உள்ளடக்கத்திற்குச் செல்க

Psalms பற்றிய பைபிள் வசனங்கள்

896 வசனங்கள் · 16 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. ஏனெனில் அரசர்களுக்கு வெற்றியைக் கொடுப்பவரும் உமது அடியவனாகிய தாவீதை விடுவிப்பவரும் நீரே.

  2. கொடிய வாளினின்று என்னை விடுவித்தருளும்; பொய்பேசும் வாய்களையும், வஞ்சனையுள்ள வலது கைகளையுமுடைய வேறுநாட்டைச் சேர்ந்தவரின் கைகளிலிருந்து என்னை விடுவித்துத் தப்புவியும்.

  3. அப்பொழுது எங்கள் மகன்கள் தங்கள் வாலிபத்தில் நன்றாய்ப் பராமரிக்கப்பட்ட செடிகளைப்போல் இருப்பார்கள்; எங்கள் மகள்கள் அரண்மனையை அலங்கரிப்பதற்கென செதுக்கப்பட்ட தூண்களைப்போல் இருப்பார்கள்.

  4. எங்கள் களஞ்சியங்கள் சகலவித விளைபொருட்களாலும் நிரப்பப்படும்; எங்கள் நிலங்களில் எங்கள் ஆடுகள் ஆயிரக்கணக்கிலும், பதினாயிரக்கணக்கிலும் பெருகும்.

  5. எங்கள் எருதுகள் பாரமான பொதிகளை இழுக்கும்; எங்கள் நகரத்தின் சுவர்களில் ஒன்றும் உடைக்கப்படுவதில்லை, கைதிகளாக யாரும் சிறைபிடிக்கப்படுவதில்லை; எங்கள் வீதிகளில் துன்பத்தின் அழுகையும் கேட்கப்படுவதில்லை.

  6. இவற்றை உண்மையாக அடைந்த மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; யெகோவாவைத் தங்கள் இறைவனாகக் கொண்ட மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

  7. யெகோவாவைத் துதியுங்கள். வானங்களிலிருந்து யெகோவாவைத் துதியுங்கள்; மேலே உன்னதங்களில் அவரைத் துதியுங்கள்.

  8. அவருடைய தூதர்களே, எல்லோரும் அவரைத் துதியுங்கள்; அவருடைய பரலோக சேனைகளே, எல்லோரும் அவரைத் துதியுங்கள்.

  9. சூரியனே, சந்திரனே, அவரைத் துதியுங்கள்; பிரகாசிக்கிற நட்சத்திரங்களே, நீங்கள் எல்லோரும் அவரைத் துதியுங்கள்.

  10. மிக உயர்ந்த வானங்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள்; ஆகாயங்களுக்கு மேலுள்ள தண்ணீர்களே, அவரைத் துதியுங்கள்.

  11. அவர் கட்டளையிட அவை படைக்கப்பட்டதால் அவைகள் யெகோவாவினுடைய பெயரைத் துதிக்கட்டும்.

  12. யெகோவா அவைகளை எப்பொழுதும் என்றென்றைக்கும் நிலைப்படுத்தினார்; அழிந்துபோகாத ஒரு விதிமுறையை ஏற்படுத்தியிருக்கிறார்.

  13. பூமியிலிருந்து யெகோவாவைத் துதியுங்கள், பெரிய கடல் உயிரினங்களே, கடலின் ஆழங்களே,

  14. நெருப்பே, பனிக்கட்டி மழையே, உறைபனியே, மேகங்களே, அவருடைய கட்டளையை நிறைவேற்றும் புயல்காற்றே,

  15. மலைகளே, குன்றுகளே, பழமரங்களே, அனைத்து கேதுரு மரங்களே,

  16. உயிரினங்களே, அனைத்து கால்நடைகளே, சிறிய உயிரினங்களே, பறக்கும் பறவைகளே,

  17. பூமியின் அரசர்களே, சகல நாடுகளே, இளவரசர்களே, பூமியிலுள்ள சகல ஆளுநர்களே,

  18. இளைஞர்களே, இளம்பெண்களே, முதியவர்களே, பிள்ளைகளே அவரைத் துதியுங்கள்.

  19. அவர்கள் யெகோவாவினுடைய பெயரைத் துதிக்கட்டும்; ஏனெனில் அவருடைய பெயர் மட்டுமே புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறது; அவருடைய சிறப்பு பூமிக்கும், வானங்களுக்கும் மேலாக இருக்கிறது.

  20. அவர் தம் உண்மையுள்ள பணியாளர்களாகிய, இருதயத்திற்கு உகந்த இஸ்ரயேல் மக்கள் துதிக்கும்படி, அவர் தம்முடைய மக்களுக்கென ஒரு வல்லமையுள்ள அரசனை உயர்த்தியிருக்கிறார்; அதற்காக அவரை எல்லா பரிசுத்தவான்களும் இஸ்ரயேலரும் துதிக்கிறார்கள். யெகோவாவைத் துதியுங்கள்.

  21. அல்லேலூயா, இறைவனை அவருடைய பரிசுத்த இடத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை வெளிப்படும் வானங்களில் அவரைத் துதியுங்கள்.

  22. அவருடைய வல்லமையின் செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்; இணையற்ற அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.

  23. எக்காள சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்; யாழோடும், வீணையோடும் அவரைத் துதியுங்கள்.

  24. தம்புராவுடன் நடனமாடி அவரைத் துதியுங்கள்; கம்பியிசைக் கருவிகளினாலும், புல்லாங்குழலினாலும் அவரைத் துதியுங்கள்.

  25. கைத்தாளங்களின் ஓசையுடன் அவரைத் துதியுங்கள்; அதிர்ந்து ஒலிக்கும் கைத்தாளங்களுடன் அவரைத் துதியுங்கள்.