உள்ளடக்கத்திற்குச் செல்க

Paul பற்றிய பைபிள் வசனங்கள்

619 வசனங்கள் · 103 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. அவர்கள் இதைக் கேட்டபோது, மிகவும் கோபங்கொண்டு, “எபேசியரின் அர்த்தமிஸ் தேவதையே வாழ்க!” என்று சத்தமிட்டார்கள்.

  2. உடனேயே முழுப்பட்டணமும் கலவரமடைந்தது. கூடியிருந்த மக்களோ, பவுலுடன் பயணம் செய்தவர்களான மக்கெதோனியாவைச் சேர்ந்த காயு, அரிஸ்தர்க்கு என்பவர்களைப் பிடித்துக்கொண்டார்கள். மக்கள் இவர்களை இழுத்துக்கொண்டு, ஒருமிக்க அரங்க மண்டபத்திற்குள் கொண்டுசென்றார்கள்.

  3. பவுல் மக்கள் கூட்டத்தின்முன் போய் அவர்களுடன் பேச விரும்பினான். ஆனால் சீடரோ, அவனைப் போகவிடவில்லை.

  4. பவுலின் நண்பர்களான அந்த மாநிலத்தின் அதிகாரிகளில் சிலரும்கூட அவனை அரங்க மண்டபத்திற்குள் போகவேண்டாம் என்று கூறி, அவனுக்குச் செய்தியனுப்பினார்கள்.

  5. அங்கே கூடியிருந்த மக்கள் மிகக் குழப்பமடைந்திருந்தார்கள்; சிலர் ஏதோ சொல்லிச் சத்தமிட்டார்கள், மற்றவர்கள் வேறு ஏதோ சொல்லிச் சத்தமிட்டார்கள். அவர்களில் அநேகருக்குத் தாங்கள் ஏன் அங்கு வந்தார்கள் என்பதுகூட தெரிந்திருக்கவில்லை.

  6. யூதரோ, அலெக்சந்தர் என்பவனை கூட்டத்திற்குமுன் தள்ளிவிட்டார்கள். ஜனக்கூட்டத்திலுள்ள சிலர் அவனைப் பார்த்து சத்தமிட்டார்கள். அவன் மக்களை மவுனமாய் இருக்கும்படி சைகை காட்டி, அவர்களுக்குத் தமது சார்பான நியாயத்தை எடுத்துக்கூற முயற்சித்தான்.

  7. ஆனால் அவன் ஒரு யூதன் என்று அவர்கள் அறிந்தபோது, அவர்கள் இரண்டு மணிநேரம், “எபேசியர்களின் அர்த்தமிஸ் தேவதையே வாழ்க!” என்று ஒரே குரலில் சத்தமிட்டார்கள்.

  8. அந்த நகரத்தின் ஆணையாளர், மக்கள் கூட்டத்தை அமைதிப்படுத்தி அவர்களிடம், “எபேசு பட்டணத்தாரே, பெரிதான அர்த்தமிஸ் உருவச்சிலை வானத்திலிருந்து விழுந்தது என்பதையும், இந்த தேவதைக்கும் உருவச்சிலைக்கும், எபேசு பட்டணமே பாதுகாப்பு இடமாக இருக்கிறது என்பதையும் இந்த முழு உலகமும் அறியுமே.

  9. இவை மறுக்கமுடியாத உண்மைகளாய் இருப்பதனால், நீங்கள் முன்யோசனையின்றி எதையுமே செய்யாமல், அமைதியாய் இருக்கவேண்டும்.

  10. நீங்கள் இந்த மனிதரை இங்கு கொண்டுவந்திருக்கிறீர்கள். ஆனால் இவர்களோ, ஆலயங்களைக் கொள்ளையடிக்கவும் இல்லை, நமது தேவதையை அவதூறாய் பேசவும் இல்லை.

  11. எனவே தெமேத்திரியுவுக்கும், அவனுடைய உடன் தொழிலாளிகளுக்கும், யார் மீதாவது ஒரு வழக்கு இருக்குமானால், அதற்காக நீதிமன்றங்கள் திறந்தே இருக்கின்றன. அங்கே அதிபதிகளும் இருக்கிறார்கள். எனவே அவர்கள் தங்கள் குற்றச்சாட்டுகளை அங்கே எடுத்துச் சொல்லட்டும்.

  12. இதைவிட வேறு ஏதாவது உங்களுக்கிருந்தால், அது சட்ட மன்றம் கூடியே தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.

