Skip to content

Trees பற்றிய பைபிள் வசனங்கள்

132 வசனங்கள் · 87 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. அவர் காட்டுப் புதர்களை கோடரியால் வெட்டி வீழ்த்துவார்; எல்லாம் வல்ல இறைவனின் முன்னே லெபனோன் வீழ்ந்துவிடும்.

  2. ஈசாயின் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் வரும்; அவனுடைய வேர்களிலிருந்து வரும் ஒரு கிளை கனிகொடுக்கும்.

  3. ஆனால் நீயோ ஒதுக்கப்பட்ட கிளையைப்போல் கல்லறைக்கு வெளியே எறியப்பட்டிருக்கிறாய். வாளால் வெட்டிக் கொல்லப்பட்ட பிரேதங்களால் நீ மூடப்பட்டிருக்கிறாய். நீயும் அவர்களுடன் கற்குழிக்குள் எறியப்பட்டிருக்கிறாய். நீ காலின்கீழ் மிதிபடும் பிணத்தைப் போலானாய்.

  4. அத்தகைய காணிக்கையைச் செலுத்தமுடியாத ஏழையோ, உழுத்துப்போகாத மரத்தைத் தெரிவு செய்கிறான். அதைச் செதுக்கி, சரிந்து வீழ்ந்து போகாத விக்கிரகத்தைச் செய்யும்படி திறமைவாய்ந்த ஒரு சிற்பியைத் தேடுகிறான்.

  5. நான் பாலைவனத்திலே கேதுருக்களையும், சித்தீம் மரங்களையும், மிருதுச் செடிகளையும், ஒலிவ மரங்களையும் நாட்டுவேன். பாழ்நிலங்களில் தேவதாரு மரங்களையும், சவுக்கு மரங்களையும், புன்னை மரங்களையும் நான் சேர்த்து நாட்டுவேன்.

  6. அவர்கள் வெளிநிலத்திலுள்ள புல்லைப்போலவும், நீரோடைகளுக்கு அருகில் அலறிச்செடிகளைப் போலவும் விரைவாய் வளருவார்கள்.

  7. அவன் கேதுரு மரங்களை வெட்டி வீழ்த்துகிறான், தேவதாரு மரங்களையும், கர்வாலி மரங்களையும் அவன் தனக்கென்று வைத்துக்கொள்கிறான். அதை அவன் காட்டு மரங்களின் மத்தியில் வளர விடுகிறான்; அவன் சவுக்கு மரத்தை நாட்டுவான், மழை அதை வளரச் செய்கின்றது.

  8. அது மனிதனுக்கு எரிபொருளாக இருக்கிறது; அவன் அவைகளில் ஒரு பகுதியை எடுத்து எரித்து குளிர்காய்கிறான், ஒரு பகுதியால் நெருப்புமூட்டி அப்பத்தை வேகவைக்கிறான். ஆனால் இன்னொரு பகுதியால் ஒரு தெய்வத்தையும் செய்து அதை வழிபடுகிறான்; அவன் ஒரு விக்கிரகத்தையும் செய்து, அதற்குமுன் விழுந்து வணங்குகிறான்.

  9. மரத்தின் ஒரு துண்டை அவன் நெருப்பில் எரிக்கிறான்; அதின்மேல் தன் உணவைத் தயாரிக்கிறான், தன் இறைச்சியையும் வாட்டி, தான் திருப்தியாகச் சாப்பிடுகிறான். அவன் அதில் குளிர்காய்ந்துகொண்டும், “ஆகா! இந்தச் சூடு இதமானது! அருமையான நெருப்பைக் காண்கின்றேன்” என்கிறான்.

  10. எஞ்சிய மரத்தின் பகுதியில் விக்கிரகமொன்றைத் தனது தெய்வமாகச் செய்கிறான்; அதற்குமுன் விழுந்து வழிபடுகிறான். அதை வணங்கி, “நீயே என் தெய்வம், என்னைக் காப்பாற்று!” என்கிறான்.

  11. “இம்மரத்தின் பாதியை நான் எரிபொருளாய் உபயோகித்தேன்; அதன் தணலின்மேல் ரொட்டியை வேகவைத்து, இறைச்சியையும் வாட்டிச் சாப்பிட்டேன். அப்படியிருக்க, எஞ்சிய பகுதியினால் நான் அருவருக்கத்தக்க விக்கிரகத்தைச் செய்யலாமா? ஒரு மரக்கட்டையின் முன்னால் நான் விழுந்து வணங்கலாமா?” என்று சொல்லுவதற்கு எவனுமே சிந்திப்பதில்லை. அதற்கான அறிவோ, விளக்கமோ எவனிடத்திலும் இல்லை.

  12. முட்செடிகளுக்குப் பதிலாக தேவதாரு மரங்களும், காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச் செடிகளும் முளைக்கும். இது யெகோவாவுக்கு புகழ்ச்சியாகவும், அழியாத நித்திய அடையாளமாகவும் இருக்கும்.”

  13. யெகோவாவோடு தன்னை இணைத்துக்கொண்டிருக்கும் அந்நியர், “யெகோவா என்னைத் தமது மக்களிடமிருந்து நிச்சயமாகப் பிரித்துவிடுவார்” என்று சொல்லாமல் இருக்கட்டும். அவ்வாறே அண்ணகன் எவனும், “நான் பட்டுப்போன மரந்தானே” என்று முறைப்பாடு சொல்லாமலும் இருக்கட்டும்.

