Skip to content

Ziba பற்றிய பைபிள் வசனங்கள்

22 வசனங்கள் · 2 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

  1. இதன்பின்பு தாவீது, “யோனத்தானுக்காக நான் தயவுகாட்டும்படி, சவுலின் குடும்பத்தில் யாராவது இன்னும் உயிரோடிருக்கிறார்களா?” என்று கேட்டான்.

  2. அப்பொழுது சீபா என்னும் பெயருடைய சவுலின் வீட்டுப் பணியாளன் ஒருவன் இருந்தான். அவனைத் தாவீதுக்கு முன்பாக வரும்படி அழைத்தார்கள். அரசன் அவனிடம், “நீ தானா சீபா?” என்று கேட்டான். அதற்கு அவன், “உமது அடியானே தான்” என்றான்.

  3. அரசன் அவனிடம், “இறைவனுடைய தயவை நான் காட்டும்படி சவுலின் குடும்பத்தில் ஒருவரும் இல்லையா?” என்று கேட்டான். அதற்கு சீபா, “இரண்டு கால்களும் முடமான யோனத்தானின் மகன் ஒருவன் இன்னும் உயிரோடிருக்கிறான்” என்றான்.

  4. “அவன் எங்கே?” என அரசன் கேட்டான். அதற்கு சீபா, “அவன் லோதேபாரில் அம்மியேலின் மகன் மாகீரின் வீட்டில் இருக்கிறான்” என்றான்.

  5. எனவே தாவீது அரசன், அம்மியேலின் மகன் மாகீரின் வீட்டிலிருந்த யோனத்தானின் மகனை லோதேபாரிலிருந்து கொண்டுவரச் செய்தான்.

  6. சவுலின் மகனான யோனத்தானின் மகன் மேவிபோசேத் தாவீதிடம் வந்தபோது, முகங்குப்புற விழுந்து வணக்கம் தெரிவித்தான். அப்போது தாவீது அவனிடம், “மேவிபோசேத்தே” என்றான். அதற்கு அவன், “இதோ உமது அடியேன்” என்றான்.

  7. தாவீது அவனிடம், “பயப்படாதே; உன் தகப்பன் யோனத்தானின் நிமித்தம் நிச்சயம் உனக்கு தயவுகாட்டுவேன். உன் பாட்டன் சவுலுக்கு சொந்தமாயிருந்த நிலங்களையெல்லாம் உனக்குத் திரும்பக் கொடுப்பேன். மேலும் நீ எப்போதும் என்னுடைய பந்தியில் சாப்பிடுவாய்” என்றான்.

  8. இதைக் கேட்ட மேவிபோசேத் தாவீதை வணங்கி, “செத்த நாய் போன்ற என்னை நீர் கவனத்தில்கொள்வதற்கு உமது அடியவன் எம்மாத்திரம்?” என்றான்.

  9. அதன்பின் அரசன் சவுலின் பணியாளனாயிருந்த சீபாவை அழைப்பித்து அவனிடம், “சவுலுக்கும் அவன் குடும்பத்தாருக்கும் சொந்தமாயிருந்த யாவற்றையும் உன் எஜமானின் பேரனுக்குக் கொடுத்துள்ளேன்.

  10. நீயும் உன் மகன்களும் உன் பணியாட்களும் அந்த நிலத்தை அவனுக்காகப் பயிரிடுங்கள். உன் எஜமானுடைய பேரனின் பராமரிப்புக்காக அதன் விளைச்சலைக் கொண்டுவாருங்கள். ஆனாலும் உன் எஜமானின் பேரன் மேவிபோசேத் எப்போதும் என்னுடைய பந்தியில் சாப்பிடுவான்” என்றான். சீபாவுக்கு பதினைந்து மகன்களும் இருபது வேலைக்காரரும் இருந்தார்கள்.

  11. அப்பொழுது சீபா அரசனிடம், “என் தலைவனாகிய அரசன் எனக்குக் கட்டளையிட்டவைகளை எல்லாம் நான் நிறைவேற்றுவேன்” என்றான். எனவே மேவிபோசேத் அரசனின் மகன்களில் ஒருவனைப்போல் தாவீதின் பந்தியில் சாப்பிட்டு வந்தான்.

  12. மேவிபோசேத்துக்கு மீகா என்னும் பெயருடைய வாலிபனான ஒரு மகன் இருந்தான். சீபாவின் குடும்பத்தார் அனைவரும் மேவிபோசேத்துக்கு பணியாட்களாயிருந்தார்கள்.

