Skip to content

Select Readings பற்றிய பைபிள் வசனங்கள்

802 வசனங்கள் · 47 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. அதற்கு யோவாப் அவனிடம், “இன்று இச்செய்தியைக் கொண்டுபோவது நீ அல்ல; ஆகையால் இன்னொருநாள் செய்தியைச் சொல்லலாம். அரசனின் மகன் இறந்தபடியால், இன்று இச்செய்தியைச் சொல்லக்கூடாது” என்றான்.

  2. அதன்பின் யோவாப் கூஷியன் ஒருவனிடம், “நீ அரசனிடம் போய் கண்டவற்றைச் சொல்” என்றான். எனவே அவன் யோவாபை வணங்கி அரசனிடம் ஓடிப்போனான்.

  3. சாதோக்கின் மகன் அகிமாஸ் மீண்டும் யோவாபிடம், “என்ன நேரிட்டாலும் நானும் அந்த கூஷியனோடு அவனுக்குப் பின்னால் ஓடிப்போகவிடும்” என்றான். ஆனால் யோவாபோ, “என் மகனே! நீ ஏன் போக விரும்புகிறாய்? உனக்கு வெகுமதி கொடுக்கும் செய்தி உன்னிடம் இல்லையே” என்றான்.

  4. அதற்கு அகிமாஸ், “என்ன நேரிட்டாலும் நான் போகத்தான் போகிறேன்” என்றான். எனவே யோவாப், “ஓடிப்போ” என்றான். அவ்வாறே அகிமாஸ் சமவெளி வழியாக ஓடி கூஷியனை முந்திக்கொண்டான்.

  5. தாவீது உட்புற வாசலுக்கும், வெளிப்புற வாசலுக்கும் இடையில் உட்கார்ந்திருந்தபோது, காவற்காரன் பட்டணத்து மதிலோடுள்ள வாசலின் கூரையின்மேல் ஏறினான். அங்கு நின்று அவன் பார்த்தபோது, தனிமையாக ஒரு மனிதன் ஓடிவருவதைக் கண்டான்.

  6. உடனே காவற்காரன் அரசனைக் கூப்பிட்டு அவனுக்கு அதை அறிவித்தான். அப்பொழுது அரசன் அவனிடம், “அவன் தனிமையாய் வருவதனால் அவனிடம் நல்ல செய்தியே இருக்கும்” என்றான். ஓடிவந்த மனிதன் நெருங்கி வந்துகொண்டிருந்தான்.

  7. காவற்காரன் வேறொருவனும் ஓடிவருவதைக் கண்டு வாசற்காவலனைக் கூப்பிட்டு, “அதோ பார்! வேறொருவன் தனியே ஓடிவருகிறான்” என்றான். அப்பொழுது அரசன், “அவனிடமும் நல்ல செய்தியே இருக்கும்” என்றான்.

  8. மறுபடியும் காவற்காரன், “முதலில் ஓடி வருபவன் சாதோக்கின் மகன் அகிமாஸ் போல் எனக்குத் தெரிகிறது” என்றான். அதற்கு அரசன், “அவன் நல்ல மனிதன், நல்ல செய்தியுடனேயே வருவான்” என்றான்.

  9. அகிமாஸ் அரசனைக் கூப்பிட்டு, “எல்லாம் நலம்” என்று சொல்லி முகங்குப்புற தரையில் விழுந்து அரசனை வணங்கி, “உம்முடைய இறைவனாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக. அவர் என் தலைவனுக்கு எதிராக கைகளை ஓங்கிய மனிதரைத் தோற்கடித்து உம்மிடம் ஒப்படைத்தார்” என்றான்.

  10. அப்பொழுது அரசன் அகிமாஸிடம், “வாலிபனான அப்சலோம் பாதுகாப்பாக இருக்கிறானா?” எனக் கேட்டான். அதற்கு அகிமாஸ், “அரசனுடைய பணியாளையும், உம்முடைய அடியவனாகிய என்னையும் யோவாப் அனுப்ப எத்தனிக்கையில் ஒரு பெரும் குழப்பம் அங்கே இருப்பதைக் கண்டேன்; ஆனாலும் அது என்ன என்று எனக்குத் தெரியாது” என்றான்.