  13. இப்பொழுது இன்று நடந்த இந்த சம்பவத்தினால், நாமே கலகம் செய்ததாக குற்றம் சாட்டப்படக்கூடிய ஒரு ஆபத்தில் இருக்கிறோம். அவ்வாறு குற்றஞ்சாட்டினால், இந்தக் கலகம் நியாயமானது எனக் காட்டுவதற்கு நம்மால் முடியாது, ஏனெனில், நாம் சொல்லக்கூடிய காரணம் எதுவும் இல்லை” என்றான்.

  14. அவன் இதைச் சொல்லி முடித்தபின்பு, கூடியிருந்தவர்களைக் கலைந்து போகும்படி செய்தான்.

  15. கலகம் ஓய்ந்தபின் பவுல் சீடரை அழைத்து அவர்களை உற்சாகப்படுத்தினான். பின் அவர்களிடம் விடைபெற்று, மக்கெதோனியாவுக்குப் போகப் புறப்பட்டான்.

  16. அவன் அந்தப் பகுதிகள் வழியாகப்போய், மக்களை உற்சாகப்படுத்தும் வார்த்தைகளால் பேசினான். பின்பு அவன் கிரேக்க நாட்டிற்கு வந்தான்.

  17. அங்கே அவன் மூன்று மாதங்கள் தங்கியிருந்தான். ஏனெனில், அவன் கப்பல் ஏறி சீரியாவுக்குப் புறப்பட இருக்கையில், யூதர்கள் அவனுக்கு எதிராய் சதி செய்தார்கள். அதனால் அவன், திரும்பி மக்கெதோனியா வழியாகப் போகத் தீர்மானித்தான்.

  18. அவனுடனேகூட பெரோயா பட்டணத்தைச் சேர்ந்த பீருவின் மகன் சோபத்தர், தெசலோனிக்கேயாவைச் சேர்ந்த அரிஸ்தர்க்கு, செக்குந்துஸ், தெர்பையைச் சேர்ந்த காயு, தீமோத்தேயு, ஆசியா பகுதியைச் சேர்ந்த தீகிக்கு, துரோப்பீம் ஆகியோரும் சென்றார்கள்.

  19. இவர்கள் எங்களுக்கு முன்பாகப் போய் துரோவா பட்டணத்தில் எங்களுக்காகக் காத்திருந்தார்கள்.

  20. ஆனால் நாங்களோ, புளிப்பில்லாத அப்பப் பண்டிகைக்குப் பின், பிலிப்பி பட்டணத்திலிருந்து கப்பல் மூலம் புறப்பட்டு, ஐந்து நாட்களுக்குப்பின் துரோவா பட்டணத்திற்கு வந்து, அவர்களோடு சேர்ந்துகொண்டோம். அங்கே நாங்கள் ஏழு நாட்கள் தங்கியிருந்தோம்.

  21. வாரத்தின் முதலாம் நாளிலே, நாங்கள் அப்பம் பிட்கும்படி ஒன்று கூடியிருந்தோம். பவுல் மக்களுக்குப் பிரசங்கித்துக் கொண்டிருந்தான். அவன் மறுநாள் போக எண்ணியிருந்ததினாலே, நடு இரவுவரை பேசிக்கொண்டேயிருந்தான்.

  22. நாங்கள் கூடியிருந்த மேல்வீட்டு அறையிலே, பல விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன.

  23. ஐத்திகு எனப்பட்ட ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்து, பவுல் தொடர்ந்து பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவன் ஆழ்ந்த நித்திரை மயக்கத்திலிருந்ததால், மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்தான். அவனைத் தூக்கியபோது, அவன் இறந்திருந்தான்.

  24. பவுல் கீழே இறங்கிப்போய், அந்த வாலிபன்மீது விழுந்து, தனது கைகளினால் அவனை அணைத்துக்கொண்டான். அவன் அங்கே நின்றவர்களிடம், “பயப்படவேண்டாம். அவன் உயிரோடிருக்கிறான்” என்று சொல்லி, அவனை அவர்களிடம் ஒப்படைத்தான்.

  25. பின்பு அவன் மேல்மாடிக்குத் திரும்பவும் போய், விசுவாசிகளுடன் அப்பம் பிட்டு சாப்பிட்டான். அவன் விடியும்வரை அவர்களோடு கலந்துரையாடிவிட்டு, அவர்களைவிட்டுப் புறப்பட்டுப் போனான்.