Skip to content

The River Nile பற்றிய பைபிள் வசனங்கள்

25 வசனங்கள் · 19 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

  1. இரண்டு முழு வருடங்கள் சென்றபின் பார்வோன் ஒரு கனவு கண்டான். அக்கனவில் அவன், நைல் நதி அருகே நின்றான்.

  2. அவற்றின் பிறகே அவலட்சணமும், மெலிந்ததுமான ஏழு பசுக்கள் நைல் நதியிலிருந்து வெளியேறி வந்து, நதிக்கரையில் மற்ற பசுக்களின் அருகில் நின்றன.

  3. பின்பு பார்வோன் தன் மக்கள் எல்லோருக்கும் கட்டளை கொடுத்து, “எபிரெயருக்குப் பிறக்கும் ஒவ்வொரு ஆண் குழந்தையையும் நீங்கள் நைல் நதியில் எறிந்துவிடவேண்டும்; ஆனால், எல்லா பெண் குழந்தைகளையும் வாழவிடுங்கள்” என்றான்.

  4. ஆனால் அதற்கு மேலும் அவனை மறைத்துவைக்க முடியாமல், அவள் ஒரு நாணல் பெட்டியை எடுத்து அதற்கு தார் மற்றும் நிலக்கீல் பூசினாள். குழந்தையை அதற்குள் கிடத்தி, நைல் நதியோரமாக நாணலுக்குள்ளே வைத்தாள்.

  5. அப்பொழுது பார்வோனின் மகள் குளிப்பதற்காக நைல் நதிக்குப் போனாள்; அவளுடன் வந்த தோழியர்கள் நதிக்கரையில் உலாவினார்கள். பார்வோனின் மகள், நாணல்களுக்கிடையில் கிடந்த கூடையைக் கண்டு, அதை எடுத்துவரும்படி தன் வேலைக்காரப் பெண்ணை அனுப்பினாள்.

  6. காலையில் பார்வோன் ஆற்றுக்குப் போகும்போது நீ அவனிடம் போ. பாம்பாக மாறிய கோலை உன் கையில் எடுத்துக்கொண்டு நைல் நதிக்கரையிலே அவனைச் சந்திக்கக் காத்து நில்.

  7. மோசேயும் ஆரோனும் யெகோவா கட்டளையிட்டபடியே செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கும் அவன் அதிகாரிகளுக்கும் முன்பாக தன் கோலை நீட்டி, நைல் நதியிலிருந்த தண்ணீரின்மேல் அடித்தான்; தண்ணீர் முழுவதும் இரத்தமாக மாறிற்று.

  8. நைல் நதியிலுள்ள மீன்களெல்லாம் செத்துப்போயின; எகிப்தியர் நைல் நதியின் தண்ணீரைக் குடிக்க முடியாதபடி நைல் நதி துர்நாற்றமெடுத்தது. எகிப்தில் எங்கும் இரத்தமாயிருந்தது.

  9. ஆற்றுத் தண்ணீரைக் குடிக்க முடியாதிருந்ததால், எகிப்தியர் குடிநீருக்காக நைல் நதியோரமெங்கும் தோண்டினார்கள்.

  10. நைல் நதி தவளைகளால் நிரம்பும். அவை உன் அரண்மனைக்குள்ளும் உன் படுக்கையறைக்குள்ளும், உன் கட்டிலின்மேலும், உன் அதிகாரிகளின் வீடுகளுக்குள்ளும், உன் மக்கள்மேலும், உன் அடுப்புகளுக்குள்ளும், மாப்பிசையும் பாத்திரங்களுக்குள்ளும் வந்து ஏறும்.

  11. எகிப்தின் கிழக்கே உள்ள சீகோர் ஆற்றிலிருந்து வடக்கே எக்ரோன் பிரதேசம் வரையுள்ளவையாகும். இவை முழுவதும் கானானியருடையதாகக் கருதப்பட்டன. இப்பகுதியிலிருந்த நகரங்களான காசா, அஸ்தோத், அஸ்கலோன், காத், எக்ரோன் ஆகியவற்றில் ஐந்து பெலிஸ்திய சிற்றரசர்கள் ஆட்சிபுரிந்தார்கள். அதற்குத் தெற்கில் ஆவியர் வாழ்ந்தார்கள்.

