உள்ளடக்கத்திற்குச் செல்க

Idolatry பற்றிய பைபிள் வசனங்கள்

447 வசனங்கள் · 205 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. தச்சன் கோலினால் மரத்தை அளந்து, வெண்கட்டியால் குறியிடுகிறான். அவன் அதை உளிகளினால் உருப்படுத்தி, கவராயத்தால் குறிக்கிறான். அவன் மனிதனின் எல்லாச் சிறப்பையும் அதற்குக் கொடுத்து அதை மனித உருவில் வடிவமைக்கிறான்; அது ஒரு கோவிலில் இருக்கும்படியே இப்படிச் செய்கிறான்.

  2. அவன் கேதுரு மரங்களை வெட்டி வீழ்த்துகிறான், தேவதாரு மரங்களையும், கர்வாலி மரங்களையும் அவன் தனக்கென்று வைத்துக்கொள்கிறான். அதை அவன் காட்டு மரங்களின் மத்தியில் வளர விடுகிறான்; அவன் சவுக்கு மரத்தை நாட்டுவான், மழை அதை வளரச் செய்கின்றது.

  3. அது மனிதனுக்கு எரிபொருளாக இருக்கிறது; அவன் அவைகளில் ஒரு பகுதியை எடுத்து எரித்து குளிர்காய்கிறான், ஒரு பகுதியால் நெருப்புமூட்டி அப்பத்தை வேகவைக்கிறான். ஆனால் இன்னொரு பகுதியால் ஒரு தெய்வத்தையும் செய்து அதை வழிபடுகிறான்; அவன் ஒரு விக்கிரகத்தையும் செய்து, அதற்குமுன் விழுந்து வணங்குகிறான்.

  4. மரத்தின் ஒரு துண்டை அவன் நெருப்பில் எரிக்கிறான்; அதின்மேல் தன் உணவைத் தயாரிக்கிறான், தன் இறைச்சியையும் வாட்டி, தான் திருப்தியாகச் சாப்பிடுகிறான். அவன் அதில் குளிர்காய்ந்துகொண்டும், “ஆகா! இந்தச் சூடு இதமானது! அருமையான நெருப்பைக் காண்கின்றேன்” என்கிறான்.

  5. எஞ்சிய மரத்தின் பகுதியில் விக்கிரகமொன்றைத் தனது தெய்வமாகச் செய்கிறான்; அதற்குமுன் விழுந்து வழிபடுகிறான். அதை வணங்கி, “நீயே என் தெய்வம், என்னைக் காப்பாற்று!” என்கிறான்.

  6. அவற்றிற்கு ஒன்றுமே தெரியாது, அவற்றிற்கு ஒன்றும் விளங்குவதில்லை; பார்க்க முடியாதபடி அவைகளின் கண்கள் மூடப்பட்டிருக்கின்றன; விளங்கிக்கொள்ளாதபடி அவைகளின் இருதயமும் அடைக்கப்பட்டு இருக்கின்றன.

  7. “இம்மரத்தின் பாதியை நான் எரிபொருளாய் உபயோகித்தேன்; அதன் தணலின்மேல் ரொட்டியை வேகவைத்து, இறைச்சியையும் வாட்டிச் சாப்பிட்டேன். அப்படியிருக்க, எஞ்சிய பகுதியினால் நான் அருவருக்கத்தக்க விக்கிரகத்தைச் செய்யலாமா? ஒரு மரக்கட்டையின் முன்னால் நான் விழுந்து வணங்கலாமா?” என்று சொல்லுவதற்கு எவனுமே சிந்திப்பதில்லை. அதற்கான அறிவோ, விளக்கமோ எவனிடத்திலும் இல்லை.

  8. அவன் சாம்பலைத் தின்கிறான், அவனுடைய வஞ்சிக்கப்பட்ட இருதயம் அவனைத் தவறான வழியில் நடத்துகிறது. அவன் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள இயலாது, “எனது வலதுகையில் இருக்கிற இந்த விக்கிரகம் பொய்” என்று சொல்லாமலும் இருக்கிறான்.

  9. பேல் தெய்வம் தலை கவிழ்கிறது; நேபோ தெய்வம் குப்புற விழுகிறது. அவர்களுடைய விக்கிரகங்கள் சுமை சுமக்கும் மிருகங்களால் கொண்டு செல்லப்படுகின்றன; ஊர்வலத்தில் சுமக்கப்பட்ட அந்த விக்கிரகங்கள் இப்பொழுது களைத்துப்போன மிருகங்களுக்கு மிகவும் பாரமாயிருக்கின்றன.

  10. அவை ஒன்றாய் குப்புற விழுகின்றன. அந்த உருவச்சிலைகள் தங்களைச் சுமக்கும் மிருகங்களைத் தப்புவிக்கும் ஆற்றலின்றி தாங்களும் சிறைப்பட்டுப் போகின்றன.

  11. சிலர் தங்கள் பைகளிலிருந்து தங்கத்தை அள்ளிக்கொட்டி, தராசுகளில் வெள்ளியை நிறுக்கிறார்கள்; அதை ஒரு தெய்வமாகச் செய்யும்படி அவர்கள் ஒரு கொல்லனை கூலிக்கு அமர்த்துகிறார்கள்; பின் அவர்கள் தாழ்ந்து வீழ்ந்து அதை வணங்குகிறார்கள்.

