Psalms பற்றிய பைபிள் வசனங்கள்: Penitential Psalms
Penitential Psalms பற்றிய வசனங்கள்
கம்பியிசைக் கருவிகளுடன் செமினீத் என்னும் இராகத்தில் வாசிக்க இசைக்குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம் யெகோவாவே, உமது கோபத்தில் என்னைக் கண்டியாதேயும்; உம்முடைய கடுங்கோபத்தில் என்னைத் தண்டியாதேயும்;
யெகோவாவே, நான் சோர்ந்துபோகிறேன், என்னில் இரக்கமாயிரும்; யெகோவாவே, என் எலும்புகள் வேதனைக்குள்ளாகி இருக்கின்றன, என்னைக் குணமாக்கும்.
என் ஆத்துமா துயரத்துக்குள்ளாகி இருக்கிறது. எவ்வளவு காலத்திற்கு யெகோவாவே, இது எவ்வளவு காலத்திற்கு?
யெகோவாவே, என் பக்கமாய்த் திரும்பி என்னை விடுவியும்; உமது உடன்படிக்கையின் அன்பினிமித்தம் என்னைக் காப்பாற்றும்.
இறந்தவர்களில் ஒருவரும் உம்மை நினைவுகூர்வதில்லை. பிரேதக் குழியிலிருந்து உம்மைத் துதிக்கிறவன் யார்?
நான் கலங்கியே இளைத்துப் போனேன். இரவு முழுவதும் என் அழுகையின் வெள்ளத்தால் நான் என் படுக்கையை நிரப்பி, நான் அதைக் கண்ணீரால் நனைக்கிறேன்.
என் கண்கள் துக்கத்தால் பெலவீனமடைகின்றன; என் எல்லா பகைவரின் நிமித்தம் அவைகள் மங்குகின்றன.
அக்கிரம செய்கைக்காரர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; ஏனெனில் யெகோவா என் அழுகையைக் கேட்டிருக்கிறார்.
இரக்கத்திற்கான என் கதறலை யெகோவா கேட்டார்; யெகோவா என் மன்றாட்டை ஏற்றுக்கொள்வார்.
என்னுடைய எல்லா எதிரிகளும் வெட்கப்பட்டு மனச்சோர்வு அடைவார்கள்; அவர்கள் பின்னிட்டுத் திரும்பி திடீரென வெட்கப்பட்டுப் போவார்கள்.
மஸ்கீல் என்னும் தாவீதின் சங்கீதம். யாருடைய மீறுதல்கள் மன்னிக்கப்பட்டதோ, யாருடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.
யாருடைய பாவத்தைக்குறித்து, அவர்களுக்கு விரோதமாக யெகோவா கணக்கிடாதிருக்கிறாரோ, யாருடைய ஆவியில் வஞ்சனை இல்லாதிருக்கிறதோ, அவர்கள் பாக்கியவான்கள்.
நான் என் பாவத்தைக்குறித்து மவுனமாய் இருந்தபோது, தினமும் என் அழுகையினால், என் எலும்புகள் பலவீனமாயிற்று.
இரவும் பகலும் உமது கரம் பாரமாயிருந்தது; ஆதலால், கோடைகால வெப்பத்தினால் ஈரம் வறண்டுபோகிறது போல, என் பெலன் வறண்டுபோயிற்று.
அதின்பின் நான் என் பாவத்தை உம்மிடத்தில் ஒத்துக்கொண்டேன்; என் அநியாயத்தையும் நான் மறைக்கவில்லை. நான், “யெகோவாவிடம் என் மீறுதல்களை அறிக்கையிடுவேன்” என்று சொன்னேன்; நீர் என் பாவத்தின் குற்றத்தை மன்னித்தீர்.
ஆகவே பக்தியுள்ள ஒவ்வொருவரும் உம்மைக் காணத்தக்க காலத்தில் உம்மை நோக்கி மன்றாடட்டும்; பெருவெள்ளம் எழும்பும்போது நிச்சயமாய் அது அவர்களை அணுகாது.
நீர் என் மறைவிடமாயிருக்கிறீர்; நீர் என்னை இக்கட்டிலிருந்து பாதுகாத்து, மீட்பின் பாடல்களால் என்னைச் சூழ்ந்துகொள்வீர்.
யெகோவா சொல்கிறதாவது: “நான் உனக்கு அறிவுறுத்தி, நீ போகவேண்டிய வழியை உனக்குப் போதிப்பேன்; நான் உனக்கு கரிசனையோடு ஆலோசனை சொல்லுவேன்.
புத்தியில்லாத குதிரையைப் போலவோ, கோவேறு கழுதையைப் போலவோ நீ இருக்கவேண்டாம்; கடிவாளத்தினால் கட்டுப்படுத்தப்பட்டால் ஒழிய, அவை உன் கட்டுப்பாட்டின்கீழ் வருவதில்லை.”
கொடுமையானவனுக்கு வரும் கேடுகள் அநேகமானவை, ஆனால் யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருக்கிறவனையோ, அவருடைய உடன்படிக்கையின் அன்பு சூழ்ந்துகொள்கிறது.
நீதிமான்களே, நீங்கள் யெகோவாவிடம் களிகூர்ந்து மகிழுங்கள்; உள்ளத்தில் உண்மையுள்ளவர்களே, நீங்கள் அனைவரும் துதி பாடுங்கள்.
சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். யெகோவாவே, துயரத்தின் ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
யெகோவாவே, என் குரலைக் கேளும்; இரக்கத்திற்காக கூப்பிடும் எனது குரலை உமது காதுகள் கவனமாய்க் கேட்கட்டும்.
யெகோவாவே, நீர் பாவங்களைப் பதிவுசெய்து வைத்திருப்பீரானால், யெகோவாவே, யார் உம்முன் நிற்கமுடியும்?
ஆனால், நாங்கள் பயபக்தியுடன் உங்களுக்கு சேவைசெய்ய உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.