  13. மேவிபோசேத்துக்கு இரண்டு கால்களும் முடமாயிருந்தபடியாலும், எப்பொழுதும் அரசனுடைய பந்தியில் சாப்பிட்டபடியாலும் எருசலேமிலேயே வாழ்ந்து வந்தான்.

  14. தாவீது மலையுச்சிக்கு அப்பால் சிறிது தூரம் சென்றபோது மேவிபோசேத்தின் பராமரிப்பாளனான சீபா, அவனைச் சந்திப்பதற்காக அங்கே வந்து காத்திருந்தான். அவன் இருநூறு அப்பங்களையும், நூறு முந்திரி அடைகளையும், இருநூறு அத்திப்பழ அடைகளையும், ஒரு திராட்சை இரசக் குடுவையையும் கழுதைகளின்மேல் ஏற்றிக்கொண்டு வந்திருந்தான்.

  15. அப்பொழுது அரசன் சீபாவிடம், “ஏன் இவற்றையெல்லாம் கொண்டுவந்தாய்?” என்று கேட்டான். அதற்கு சீபா, “அரச குடும்பத்தார் ஏறிச் செல்வதற்கு கழுதைகளையும், மனிதர் சாப்பிடுவதற்கு அப்பங்களையும், பழங்களையும், பாலைவனத்தில் களைப்படைந்தவர்களை உற்சாகப்படுத்த திராட்சை இரசத்தையும் கொண்டுவந்திருக்கிறேன்” என்றான்.

  16. அதைக்கேட்ட அரசன் அவனிடம், “உன் எஜமானின் பேரன் மேவிபோசேத் எங்கே” என்று கேட்டான். அதற்கு சீபா, “அவர் எருசலேமில் இருக்கிறார்; ‘இன்று இஸ்ரயேல் மக்கள் என் பாட்டனான சவுலின் அரசாட்சியை எனக்குத் திரும்பவும் கொடுப்பார்கள்’ என்று எண்ணுகிறார்” என்றான்.

  17. அரசன் சீபாவிடம், “மேவிபோசேத்துக்கு உரிமையானவைகளெல்லாம் இப்பொழுது உனக்கு உரிமையானவைகளே” என்றான். அப்பொழுது சீபா, “என் தலைவனாகிய அரசனிடம் எனக்குத் தொடர்ந்து தயவு கிடைக்கட்டும். நான் தாழ்மையுடன் வணங்குகிறேன்” என்று சொன்னான்.

  18. அவனோடு பென்யமீன் கோத்திரத்தார் ஆயிரம்பேரும், சவுலின் வீட்டுப் பராமரிப்பாளனான சீபாவும், அவனுடைய பதினைந்து மகன்களும், இருபது பணியாட்களும் வந்தார்கள். அவர்கள் அரசன் இருந்த யோர்தானுக்கு விரைந்து சென்றார்கள்.

  19. அதற்கு அவன், “என் தலைவனாகிய அரசே! உம்முடைய அடியவன் முடவனாகையால் நான் என் பணியாளன் சீபாவிடம், ‘என் கழுதைமேல் சேணம் வைத்து அதில் ஏற்றி அரசனுடன் போகும்படி உதவிசெய் எனக் கேட்டேன்.’ ஆனால் என் பணியாளன் சீபா எனக்குத் துரோகம் செய்தான். உதவிசெய்யாமல் ஏமாற்றினான்.

  20. அதுவுமன்றி என் தலைவனாகிய அரசனுக்கு என்னைப்பற்றி வீண் அவதூறு சொன்னான். என் தலைவனாகிய அரசன் எனக்கு இறைவனின் தூதனைப்போல் இருக்கிறீர். எனவே உமக்கு விருப்பமானதைச் செய்யும்.

  21. நானும் என் பாட்டனாரின் சந்ததியினரும் என் தலைவனாகிய அரசனிடம் மரணத்தைத் தவிர வேறு எதையும் பெற தகுதியற்றவர்களாய் இருந்தோம். ஆனாலும் உமது அடியவனுக்கு உம்முடைய பந்தியில் அமர்ந்திருப்பவர்களுடன் ஒரு இடத்தைக் கொடுத்தீர்; ஆதலால் இப்பொழுதும் உம்மிடம் வேண்டுகோள் விடுப்பதற்கு எனக்கு என்ன தகுதியிருக்கிறது?” எனப் பதிலளித்தான்.

  22. அப்பொழுது அரசன் அவனிடம், “இதைப்பற்றி நீ இன்னும் அதிகமாய் பேசுவானேன்; உங்கள் உரிமை நிலத்தைப் பங்கிட்டுக்கொள்ளும்படி சீபாவுக்கும், உனக்கும் கட்டளையிடுகிறேன்” என்றான்.