உள்ளடக்கத்திற்குச் செல்க

Faith பற்றிய பைபிள் வசனங்கள்

543 வசனங்கள் · 124 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. அப்பொழுது நேபுகாத்நேச்சார் அரசன், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர்மீது கடுங்கோபம் கொண்டான். அவர்களைப்பற்றி அவன் கொண்டிருந்த மனப்பாங்கு மாற்றமடைந்தது. அவன் அந்த சூளையை வழக்கத்தைவிட ஏழுமடங்கு அதிகமாகச் சூடாக்கும்படி கட்டளையிட்டான்.

  2. பின்பு சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைக் கட்டி, பற்றியெரிகிற நெருப்புச்சூளையிலே போடும்படி தனது படையிலுள்ள வலிமையான போர் வீரருக்குக் கட்டளையிட்டான்.

  3. அப்படியே இந்த மனிதர் தாங்கள் அணிந்திருந்த மேலுடைகளோடும், காற்சட்டைகளோடும், தலைப்பாகைகளோடும் மற்றும் உடைகளோடும் கட்டப்பட்டு, பற்றியெரியும் நெருப்புச்சூளையினுள் எறியப்பட்டார்கள்.

  4. அரசனின் கட்டளை அவசரமானதாயிருந்ததாலும் சூளையோ மிகவும் சூடாயிருந்ததாலும் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரைக் கொண்டுசென்ற வீரர்களையோ நெருப்பு ஜூவாலை எரித்துப்போட்டது.

  5. அதேவேளை இம்மூவரும் உறுதியாகக் கட்டுண்டவர்களாய் பற்றியெரியும் நெருப்புச்சூளைக்குள் விழுந்தார்கள்.

  6. அப்பொழுது அதைப் பார்த்துக்கொண்டிருந்த நேபுகாத்நேச்சார் அரசன் ஆச்சரியத்துடன் துள்ளி எழுந்து, தனது ஆலோசகர்களிடம், “நாம் மூவரைத்தானே கட்டி நெருப்புச்சூளையில் போட்டோம் எனக் கேட்டான்?” அதற்கு அவர்கள், “நிச்சயமாக! ஆம் அரசே!” என்றார்கள்.

  7. அவன், “இதோ பாருங்கள், நான்கு மனிதர்கள் நெருப்பிலே நடந்து திரிகிறதைக் காண்கிறேன். அவர்கள் கட்டப்படாதவர்களாயும், எதுவித சேதமும் இன்றியும் இருக்கிறார்கள். நான்காவது ஆள், பார்ப்பதற்கு தெய்வங்களின் மகன் போலிருக்கிறானே என்றான்.”

  8. அப்பொழுது நேபுகாத்நேச்சார் சுவாலித்து எரிகிற சூளையின் வாயில் அருகே நெருங்கிப்போய், “சாத்ராக்கே, மேஷாக்கே, ஆபேத்நேகோவே, மகா உன்னதமான இறைவனின் அடியவர்களே, உடனே வெளியேறுங்கள்; இங்கே வாருங்கள்” என்று சத்தமிட்டான். அப்படியே சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் நெருப்பிலிருந்து வெளியே வந்தார்கள்.

  9. அப்பொழுது சிற்றரசர்களும், நிர்வாக அதிகாரிகளும், ஆளுநர்களும், அரச ஆலோசகர்களும் அவர்களைச் சுற்றி நெருங்கி வந்தார்கள். நெருப்போ அவர்களுடைய உடலுக்கு ஒரு தீங்குகூட விளைவிக்காமலும், தலைமயிர் கருகாமலும் இருப்பதைக் கண்டார்கள். அவர்களுடைய மேலுடைகள் எரியவும் இல்லை. அவர்கள்மேல் நெருப்பின் புகை வாடையும் இருக்கவில்லை.

  10. அப்பொழுது நேபுகாத்நேச்சார் சொன்னதாவது: “தமது தூதனை அனுப்பி, தமது அடியவர்களை விடுவித்த சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரின் இறைவனுக்குத் துதி உண்டாவதாக. அவர்கள் தங்கள் இறைவனில் நம்பிக்கை வைத்து அரச கட்டளைகளுக்கு எதிர்த்து நின்றார்கள். தங்கள் இறைவனைத்தவிர வேறு தெய்வத்தை வணங்காமலும், பணிந்துகொள்ளாமலும் இருந்து, தங்கள் உயிரைக் கொடுக்கவும் ஆயத்தமாயிருந்தார்களே.

