மத்தேயு 27:41-65
41
அவ்விதமாகவே தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும், தலைவர்களும், அவரை ஏளனம் செய்தார்கள்.
42
மேலும் அவர்கள், “இவன் மற்றவர்களை இரட்சித்தான், ஆனால் தன்னையோ இரட்சித்துக்கொள்ள முடியாதிருக்கிறான்! இவன் இஸ்ரயேலுக்கு அரசன்! இவன் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும்; அப்பொழுது நாங்கள் இவனில் விசுவாசம் வைப்போம்.
43
இவன் இறைவனைச் சார்ந்து இருக்கிறான். ‘நான் இறைவனின் மகன்’ என்றானே. இறைவனுக்கு விருப்பமானால், இப்பொழுது அவர் இவனை விடுவிக்கட்டும்” என்றார்கள்.
44
அவ்விதமாகவே, இயேசுவுடனே சிலுவையில் அறையப்பட்ட கள்வர்களும் அவரை ஏளனம் செய்தார்கள்.
45
நண்பகல் பன்னிரண்டு மணியிலிருந்து, பூமியெங்கும் இருள் சூழ்ந்து பிற்பகல் மூன்று மணிவரை நீடித்திருந்தது.
46
பிற்பகல் மூன்றுமணியளவில், இயேசு பலத்த சத்தமிட்டு, “ஏலீ, ஏலீ, லாமா சபக்தானி” என்று சத்தமாய்க் கூப்பிட்டார். “என் இறைவனே, என் இறைவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்பதே அதன் அர்த்தமாகும்.
47
அங்கே நின்றவர்களில் சிலர் இதைக் கேட்டு தவறாக விளங்கிக்கொண்டு, “அவன் எலியாவைக் கூப்பிடுகிறான்!” என்றார்கள்.
48
உடனே அவர்களில் ஒருவன் ஓடிப்போய் கடற்பஞ்சைக் கொண்டுவந்து, அதைப் புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து, ஒரு கோலில் மாட்டி இயேசுவுக்குக் குடிக்கக் கொடுத்தான்.
49
மற்றவர்களோ, “அவனைவிட்டுவிடு. எலியா அவனைக் காப்பாற்ற வருகிறானா பார்ப்போம்” என்றார்கள்.
50
இயேசு மீண்டும் பலத்த சத்தமிட்டுக் கூப்பிட்ட பின்பு, தமது ஆவியை விட்டார்.
51
அவ்வேளையில் ஆலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது; பூமியதிர்ந்தது, கற்பாறைகள் பிளந்தன;
52
கல்லறைகளும் நொறுங்குண்டு திறந்தன; இறந்து போயிருந்த பல பரிசுத்தவான்களின் உடல்கள் உயிருடன் எழுந்திருந்தன.
53
அவர்கள் கல்லறைகளை விட்டு வெளியே வந்தார்கள். இயேசு உயிருடன் எழுந்தபின், அவர்கள் பரிசுத்த நகரத்திற்குள் சென்று, பலருக்குக் காணப்பட்டார்கள்.
54
இயேசுவைக் காவல் காத்துக்கொண்டிருந்த நூற்றுக்குத் தலைவனும் அவனோடிருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் நடந்த எல்லாவற்றையும் கண்டு பயமடைந்தார்கள். “நிச்சயமாக இவர் இறைவனின் மகனே!” என்று வியப்புடன் சொன்னார்கள்.
55
பல பெண்கள் தூரத்தில் நின்று, அதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இயேசுவின் தேவைகளை கவனிப்பதற்கு கலிலேயாவிலிருந்து அவரைப் பின்பற்றி வந்திருந்தார்கள்.
56
அவர்களில் மகதலேனா மரியாளும், யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் மகன்களின் தாயும் இருந்தார்கள்.
57
மாலை வேளையானபோது, அரிமத்தியா பட்டணத்திலிருந்து யோசேப்பு என்னும் பெயருடைய ஒரு செல்வந்தன் வந்தான். இவனும் இயேசுவுக்கு சீடனாயிருந்தான்.
58
அவன் பிலாத்துவினிடம் போய், இயேசுவின் உடலைத் தரும்படி கேட்டான். பிலாத்துவும் அதை அவனுக்குக் கொடுக்கும்படி உத்தரவிட்டான்.
59
யோசேப்பு அந்த உடலை எடுத்து, சுத்தமான மென்பட்டுத் துணியினால் சுற்றி,
60
அதைத் தனக்குச் சொந்தமான கற்பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் வைத்தான்; பின்பு அவன் கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனான்.
61
அப்பொழுது மகதலேனா மரியாளும், மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிரே உட்கார்ந்திருந்தார்கள்.
62
மறுநாள் பஸ்கா என்ற பண்டிகையின் முதல் நாளாகிய ஆயத்த நாளிலே, தலைமை ஆசாரியர்களும், பரிசேயர்களும் பிலாத்துவிடம் போனார்கள்.
63
அவர்கள் அவனிடம், “ஐயா அந்த ஏமாற்றுக்காரன் உயிரோடிருக்கும்போது, ‘மூன்று நாட்களுக்குபின் நான் உயிரோடு எழுந்திருப்பேன்’ என்று சொன்னது எங்களுக்கு நினைவிருக்கிறது.
64
ஆகவே அந்தக் கல்லறை மூன்றாம் நாள்வரைக்கும் பத்திரமாய் பாதுகாக்கப்படும்படி உத்தரவு கொடுக்கவேண்டும். இல்லையெனில் அவனது சீடர்கள் ஒருவேளை வந்து அந்த உடலைத் திருடிச் சென்றுவிட்டு, இறந்தோரில் இருந்து உயிரோடு எழுந்துவிட்டான் என்று மக்களுக்குச் சொல்லுவார்கள். அப்படி நடந்தால் முந்தின ஏமாற்று வேலையைவிட பிந்தினது மோசமானதாயிருக்கும்” என்றார்கள்.
65
அதற்குப் பிலாத்து அவர்களிடம், “காவல் வீரர்களைக் கூட்டிக்கொண்டுபோய் உங்களுக்குத் தெரிந்தபடி கல்லறையைப் பத்திரமாய்க் காவல் செய்யுங்கள்” என்றான்.
Settings