  12. அதைத் தமது தோள்களில் தூக்கிச் சுமக்கிறார்கள். அவர்கள் அதை அதற்குரிய இடத்தில் வைக்கிறார்கள். அது அங்கேயே நிற்கிறது, அந்த இடத்திலிருந்து அதனால் நகரமுடியாது. ஒருவன் அதை நோக்கி அழுதாலும் அது பதிலளிப்பதில்லை; ஒருவனை அவனுடைய துன்பங்களிலிருந்து காப்பாற்ற அதனால் இயலாது.

  13. “நீ தொடர்ந்து உன் மந்திரங்களைச் சொல்லு, பலவிதமான உன் மாந்திரீக வேலைகளில் ஈடுபடு; இதைத்தான் உன் சிறுவயதிலிருந்தே நீ செய்கிறாய். அதனால் ஒருவேளை நீ வெற்றி பெறலாம், ஒருவேளை நீ பயங்கரத்தைக் கொண்டுவரலாம்.

  14. நீ பெற்றுக்கொண்ட ஆலோசனை எல்லாம் உனக்குச் சோர்வையே உண்டாக்கியது; உன்னுடைய சோதிடர்களும் நட்சத்திரங்களைப் பார்த்து, மாதந்தோறும் இராசிபலன் கூறுகிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடப் போவதிலிருந்து உன்னைக் காப்பாற்றட்டும்.

  15. உண்மையாகவே அவர்கள் அறுவடை செய்த பயிரின் தாளடியைப்போல் இருக்கிறார்கள்; நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும். நெருப்புச் சுவாலையிலிருந்து தங்களையே விடுவித்துக்கொள்ள அவர்களால் முடியாது. அது குளிர்காயக்கூடிய தணலாகவோ, அருகில் உட்காரத்தக்க நெருப்பாகவோ இருக்காது.

  16. உன் சிறுவயதுமுதல் நீ ஈடுபட்டுத் தொடர்புகொண்டிருந்த, மந்திரவாதிகளினால் இவற்றை மட்டுமே உனக்குச் செய்யமுடியும். அவர்களில் ஒவ்வொருவனும் தனது தவறான வழியிலேயே போகிறான்; உன்னைக் காப்பாற்றக் கூடியவன் எவனுமே இல்லை.

  17. “ஆனால், மந்திரவாதிகளின் பிள்ளைகளே, விபசாரிகளுக்கும் வேசிகளுக்கும் பிறந்த பிள்ளைகளே, நீங்கள் இங்கே வாருங்கள்.

  18. யாரை நீங்கள் ஏளனம்பண்ணுகிறீர்கள்? யாரைப் பழிக்க உங்கள் வாயைத் உங்கள் நாவை நீட்டுகிறீர்கள்? நீங்கள் கலகக்காரரின் பிள்ளைகள் அல்லவா? பொய்யரின் சந்ததியல்லவா?

  19. நீங்கள் தேவதாரு மரங்களுக்கிடையிலும், ஒவ்வொரு படர்ந்த மரத்தினடியிலும் காமவெறி கொள்கிறீர்கள்; பாறைகளின் வெடிப்புகளிலும், தொங்கும் பாறைகளின் கீழும் உங்கள் பிள்ளைகளைப் பலியிடுகிறீர்கள்.

  20. வெடிப்புகளின் வழுவழுப்பான கற்களின் இடையில் இருக்கும் விக்கிரங்களே உங்கள் பங்கு; அவை, அவைதான் உங்கள் பாகம். ஆம், அவைகளுக்கே நீங்கள் பானபலியை வார்த்து, தானியபலியையும் செலுத்தியிருக்கிறீர்கள். இவை வெளிப்படையாயிருக்க நான் உங்களுக்குக் கருணைகாட்ட வேண்டுமோ?

  21. நீ உயரமும், உன்னதமுமான குன்றின்மேல் உன் படுக்கையை விரித்தாய்; பலிகளைச் செலுத்துவதற்காக நீ மேலே போனாய்.

  22. உனது கதவுகளுக்கும், உனது கதவு நிலைகளுக்கும் பின்னால் நீ உனது தெய்வச் சின்னங்களை வைத்தாய். என்னைக் கைவிட்டு உன் படுக்கையை விரித்தாய், அதிலேறி அதை அகலமாக்கினாய்; நீ எவர்களுடைய படுக்கையை விரும்பினாயோ அவர்களோடு ஒப்பந்தம் செய்தாய், நீ அவர்களுடைய நிர்வாணத்தைப் பார்த்தாய்.

  23. நீ ஒலிவ எண்ணெயுடன் மோளேக் தெய்வத்திடம் போனாய்; நீ வாசனைத் தைலங்களை அதிகமாய்ப் பூசிக்கொண்டாய். நீ உனது தூதுவரை வெகுதூரத்திற்கு அனுப்பினாய்; அவர்களைப் பாதாளத்துக்குள்ளுங்கூட இறங்கப்பண்ணினாய்!

  24. உங்கள் எல்லா முயற்சிகளாலும் நீங்கள் களைத்துப்போனீர்கள், ஆயினும் நீங்கள், ‘அது பயனற்றது’ என்று சொல்லவில்லை. நீங்கள் கையில் புதிய பெலனை பெற்றபடியால் சோர்ந்துபோகவில்லை.

  25. “நீ யாருக்குப் பயந்து, நடுங்கி எனக்குப் பொய்யாய் நடந்தாய்? என்னை நினையாமலும் இதைப்பற்றி உன் இருதயத்தில் சிந்திக்காமலும் இருந்தாய்? நான் நெடுங்காலமாக அமைதியாய் இருந்தபடியினாலன்றோ நீ எனக்குப் பயப்படாது போனாய்?