உள்ளடக்கத்திற்குச் செல்க

Idolatry பற்றிய பைபிள் வசனங்கள்

447 வசனங்கள் · 205 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. அவர் என்னிடம், “மனுபுத்திரனே, வடக்கு நோக்கிப்பார்” என்றார். அவ்வாறே நான் பார்த்தேன். பலிபீட வாசலின் வடக்கே உட்செல்லும் வழியில் அந்த எரிச்சல் உண்டாக்குகிற விக்கிரகம் இருந்தது.

  2. அவர் என்னிடம், “மனுபுத்திரனே, அவர்கள் செய்கிறதைக் காண்கிறாயா? இஸ்ரயேல் குடும்பத்தார் மிக அருவருப்பான செயல்களை இங்கு செய்கிறார்களே. அவை என்னை என் பரிசுத்த இடத்திலிருந்து தூரமாக விலக்கிவிடுமே. ஆனால் இவைகளைவிட அருவருப்பான காரியங்களையும் நீ காண்பாய்” என்றார்.

  3. பின்பு அவர் என்னை முற்றத்து வாசலுக்குக் கொண்டுவந்தார். அங்கே சுவரில் ஒரு துளையைக் கண்டேன்.

  4. அவர் என்னிடம், “மனுபுத்திரனே சுவரில் ஒரு துளையிடு” என்றார். நான் துளையிட்டபோது, ஒரு வாசல் இருந்தது.

  5. அவர் என்னிடம், “நீ உள்ளே போய், அங்கே அவர்கள் செய்யும் கொடியதும், அருவருக்கத்தக்கதுமான காரியங்களைப் பார்” என்றார்.

  6. நான் உள்ளே போய்ப் பார்த்தேன். இதோ எல்லா விதமான ஊரும்பிராணிகள், அருவருப்பான மிருகங்கள் ஆகியவற்றின் உருவங்களும், இஸ்ரயேலரின் சகல விக்கிரகங்களும், சுவரிலே சித்திரங்களாய்த் தீட்டப்பட்டிருந்தன.

  7. இஸ்ரயேல் குடும்பத்தைச் சேர்ந்த எழுபது சபைத்தலைவர்களும் அவைகளின் முன்னே நின்றார்கள். அவர்களின் நடுவே சாப்பானின் மகன் யசனியாவும் நின்றான். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கைகளிலே தூபகிண்ணங்களை ஏந்தியபடி நின்றார்கள். அவைகளிலிருந்து வாசனைப் புகை எழும்பிற்று.

  8. அப்பொழுது அவர் என்னிடம், “மனுபுத்திரனே, இஸ்ரயேல் குடும்பத்தின் சபைத்தலைவர்கள் ஒவ்வொருவரும், அவரவர் விக்கிரகங்களின் முன் இருளில் செய்கிறதைக் கண்டாயா? அவர்கள், ‘யெகோவா எங்களைப் பார்க்கிறதில்லை; யெகோவா நாட்டைக் கைவிட்டுவிட்டார்’ ” என்கிறார்கள்.

  9. மேலும் யெகோவா என்னிடம், “இவைகளைப் பார்க்கிலும் மிக மோசமான காரியங்களையும் அவர்கள் செய்வதை நீ காண்பாய்” என்றார்.

  10. பின்பு அவர் என்னை யெகோவாவினுடைய ஆலயத்தின் வடக்கு வாசலின் முன் கொண்டுவந்தார். அங்கே தம்மூஸ் என்னும் தெய்வத்திற்காக பெண்கள் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பதைக் கண்டேன்.

  11. அவர் என்னிடம், “மனுபுத்திரனே, இதைப் பார்த்தாயா? இதிலும் அருவருப்பான காரியங்களையும் நீ காண்பாய்” என்றார்.

  12. பின்பு அவர் என்னை யெகோவாவினுடைய ஆலயத்தின் உள்முற்றத்திற்குக் கொண்டுவந்தார். அங்கே ஆலய வாசல் நடையிலே பலிபீடத்துக்கும், முன் மண்டபத்திற்கும் நடுவாக ஏறத்தாழ இருபத்தைந்துபேர் இருந்தார்கள். அவர்கள் தங்கள் முதுகை யெகோவாவினுடைய ஆலயத்திற்கும், முகத்தை கிழக்குத் திசைக்கும் நேராய்த் திருப்பி, கிழக்கிலே உதிக்கும் சூரியனைத் தலைகுனிந்து வழிபட்டுக்கொண்டு இருந்தார்கள்.

  13. அவர் என்னிடம், “மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? யூதா குடும்பத்தினர் இங்கே செய்யும் இந்த அருவருப்பான காரியங்கள், ஒரு சிறிய காரியமாய் இருக்கிறதா? அவர்கள் வன்செயலால் நாட்டை நிரப்பி, தொடர்ந்து எனக்குக் கோபமூட்ட வேண்டுமோ? இவர்களைப் பார்! திராட்சைக்கிளையைத் தங்கள் மூக்கிற்கு நேராகத் தூக்கிப் பிடிக்கிறார்களே.