  12. யெகோவா எகிப்தின் வளைகுடா கடலை முழுவதும் வற்றப்பண்ணுவார்; யூப்ரட்டீஸ் நதியின்மேல் ஒரு வெப்பக் காற்றுடன் தமது கரத்தை வீசி அடிப்பார். மக்கள் உலர்ந்த நிலத்தில் நடக்கக் கூடியதாக அவர் அதை ஏழு நீரோடைகளாகப் பிரிப்பார்.

  13. ஆற்றின் வெள்ளம் வற்றிவிடும், ஆற்றின் அடித்தரை காய்ந்து வறண்டுவிடும்.

  14. வாய்க்கால்கள் நாறும்; எகிப்தின் நீரோடைகள் வற்றி வறண்டுபோகும். கோரையும் நாணலும் வாடிவிடும்.

  15. ஆற்றின் முகத்துவாரத்தில், நைல் நதியின் ஓரத்தில் வளரும் தாவரங்களும் வாடிவிடும். நதியோரம் விதைக்கப்பட்ட உலர்ந்து, பறந்து இல்லாமல் போகும்.

  16. மீனவர்கள் புலம்புவார்கள், நைல் நதியில் தூண்டில்போடும் யாவரும் அழுவார்கள்; தண்ணீருள் வலை வீசுகிறவர்களும் கவலையால் வாடிப்போவார்கள்.

  17. சீகோரின் பெருவெள்ளத்தினால் விளையும் தானியமும், நைல் நதியின் அறுவடையுமே தீருவுக்கு வருமானமாயிருந்தது. தீரு நாடுகளின் சந்தைகூடும் இடமாகியது.

  18. அந்நாளிலே யெகோவா, ஓடும் நதிதொடங்கி, எகிப்தின் சிற்றாறுவரை தன் கதிரடிப்பைத் தொடங்குவார். இஸ்ரயேலே, நீங்களோ ஒவ்வொருவராகச் சேர்த்தெடுக்கப்படுவீர்கள்.

  19. இப்போது நைல் நதியின் தண்ணீரைக் குடிக்க ஏன் எகிப்திற்குப் போகிறீர்கள்? ஐபிராத்து நதியின் தண்ணீரைக் குடிக்க ஏன் அசீரியாவுக்குப் போகிறீர்கள்?

  20. நைல் நதியைப்போலவும், நீர் பெருக்கெடுக்கும் ஆறுகளைப்போலவும் எகிப்து எழும்புகிறது. அவள், ‘நான் எழும்பி பூமியை மூடுவேன்; பட்டணங்களையும், அவைகளின் மக்களையும் அழிப்பேன்’ என்கிறாள்.

  21. நீ அவனோடு பேசிச் சொல்லவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. “ ‘எகிப்தின் அரசனாகிய பார்வோனே, நீரோடைகளின் நடுவே கிடக்கும் பெரும் இராட்சத முதலையே! நான் உனக்கு விரோதமாயிருக்கிறேன். “நீயோ, நைல் நதி என்னுடையது; அதை எனக்காக நானே உண்டாக்கினேன்” என சொல்லிக்கொள்கிறாய்.

  22. ஆனால் நான் உன் தாடைகளில் தூண்டில் மாட்டி, உன் நீரோடைகளின் மீன்களை உன் செதில்களில் ஒட்டிக்கொள்ளச் செய்வேன். உன் செதில்களில் ஒட்டிக்கொள்ளும் எல்லா மீன்களோடும் சேர்த்து, உன் நீரோடைகளின் நடுவிலிருந்து நான் உன்னை இழுத்தெடுப்பேன்.

  23. எகிப்து அழிந்து பாழ்நிலமாகும். அப்பொழுது அவர்கள் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள். “ ‘நைல் நதி என்னுடையது; “நானே அதை உன்டாக்கினேன்” என்று நீ சொன்னாய் அல்லவோ?

  24. “இதனால் நாடு நடுங்காதோ, அதில் வாழும் அனைவரும் துக்கப்பட மாட்டார்களோ? நாடு முழுவதும் நைல் நதிபோல பொங்கும். அது குமுறிப் பொங்கி, பின் அது எகிப்து நதியைப்போல் தணிந்துபோகும்.”

  25. யெகோவா, சேனைகளின் யெகோவா பூமியைத் தொடுகிறார், அது உருகுகிறது, அதில் வாழும் அனைவரும் புலம்புகிறார்கள்; முழு நாடும் நைல் நதியைப்போல் பொங்கி எழுகிறது, பின்னர் எகிப்தின் நதியைப்போல் வற்றிப்போகிறது.