் உதவி ஊழியரும் மதிப்புக்குரியவர்களாகவும், உண்மைத்தனம் உள்ளவர்களாகவும் இருக்கவேண்டும். அவர்கள் மதுபானத்தால் வெறிகொள்கிறவர்களாகவோ, நீதியற்ற முறையில் இலாபத்தைத் தேடுகிறவர்களாகவோ இருக்கக்கூடாது.

  23. அவர்கள் விசுவாசத்தின் ஆழமான இரகசியத்தை நல்ல மனசாட்சியுடன் பற்றிப்பிடித்துக் கொள்கிறவர்களாய் இருக்கவேண்டும்.

  24. முதலாவது அவர்களை சோதித்துப் பார்க்கவேண்டும்; அதற்குப் பின்பு அவர்களுக்கெதிராக குற்றம் ஒன்றும் இல்லையானால், அவர்கள் உதவி ஊழியராகப் பணிசெய்யலாம்.

  25. அதேபோல் அவர்களுடைய மனைவிகளும், மதிப்புக்குரிய பெண்களாய் இருக்கவேண்டும். அவர்கள் அவதூறு பேசுகிறவர்களாக இருக்காமல், எல்லாவற்றிலும் கட்டுப்பாடு உள்ளவர்களாகவும் நம்பத்தகுந்தவர்களாகவும் இருக்கவேண்டும்.