God
God பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
யெகோவா தம் மக்கள் தம்மை மட்டுமே வழிபடவேண்டும் என்ற வைராக்கியமுள்ள இறைவன்; யெகோவா தம்மை எதிர்க்கிறவர்களை எதிர்க்கிறவரும், கடுங்கோபத்தில் பதில் செய்கிறவருமாய் இருக்கிறார். யெகோவா தம் எதிரிகளைத் தண்டித்து, தம் பகைவர்களுக்கு தமது கோபத்தை வெளிப்படுத்துகிறார்.
யெகோவா கோபங்கொள்வதில் தாமதிக்கிறவர், அவர் மிகுந்த வல்லமையுமுள்ளவர்; யெகோவா குற்றவாளிகளை தண்டியாமல் விடமாட்டார்; அவருடைய வழி சுழல்காற்றிலும், புயல்காற்றிலும் உள்ளது. மேகங்கள் அவருடைய பாதங்களின் கீழிருக்கும் தூசியாயிருக்கின்றன.
அவருக்கு முன்பாக மலைகள் அதிரும்; குன்றுகள் உருகிப்போகும். அவருடைய சமுகத்தில் பூமியும் அதிரும். உலகமும், அதன் குடிமக்களும் நடுங்குவார்கள்.
அவருடைய கோபத்தைத் தாங்கி நிற்கக் கூடியவன் யார்? அவருடைய கடுங்கோபத்தைச் சகிக்கக் கூடியவன் யார்? அவருடைய கோபம் நெருப்பைப்போல் கொட்டப்படுகிறது; அவருக்கு முன்பாக கற்பாறைகள் நொறுக்கப்படுகின்றன.
யெகோவா நல்லவர், அவர் ஆபத்து வேளைகளில் புகலிடமானவர். அவரில் நம்பிக்கையுள்ளவர்களில் அவர் கரிசனையாயிருக்கிறார்.
ஆனாலும் பெருகிவரும் வெள்ளத்தினால் நினிவேக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவார்; அவர் தமது எதிரியை இருளுக்குள் துரத்திச் செல்வார்.
அவர்கள் யெகோவாவுக்கு விரோதமாக எவ்வித சூழ்ச்சியைச் செய்தாலும் அவர் அதற்கு ஒரு முடிவைக் கொண்டுவருவார்; துன்பம் இரண்டாம் முறையும் வராது.
நினிவே பட்டணமே, யெகோவாவுக்கு எதிராக தீமையான சூழ்ச்சிசெய்து, கொடுமையானவற்றிற்கு ஆலோசனை கொடுக்கும் ஒருவன், உன்னிடமிருந்து புறப்பட்டுள்ளான்.
யெகோவா சொல்வது இதுவே: அசீரியருக்கு அநேக நட்புறவுள்ள நாடுகள் இருந்தன. “அவர்கள் எண்ணற்றவர்களாக இருந்தாலும் வெட்டப்பட்டு அழிந்துபோவார்கள். யூதாவே! நான் உன்னைத் துன்பத்தில் ஒடுக்கியிருந்தாலும், இனிமேலும் உன்னை நான் துன்புறுத்ததாதிருப்பேன்.
நான் உன் கழுத்திலிருக்கும், அசீரியர்களுடைய நுகத்தை உடைத்துப்போடுவேன். உன் விலங்குகளையும் உடைப்பேன்.”
நினிவேயே! யெகோவா உன்னைக்குறித்து ஒரு கட்டளை கொடுத்திருக்கிறார். “உன்னுடைய பெயரைத் தாங்கும் வழித்தோன்றல்கள் உனக்கிருக்க மாட்டார்கள். உன் தெய்வங்களின் கோவில்களில் இருக்கிற செதுக்கப்பட்ட உருவச்சிலைகளையும், வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகங்களையும் அழிப்பேன். நீ வெறுப்புக்குரியவனானபடியால், நானே உனக்குப் பிரேதக்குழியை ஆயத்தப்படுத்துவேன்.”
அசீரியர் இஸ்ரயேலைப் பாழாக்கி, அவர்களின் திராட்சைத் தோட்டங்களை அழித்துப்போட்டாலும், யெகோவா இஸ்ரயேலின் மாட்சிமையை, யாக்கோபின் மாட்சிமையைப்போல் திரும்பவும் அமைத்துக்கொடுப்பார்.
நினிவேயே, “நான் உனக்கு விரோதமாக இருக்கிறேன்” என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார். “புகை எழும்பும்படி உன் தேர்களை எரிப்பேன், உன் சிங்கக்குட்டிகள் வாளினால் அழியும். பூமியில் உங்களுக்கு இரையில்லாமல் போகச்செய்வேன். உங்கள் தூதுவர்களின் குரல்கள் இனிமேலும் கேட்கப்படுவதில்லை.”