  14. ஆகையால் நான் அவர்களை கோபத்துடனேயே நடத்துவேன். அவர்கள்மீது நான் கருணை காட்டப்போவதில்லை. நான் அவர்களைத் தப்பவிடப் போவதுமில்லை. அவர்கள் என் செவிகள் கேட்க சத்தமாய்க் கூப்பிட்டாலும், நான் அவர்களுக்குச் செவிகொடுக்கமாட்டேன்.”

  15. பின்பு யெகோவா, “நகர் காவலரை இங்கு கொண்டுவாருங்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கையில் ஆயுதத்துடன் வரட்டும்” என உரத்த குரலில் கூப்பிடுவதை நான் கேட்டேன்.

  16. அப்பொழுது ஆறு மனிதர் வடக்கை நோக்கியிருந்த மேல் வாசலின் திசையிலிருந்து வருவதை நான் கண்டேன். அவர்கள் ஒவ்வொருவனுடைய கையிலும் பயங்கர ஆயுதம் இருந்தது. அவர்களுடன் மென்பட்டு உடை உடுத்தி, ஒரு மனிதன் இருந்தான். அவன் தன் இடுப்பில் எழுத்தாளனுக்குரிய மைக்கூட்டினை கட்டியிருந்தான். அவர்கள் உள்ளே வந்து வெண்கலப் பலிபீடத்தின் அருகே நின்றார்கள்.

  17. அப்பொழுது கேருபீன்மேலிருந்த இஸ்ரயேலின் இறைவனது மகிமை அங்கிருந்து மேலெழுந்து, ஆலய வாசற்படிக்கு வந்தது. பின்பு மென்பட்டு உடை உடுத்தி, எழுத்தாளனுக்குரிய மைக்கூட்டைத் தன் இடுப்பில் கட்டியிருந்த மனிதனை யெகோவா கூப்பிட்டார்.

  18. அவர் அவனிடம், “எருசலேம் பட்டணமெங்கும் போய், அங்கே செய்யப்படுகின்ற எல்லாவித அருவருப்பான காரியங்களுக்காகவும் வருந்திப் புலம்புகிறவர்களின் நெற்றியில் ஒரு அடையாளத்தை இடு” என்றார்.

  19. நான் கவனித்துக் கேட்டுக்கொண்டிருக்கும்போதே, அவர் மற்றவர்களிடம், “நீங்கள் இவன் பின்னே பட்டணமெங்கும் சென்று கொல்லுங்கள். இரக்கமோ கருணையோ காட்டவேண்டாம்.

  20. வயது முதிர்ந்த ஆண்கள், வாலிபர், கன்னியர், பெண்கள், பிள்ளைகள் எல்லோரையுமே கொல்லுங்கள். ஆனால் தங்கள் நெற்றிகளில் அடையாளத்தைக் கொண்டிருக்கும் ஒருவரையும் தொடவேண்டாம். அதை என் பரிசுத்த இடத்திலிருந்தே ஆரம்பியுங்கள்” என்றார். அப்படியே அவர்கள் கொல்லுவதை ஆலயத்தின் முன்னால் இருந்த சபைத்தலைவர்களிலிருந்து ஆரம்பித்தார்கள்.

  21. பின்பு அவர் அவர்களிடம், “புறப்படுங்கள் நீங்கள் கொலையுண்டவர்களாலே முற்றத்தை நிரப்பி ஆலயத்தைத் அசுத்தப்படுத்துங்கள்” என்றார். அவ்வாறே அவர்கள் எருசலேம் நகரெங்கும் சென்று கொல்லத் தொடங்கினார்கள்.

  22. அவர்கள் கொலைசெய்து கொண்டிருக்கையில் நான் தனியாய் விடப்பட்டிருந்தேன். அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்து கதறி அழுது, “ஆ! ஆண்டவராகிய யெகோவாவே! நீர் உம்முடைய கோபத்தை இம்முறை எருசலேமின்மேல் ஊற்றும்போது, இஸ்ரயேலின் மீதியான யாவரையும் அழித்து விடுவீரோ?” என்று கேட்டேன்.

  23. அவர் எனக்குப் பதிலளித்து, “இஸ்ரயேல், யூதா குடும்பங்களின் பாவம் மிகுதியாய்ப் பெருகிவிட்டது. நாடு இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது. நகரம் அநீதியினால் நிறைந்திருக்கிறது. அவர்களோ, ‘யெகோவா நாட்டைக் கைவிட்டுவிட்டார்; நடப்பவை இன்னதென்று யெகோவா அறியாதிருக்கிறார்’ என்று சொல்கிறார்கள்.

  24. எனவே நான் அவர்கள்மேல் தயவு காட்டுவதுமில்லை, அவர்களைத் தப்பவிடுவதுமில்லை. ஆனால் அவர்களுடைய நடத்தையின் பலனையோ அவர்கள் தலையின்மேல் வரப்பண்ணுவேன்” என்றார்.

  25. அப்பொழுது மென்பட்டு உடை உடுத்தி, எழுத்தாளனுக்குரிய மைக்கூட்டைத் தன் இடுப்பில் கட்டியிருந்த அம்மனிதன் திரும்பிவந்து, “நீர் எனக்குக் கட்டளையிட்டபடியே நான் செய்துவிட்டேன்” என்று அறிவித்தான்.