  11. அப்பொழுது அரசன் அவனிடம், “நீ ஒரு பக்கமாய் போய் நில்” என்றான். அவன் ஒரு பக்கமாய் போய் நின்றான்.

  12. அதன்பின் கூஷியன் வந்து அரசனிடம், “என் தலைவனாகிய அரசே! நான் கொண்டுவந்த நல்ல செய்தியைக் கேட்பீராக; உமக்கு விரோதமாக எழும்பிய அனைவரிடமிருந்தும் யெகோவா உம்மை இன்று விடுதலையாக்கினார்” என்றான்.

  13. அப்பொழுது அரசன், “வாலிபனான அப்சலோம் பாதுகாப்பாயிருக்கிறானா?” எனக் கூஷியனிடம் கேட்டான். அதற்கு அவன், “அந்த வாலிபனுக்கு நேரிட்டதுபோலவே, என் தலைவனாகிய அரசனுடைய பகைவருக்கும், உமக்குத் தீமைசெய்ய எண்ணும் அனைவருக்கும் நேரிடட்டும்” என்றான்.

  14. இதைக் கேட்ட அரசன் கலக்கமடைந்தான். அவன் பட்டணத்து வாசலின்மேல் இருந்த அறைக்குச் சென்று அழுதான். அவன் போகும்போதே, “என் மகன் அப்சலோமே, என் மகனே, என் மகன் அப்சலோமே, உனக்குப் பதிலாக நான் இறந்திருக்கக் கூடாதோ; ஆ என் மகன் அப்சலோமே, என் மகனே, என் மகனே!” என்று சொல்லி அழுதுகொண்டே போனான்.

  15. கீலேயாத்தின் ஊரைச்சேர்ந்த திஸ்பியனாகிய எலியா என்பவன் ஆகாப் அரசனிடம் வந்து, “நான் பணிசெய்யும் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா இருப்பதுபோல் அடுத்துவரும் சில வருடங்களுக்கு நான் சொன்னாலன்றி, நாட்டில் மழையோ, பனியோ பொழிவதில்லை” என்றான்.

  16. அதன்பின்பு யெகோவாவினுடைய வார்த்தை எலியாவுக்கு வந்தது.

  17. அவர் அவனிடம், “நீ இந்த இடத்தைவிட்டு கிழக்குப் பக்கம் திரும்பி, யோர்தானுக்குக் கிழக்கேயுள்ள கேரீத் பள்ளத்தாக்கில் ஒளிந்துகொள்.

  18. நீ அந்த நீரோடையில் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உனக்கு உணவு கொடுக்கும்படி நான் காகங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறேன்” என்றார்.

  19. யெகோவா கூறியபடியே அவன் செய்தான். அவன் யோர்தானுக்குக் கிழக்குப் பக்கமாக இருந்த கேரீத் பள்ளத்தாக்கிற்குப் போய் அங்கே தங்கியிருந்தான்.

  20. காகங்கள் அவனுக்குக் காலையில் அப்பமும், இறைச்சியும் மாலையில் அப்பமும், இறைச்சியும் கொண்டுபோய்க் கொடுத்தன. அவன் நீரோடையிலிருந்து தண்ணீரைக் குடித்தான்.

  21. நாட்டில் மழை இல்லாதிருந்தபடியால் சில நாட்களுக்குப்பின்பு நீரோடையிலிருந்த தண்ணீர் வற்றிவிட்டது.

  22. அப்பொழுது யெகோவாவின் வார்த்தை எலியாவுக்கு வந்தது.

  23. அவர் அவனிடம், “நீ எழுந்து உடனே சீதோனிலுள்ள சாரெபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு. உனக்கு உணவு கொடுக்கும்படி அங்கேயிருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்” என்றார்.

  24. அப்படியே அவன் சாரெபாத் என்ற ஊருக்குப் போனான். அவன் அந்த நகர வாசலுக்குப் போனபோது அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக் கொண்டிருந்தாள். அவன் அவளைக் கூப்பிட்டு, “எனக்குக் குடிப்பதற்கு ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வருவாயா?” என்று கேட்டான்.

  25. அவள் அவனுக்குத் தண்ணீர் கொண்டுவரப் போகும்போது அவன் அவளைக் கூப்பிட்டு, “தயவுசெய்து எனக்கு ஒரு துண்டு அப்பமும் கொண்டுவா” என்றான்.