இதோ, சேனைகளின் யெகோவா சொல்கிறார்: “நினிவேயே, நான் உனக்கு விரோதமாய் வந்து, உன் ஆடையை உன் முகத்துக்கு மேலாக தூக்குவேன்; நாடுகளுக்கு உன் நிர்வாணத்தையும், எல்லா அரசுகளுக்கும் உன் வெட்கத்தையும் காட்டுவேன்.
அசுத்தமானவற்றை உன்மேல் வீசுவேன். உன்னை அவமதிப்பாய் நடத்தி, உன்னை ஒரு இழிவுக் காட்சியாக்குவேன்.
உன்னைக் காண்கிறவர்கள் எல்லோரும் உன்னைவிட்டு விலகி ஓடி, ‘நினிவே பாழாக்கப்பட்டுப் போனது; அதற்காகப் புலம்புகிறவர்கள் யார்?’ என்று சொல்வார்கள். உன்னை ஆறுதல்படுத்துவதற்கு ஒருவனை நான் எங்கே தேடுவேன்?”
யெகோவாவே, நான் எவ்வளவு காலத்திற்கு உதவிகேட்டு உம்மைக் கூப்பிட வேண்டும்? நீரோ இன்னும் செவிகொடாமல் இருக்கிறீரே. எவ்வளவு காலத்திற்கு உம்மிடம், “வன்முறை” எனக் கதறவேண்டும்? இன்னும் காப்பாற்றாமல் இருக்கிறீரே.
நீர் ஏன் என்னை அநீதியைப் பார்க்கும்படி செய்கிறீர்? ஏன் அநியாயத்தைச் சகித்துக் கொண்டிருக்கிறீர்? அழிவும், வன்செயலும் என் முன்னே இருக்கின்றனவே; போராட்டமும், வாதையும் பெருகுகின்றன.
இரக்கமற்றவர்களும், மூர்க்கம் கொண்டவர்களுமான பாபிலோனியரை நான் எழுப்புகிறேன். அவர்கள் தங்களுக்குச் சொந்தமல்லாத இருப்பிடங்களைக் கைப்பற்றும்படி, பூமியெங்கும் அணியணியாய் செல்வார்கள்.
யெகோவாவே, என் இறைவனே, என் பரிசுத்தமானவரே, நீர் நித்தியத்தில் இருந்தே உள்ளவர் அல்லவோ? நாங்களும் அழிக்கப்பட்டுப் போவோமா? யெகோவாவே, எங்கள் நலனுக்காகத்தானே நியாயத்தீர்ப்பை நிறைவேற்ற நீர் பாபிலோனியரை நியமித்திருக்கிறீர்; கன்மலையே, எங்களைத் தண்டிக்க நீர் அவர்களை அமர்த்தியிருக்கிறீர்.
உம்முடைய கண்கள் அதிக தூய்மையானதால், அவை தீமையைப் பார்ப்பதில்லை; அநியாயத்தை சகிக்க உம்மால் முடியாது. அப்படியானால் துரோகிகளை நீர் ஏன் சகிக்கிறீர்? கொடியவர்களான பாபிலோனியர் தங்களைவிட நீதியானவர்களை விழுங்கும்போது நீர் ஏன் மவுனமாய் இருக்கிறீர்?
நான் போய் என் காவல் கோபுரத்தில் நிற்பேன். காவல் அரண்கள்மேல் நான் நிலைகொள்வேன், யெகோவா எனக்கு என்ன சொல்வார் என்று அறியும்படி நான் பார்த்திருப்பேன். நான் கண்டிக்கப்பட்டால், என்ன மறுமொழி சொல்வேன் எனவும் சிந்தித்துக் கொண்டிருப்பேன்.
அப்பொழுது யெகோவா பதிலளித்துச் சொன்னதாவது: “இந்த வெளிப்படுத்துதலை எழுதிவை, அதை கற்பலகையில் தெளிவாய் பொறித்து வை. தூதுவன் அதனுடன் விரைவாய் ஓடி அறிவிக்கக்கூடியதாக இருக்கட்டும்.
சேனைகளின் யெகோவா, மக்களின் உழைப்பு நெருப்புக்கான விறகாகும் என்றும், நாடுகளின் முடிவில்லாத உழைப்பு பயனற்றதாய் போகும் என்றும் அறிவிக்கிறாரே.
கடல் தண்ணீரினால் நிறைந்திருப்பதுபோல, பூமி யெகோவாவின் மகிமையைப்பற்றிய அறிவினால் நிறைந்திருக்கும்.