  14. சீயோனில் துக்கப்படுகிறவர்களுக்கு சாம்பலுக்குப் பதிலாக அழகின் மகுடத்தையும், துயரத்திற்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், மனச்சோர்வுக்குப் பதிலாக துதியின் உடையையும் கொடுப்பதற்காகவும் அவர் என்னை அனுப்பியிருக்கிறார். அவர்கள் யெகோவா தமது சிறப்பை வெளிப்படுத்துவதற்காக, அவரால் நாட்டப்பட்ட நீதியின் விருட்சங்கள் என அழைக்கப்படுவார்கள்.

  15. அவர்கள் கட்டும் வீடுகளில் இனிமேல் வேறெவரும் வாழமாட்டார்கள், அவர்கள் நடுகிறவைகளில் வேறொருவரும் சாப்பிடவுமாட்டார்கள். ஏனெனில் ஒரு மரத்தின் காலத்தைப்போலவே எனது மக்களின் வாழ்நாட்களும் இருக்கும். நான் தெரிந்துகொண்ட மக்களும் தங்கள் கைகளின் பலனில் நெடுநாளாய் மகிழ்ச்சிகொள்வார்கள்.

  16. யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: அவர் என்னை நோக்கி, “எரேமியாவே! நீ காண்பது என்ன?” என்று கேட்டார். நான் அதற்குப் பதிலாக “ஒரு வாதுமை மரக்கிளையைக் காண்கிறேன்” என்றேன்.

  17. சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “மரங்களை வெட்டி வீழ்த்தி எருசலேமிற்கு எதிராக முற்றுகைக் கொத்தளங்களைக் கட்டுங்கள். இந்தப் பட்டணம் தண்டிக்கப்பட வேண்டும்; அது அடக்கு முறையால் நிறைந்திருக்கிறது.

  18. அவர்களுடைய பிள்ளைகளுங்கூட பச்சையான மரங்களுக்கருகிலும் உயர்ந்த குன்றுகளின்மேலுள்ள மேடைகளையும், அசேரா விக்கிரக தூண்களையும் நினைவில் வைத்திருக்கிறார்கள்.

  19. அவன் தண்ணீரின் ஓரத்தில் நடப்பட்டு நீரூற்றருகில் தனது வேர்களை விடும் மரத்தைப்போல இருப்பான். வெப்பம் வரும்போது அது பயப்படுவதில்லை. எப்போதும் அதன் இலைகள் பச்சையாயிருக்கும். வறட்சியான வருடத்தில் அதற்குக் கவலை இல்லை. அது பழங்கொடுக்கத் தவறுவதில்லை.”

  20. “மனுபுத்திரனே, காட்டிலிருக்கிற செடிகளுக்குள் மற்ற எல்லாச் செடிகொடிகளைவிட திராட்சைச்செடிக்கு மேன்மை என்ன?

  21. நீ அவர்களுக்குச் சொல்லவேண்டியதாவது: ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: ‘ஒரு பெரிய கழுகு லெபனோனுக்கு வந்தது. அது பெரிய இறகுகளையும், நீண்ட இறகுகளையும், பலவர்ணமுள்ள அடர்ந்த இறகுகளையும் உடையதாய் இருந்தது. அது ஒரு கேதுருமரத்தின் உச்சிக்கிளையைப் பிடித்தது.

  22. “ ‘அத்துடன் அது உன் நாட்டின் விதைகள் சிலவற்றையும் எடுத்து, வளமிக்க நிலத்தில் விதைத்தது. அதை மிகுந்த தண்ணீரின் ஓரமாய் ஒரு புன்னை மரக்கன்றைப்போல் நாட்டியது.

  23. அப்பொழுது உயர்ந்த மரத்தைத் தாழ்த்தி, தாழ்ந்த மரத்தை உயரமாய் வளரப்பண்ணுகிறவர் யெகோவாவாகிய நானே என்பதை வெளியின் மரங்களெல்லாம் அறிந்துகொள்ளும். பச்சை மரத்தைப் பட்டுப்போகப்பண்ணுகிறவரும், பட்டுப்போனதைத் தளைக்கப்பண்ணுகிறவரும் யெகோவாவாகிய நானே என்பதையும் அவை அறிந்துகொள்ளும். “ ‘யெகோவாவாகிய நானே இதைச் சொன்னேன், நானே இதைச் செய்வேன்,’ ” என்றார்.

  24. படர்ந்திருந்த அதன் கொப்புகளினால் அது அழகில் மாட்சிமையடைந்திருந்தது. ஏனெனில், அதன் வேர்கள் கீழிறங்கி நிறைவான தண்ணீருக்குள் சென்றிருந்தன.

  25. இறைவனின் தோட்டத்தின் கேதுருக்கள்கூட அதற்கு இணையாய் இருக்கமுடியவில்லை. தேவதாரு மரங்களும் அதின் கிளைகளுக்குச் சமானமாயிருக்க முடியவில்லை. அர்மோன் மரங்களையும் அதன் கொப்புகளுக்கு இணைகூற இயலாது. இறைவனின் தோட்டத்து எந்த மரமும் அழகில் அதற்கு நிகராகாது.