God
God பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு வாக்களித்தபடி, அவரே உங்களுக்காகப் போராடுவதனால் உங்களில் ஒருவன் ஆயிரம்பேரை எதிர்த்து முறியடிக்கிறான்.
ஆதலால் உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் அன்புகூருவதில் மிகக் கவனமாயிருங்கள்.
அப்படிச் செய்தால் உங்கள் இறைவனாகிய யெகோவா இனி ஒருபோதும் இந்த நாடுகளை உங்கள்முன் துரத்திவிடமாட்டார் என்பதை நிச்சயமாக அறிந்துகொள்ளுங்கள். ஆனால் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல நாட்டிலிருந்து நீங்கள் அழிந்துபோகும் வரையும், அவர்கள் உங்களுக்கு ஒரு கண்ணியாகவும், பொறியாகவும், உங்கள் முதுகுக்குச் சவுக்காகவும், உங்கள் கண்களில் முட்களாகவும் இருப்பார்கள்.
“இதோ, பூமியின் மனிதர் எல்லோரும் போகும் வழியில் நானும் போகப்போகிறேன். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றாகிலும் தவறவில்லை என்று நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் அறிவீர்கள். அத்தனை வாக்குறுதிகளும் நிறைவேறியிருக்கின்றன. ஒன்றாயினும் தவறவில்லை.
உங்கள் இறைவனாகிய யெகோவாவின் நல்வாக்குறுதிகள் ஒவ்வொன்றும் உண்மையாய் நிறைவேறியது போலவே, அவர் உங்களுக்கு அளித்த இந்த நல்ல நாட்டிலிருந்து உங்களை அவர் அழித்துப்போடும்வரை, உங்கள்மேல் வருமென அவர் அச்சுறுத்திய தீமைகள் எல்லாவற்றையும் வரப்பண்ணுவார்.
உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையை மீறிப்போய் வேறு தெய்வங்களுக்குச் சேவைசெய்து, அவற்றை வணங்கினால், அவை எல்லாம் உங்கள்மேல் வரும். அப்பொழுது யெகோவாவின் கடுங்கோபம் உங்களுக்கு விரோதமாய் பற்றியெரியும். அவர் உங்களுக்குக் கொடுத்த நல்ல நாட்டிலிருந்து நீங்களும் விரைவில் அழிந்துபோவீர்கள்” என்றான்.
பின்பு யோசுவா இஸ்ரயேல் கோத்திரத்தார் எல்லாரையும் சீகேமில் கூடிவரச் செய்தான். அவர்களில் சபைத்தலைவர்கள், தலைவர்கள், நீதிபதிகள், அதிகாரிகள் ஆகியோரை அவன் முன்னே வரும்படி அழைத்தான். அவர்கள் இறைவனுக்கு முன்பாக நின்றார்கள்.
அப்பொழுது யோசுவா மக்கள் அனைவருக்கும் கூறியதாவது, “இஸ்ரயேலரின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: முற்காலத்தில் உங்கள் முற்பிதாக்களான ஆபிரகாமுக்கும், நாகோருக்கும் தகப்பனாகிய தேராகு என்பவன் யூப்ரட்டீஸ் நதிக்கு அப்பால் குடியிருந்தபோது அவர்கள் பிற தெய்வங்களை வணங்கினார்கள்.
ஆனால் நான் உங்கள் பிதாவாகிய ஆபிரகாமை யூப்ரட்டீஸ் நதியின் அப்பாலுள்ள நாட்டிலிருந்து தெரிந்தெடுத்து, கானான்நாடெங்கும் வழிநடத்தி, அவனுக்குப் பல வழித்தோன்றல்களைக் கொடுத்தேன். அவனுக்கு ஈசாக்கைக் கொடுத்தேன்,
ஈசாக்குக்கு யாக்கோபையும், ஏசாவையும் கொடுத்தேன். சேயீர் என்னும் மலைநாட்டை நான் ஏசாவுக்குக் கொடுத்தேன். ஆனால் யாக்கோபும் அவன் மகன்களும் எகிப்திற்குப் போனார்கள்.
“ ‘அதன்பின் நான் மோசேயையும், ஆரோனையும் எகிப்திற்கு அனுப்பி, அங்கே நான் செய்த செயல்களினால் எகிப்தியரைத் துன்புறுத்தி உங்களை அங்கிருந்து வெளியே கொண்டுவந்தேன்.
அவ்வாறு உங்கள் முற்பிதாக்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தபோது அவர்கள் கடலண்டைக்கு வந்தார்கள். எகிப்தியர்கள் அவர்களைப் பின்தொடர்ந்து இரதங்களோடும், குதிரைகளோடும் செங்கடல்வரை துரத்தி வந்தார்கள்.
அப்பொழுது இஸ்ரயேலர் யெகோவாவிடம் உதவிகேட்டு, அழுதார்கள். உடனே அவர் அவர்களுக்கும், எகிப்தியருக்குமிடையே இருளை உண்டாக்கினார். பின் அவர் எகிப்தியரின்மேல் செங்கடல் தண்ணீரைத் திருப்பி வரச்செய்து, அவர்களை அமிழ்ந்துபோகச் செய்தார். எகிப்தியருக்கு நான் செய்ததை நீங்கள் உங்கள் கண்களாலேயே கண்டீர்கள். அதன்பின் நீங்கள் பாலைவனத்தில் நீண்டகாலமாக வாழ்ந்தீர்கள்.