  11. ஆகவே சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களின் இறைவனுக்கு எதிராக எதையாவது கூறும் எந்த மக்களும், எந்த மொழி பேசுவோரும் துண்டுதுண்டாக வெட்டிக் கொலைசெய்யப்படுவர். அவர்களுடைய வீடுகளும் இடிபாடுகளின் குவியலாக்கப்படும். இது எனது உறுதியான கட்டளை. ஏனெனில், வேறு எந்த தெய்வத்தினாலும் இவ்விதமாகக் காப்பாற்ற முடியாது என்றான்.”

  12. அதன்பின்பு சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு அரசன், பாபிலோன் மாகாணத்தில் பதவி உயர்வு கொடுத்தான்.

  13. அவன் சொன்னதாவது: “என் துன்பத்தில் நான் என் யெகோவாவைக் கூப்பிட்டேன், நீர் எனக்குப் பதிலளித்தீர்; பாதாளத்தின் ஆழங்களிலிருந்து உதவிவேண்டி கூப்பிட்டேன், நீர் எனது அழுகையைக் கேட்டீர்.

  14. நீர் என்னை ஆழத்துக்குள் எறிந்தீர், நடுக்கடலின் ஆழத்தில் எறிந்தீர், நீர்ச்சுழிகள் என்னைச் சுற்றிலும் சுழன்றுபோயின; உமது அலைகளும், அலையின் நுரைகளும் என்மேல் புரண்டன.

  15. ‘உமது முன்னிலையிலிருந்து நான் துரத்தப்பட்டேன். இருந்தாலும், நான் திரும்பவும் உமது பரிசுத்த ஆலயத்தை நோக்கிப்பார்ப்பேன்’ என்றேன்.

  16. என்னை விழுங்கிய தண்ணீர் என்னைப் பயமுறுத்தியது, ஆழம் என்னை சூழ்ந்துகொண்டது; கடற்பாசிக்கொடிகள் என் கழுத்தைச் சுற்றிக்கொண்டன.

  17. மலைகளின் அடிவாரங்கள்வரை நான் அமிழ்ந்தேன், கீழேயுள்ள பூமி என்னை என்றென்றைக்குமாக அடைத்து வைத்தது. ஆனால் என் இறைவனாகிய யெகோவாவே, நீர் குழியிலிருந்து என் உயிரை மேலே கொண்டுவந்தீர்.

  18. “யெகோவாவே, என் உயிர் தளர்ந்துபோகையில் நான் உம்மையே நினைத்தேன், என் மன்றாட்டு மேலெழுந்து உமது பரிசுத்த ஆலயத்தில் உம்மிடம் வந்தடைந்தது.

  19. “சிலர் ஒன்றுக்கும் உதவாத விக்கிரகங்களைப் பற்றிக்கொள்கிறார்கள்; அவர்கள் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய கிருபையை இழந்துபோகிறார்கள்.

  20. ஆனால், நானோ துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன். நான் நேர்ந்துகொண்டதை நிறைவேற்றுவேன். ‘இரட்சிப்பு யெகோவாவிடமிருந்தே வருகிறது’ ” என்றான்.

  21. நானோ, எதிர்பார்ப்புடன் யெகோவாவுக்காகக் காத்திருக்கிறேன். என் இரட்சகராகிய இறைவனுக்காக காத்திருக்கிறேன். என் இறைவன் எனக்குச் செவிகொடுப்பார்.

  22. எருசலேம் மக்கள் சொல்கிறதாவது: எங்கள் பகைவனே, எங்களை கேலிசெய்து மகிழாதே; நாங்கள் விழுந்தாலும் எழுந்திருப்போம். நாங்கள் இருளில் உட்கார்ந்தாலும் யெகோவா எங்களுக்கு ஒளியாயிருப்பார்.

  23. நாங்கள் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்தபடியால், அவரின் கோபத்தைச் சுமப்போம். அவர் எங்களுக்காக வாதாடி, எங்கள் நியாயத்தை நிலைநிறுத்துவார். அவர் எங்களை வெளியே வெளிச்சத்தின் முன் கொண்டுவருவார். நாங்கள் அவரது நீதியைக் காண்போம்.

  24. இந்த வெளிப்படுத்தல், அதற்கு நியமிக்கப்பட்ட காலத்தில் நிறைவேறக் காத்திருக்கிறது. அது முடிவு காலத்தைப்பற்றிச் சொல்கிறது, அது பொய்யாய் போகமாட்டாது. அது வருவதற்குக் காலம் தாழ்த்தினாலும், அதற்காகக் காத்திரு, அது நிச்சயமாய் வரும், அது தாமதிக்காது.

  25. “பார், தற்பெருமை கொண்டிருக்கிறானே, அவனுடைய ஆசைகள் நேர்மையானவை அல்ல; ஆனால் நீதிமானோ விசுவாசத்தினாலே வாழ்வான்.