“ ‘பின்னர் நான் உங்களை யோர்தானின் கிழக்கே வசித்த எமோரியரின் நாட்டிற்குக் கொண்டுவந்தேன். அவர்கள் உங்களுக்கு எதிராகப் போரிட்டபோது, நான் அவர்களை உங்கள் கைகளில் ஒப்படைத்தேன். உங்களுக்கு முன்பாக நான் அவர்களை அழித்தேன். நீங்கள் அவர்களுடைய நாட்டை உங்கள் உடைமையாக்கினீர்கள்.
ஆனால் நான் பிலேயாமின் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கவில்லை. அதனால் அவன் திரும்பதிரும்ப உங்களை ஆசீர்வதித்தான். இவ்வாறு நான் உங்களை அவன் கையிலிருந்து விடுவித்தேன்.
“ ‘அதன்பின், நீங்கள் யோர்தான் நதியைக் கடந்து எரிகோவை அடைந்தீர்கள். எரிகோ நகரக் குடிமக்களும் உங்களுக்கெதிராகப் போரிட்டார்கள். அதுபோலவே எமோரியர், பெரிசியர், கானானியர், ஏத்தியர், கிர்காசியர், ஏவியர், எபூசியர் ஆகியோரும் உங்களுக்கு எதிராய்ப் போரிட்டார்கள். ஆனால் நான் அவர்கள் அனைவரையும் உங்கள் கையில் ஒப்படைத்தேன்.
நானே உங்களுக்கு முன்னால் குளவிகளை அனுப்பினேன். அவை அவர்களையும், இரு எமோரிய அரசர்களையும் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டது. நீங்கள் உங்கள் வில்லுகளாலும் வாள்களாலும் அவர்களை துரத்தவில்லை.
இவ்விதமாக நீங்கள் பாடுபட்டுப் பண்படுத்தாத நிலத்தையும், நீங்கள் கட்டாத பட்டணங்களையும், நான் உங்களுக்குக் கொடுத்தேன். நீங்களும் அவற்றில் வாழ்ந்து நீங்கள் நடாத திராட்சைத் தோட்டத்திலிருந்தும் ஒலிவத் தோப்புகளிலிருந்தும் பெற்ற பழங்களைச் சாப்பிடுகிறீர்கள்.’
“இப்பொழுது யெகோவாவுக்குப் பயந்து, அவருக்கு எல்லா மன உண்மையுடனும் சேவை செய்யுங்கள். எகிப்து நாட்டிலும் யூபிரடிஸ் நதிக்கு அப்பாலும் உங்கள் முற்பிதாக்கள் வணங்கிய தெய்வங்களை எறிந்துவிட்டு, யெகோவாவுக்குப் பணிசெய்யுங்கள்.
யெகோவாவுக்குப் பணிசெய்வது உங்களுக்கு விருப்பமில்லையென்றால், யாருக்குப் பணிசெய்ய வேண்டும் என்பதை இன்றே தெரிந்துகொள்ளுங்கள். யூபிரடிஸ் நதிக்கு அப்பால் உங்கள் முற்பிதாக்கள் பணிவிடை செய்த தெய்வங்களையா? அல்லது நீங்கள் வாழும் நாட்டிலுள்ள எமோரியரின் தெய்வங்களையா? தெரிந்துகொள்ளப் போகிறீர்கள். நானும் என் வீட்டாருமோவென்றால் யெகோவாவுக்கே பணிசெய்வோம்” என்று யோசுவா கூறினான்.
அதற்கு மக்கள் மறுமொழியாக, “யெகோவாவைக் கைவிட்டு வேறு தெய்வங்களுக்குப் பணிசெய்வது எங்களுக்குத் தூரமாயிருப்பதாக.
எங்கள் இறைவனாகிய யெகோவா தாமே, எங்களையும் எங்கள் முன்னோர்களையும் அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார். அங்கு எங்கள் கண்களுக்கு முன்பாகப் பெரிய அற்புதச் செயல்களை நடப்பித்தார். எங்கள் பயணம் முழுவதிலும், நாங்கள் பிரயாணம் செய்த இடங்களிலும் உள்ள பிறநாடுகளின் மத்தியிலுமிருந்து நம்மைப் பாதுகாத்தார்.
அத்துடன் யெகோவா எமோரியர் உட்பட அந்நாட்டின் எல்லா மக்களையும் எங்கள் முன்பாகத் துரத்திவிட்டார். ஆகையால் நாங்களும் யெகோவாவுக்கே பணிசெய்வோம். ஏனெனில் அவரே எங்கள் இறைவன்” என்றார்கள்.
அதற்கு யோசுவா மக்களிடம், “நீங்கள் உங்கள் யெகோவாவுக்குப் பணிசெய்ய இயலாதிருக்கிறீர்கள். அவர் பரிசுத்தமான இறைவன். அவர் வைராக்கியமுள்ள இறைவன். நீங்கள் அவருக்கு எதிராக செய்யும் கலகத்தையும், பாவங்களையும் அவர் மன்னிக்கமாட்டார்.
அவர் உங்களுக்கு நல்லவராயிருந்த பின்பும், நீங்கள் யெகோவாவைக் கைவிட்டு, அந்நிய தெய்வங்களுக்குப் பணிசெய்தால், அவரும் உங்களைவிட்டு விலகிச்சென்று, உங்கள்மேல் பெருந்துன்பத்தை வரப்பண்ணி உங்களை முடிவுறப் பண்ணுவார்” என்றான்.