Skip to content

Paul பற்றிய பைபிள் வசனங்கள்: His defense

29 வசனங்கள் · 103 அம்சங்கள்

His defense பற்றிய வசனங்கள்

  1. படைத்தளபதி வந்து அவனைக் கைதுசெய்து, அவனை இரண்டு சங்கிலிகளினால் கட்டும்படி உத்தரவிட்டான். பின்பு அவன், இவன் யார் என்றும், என்ன செய்தான் என்றும் விசாரித்தான்.

  2. மக்கள் கூட்டத்திலிருந்த சிலர் சத்தமிட்டு ஏதோ ஒன்றைச் சொன்னார்கள். மற்றவர்கள் வேறு எதையோ சொன்னார்கள். ஏற்பட்டிருந்த குழப்பத்தினால், படைத்தளபதிக்கு உண்மையை அறியமுடியவில்லை. எனவே அவன் பவுலைப் படையினரின் முகாமுக்குக் கொண்டுசெல்லும்படி உத்தரவிட்டான்.

  3. பவுல் படிக்கட்டுகளை அடைந்தபோது, கலகக்காரரை அடக்க முடியாதிருந்ததால், பவுலை படைவீரர் தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது.

  4. பின்னாலே சென்ற மக்கள் கூட்டம், “அவனைக் கொல்லுங்கள்” என்று சத்தமிட்டார்கள்.

  5. படைவீரர் பவுலை முகாமுக்குள் கொண்டுசெல்ல முயலுகையில், அவன் படைத்தளபதியிடம், “நான் உம்முடன் கொஞ்சம் பேசலாமா?” என்று கேட்டான். அதற்கு அவன், “உனக்கு கிரேக்க மொழி தெரியுமா?

  6. சிறிது காலத்துக்குமுன் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தி, நாலாயிரம் பயங்கரவாதிகளை பாலைவனத்திற்கு வழிநடத்திப்போன எகிப்தியன் நீ தானா?” என்று கேட்டான்.

  7. அதற்குப் பவுல், “நான் ஒரு யூதன், சிலிசியா நாட்டைச் சேர்ந்த தர்சு பட்டணத்தைச் சேர்ந்தவன். ஒரு பிரபலமான பட்டணத்தின் குடிமகன். தயவுசெய்து இந்த மக்களுடன் நான் பேச என்னை அனுமதியும்” என்றான்.

  8. படைத்தளபதியின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு, பவுல் படிக்கட்டுகளில் நின்று கூடியிருந்த மக்களுக்கு சைகை காட்டினான். அவர்கள் அனைவரும் அமைதியடைந்தபோது, அவன் எபிரெய மொழியில் அவர்களுடன் பேசத் தொடங்கினான்.

  9. பவுல் அவர்களைப் பார்த்து, “சகோதரரே, தந்தையரே, எனது சார்பாக நான் சொல்வதைக் கேளுங்கள்” என்றான்.

  10. அவன் தங்களுடன் எபிரெய மொழியில் பேசுவதை அவர்கள் கேட்டபோது, அவர்கள் அமைதியாயிருந்தார்கள். அப்பொழுது பவுல் சொன்னதாவது:

  11. “நான் ஒரு யூதன், சிலிசியா நாட்டிலுள்ள தர்சு பட்டணத்தில் பிறந்தவன், ஆனால் எருசலேம் நகரத்திலே வளர்க்கப்பட்டவன். கல்விமான் கமாலியேலிடம் நமது தந்தையர்களின் மோசேயின் சட்டத்தையும், அதன் வழக்கங்களையும் நுட்பமாகக் கற்றேன். இன்று நீங்கள் ஒவ்வொருவரும் இறைவனிடம் பக்திவைராக்கியமாய் இருப்பதுபோலவே நானும் இருந்தேன்.

  12. இந்த வழியைப் பின்பற்றியவர்களை கொலைசெய்யும் அளவிற்கு துன்பப்படுத்தி இருக்கிறேன். இந்த வழியைப் பின்பற்றுகிற ஆண்களையும், பெண்களையும் கைதுசெய்து சிறையில் அடைத்தேன்.

  13. இதைக்குறித்து பிரதான ஆசாரியனும், நீதிமன்றத்திலுள்ள அனைவரும் சாட்சி கொடுப்பார்கள். அவர்களிடமிருந்து தமஸ்குவிலுள்ள சகோதரர்களுக்குக் கொடுக்கும்படி கடிதங்களையும் பெற்றேன். இந்த வழியைப் பின்பற்றுகிறவர்களைத் தண்டிப்பதற்கென அவர்களைக் கைதுசெய்து, எருசலேமுக்குக் கொண்டுவரும்படி தமஸ்குவுக்குப் போனேன்.

  14. “நான் தமஸ்குவை நெருங்கியபோது, மத்தியான வேளையானது. அப்பொழுது திடீரென வானத்திலிருந்து ஒரு பிரகாசமான ஒளி என்னைச் சுற்றிலும் பிரகாசித்தது.

  15. நான் தரையில் விழுந்தேன். ‘சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்?’ என்று ஒரு குரல் எனக்குச் சொல்வதைக் கேட்டேன்.

  16. “ ‘அப்பொழுது நான், ஆண்டவரே, நீர் யார்?’ ” என்றேன். “அதற்கு அவர், ‘நான் நசரேயனாகிய இயேசு, நீ துன்புறுத்துவது என்னைத்தான்’ என்று சொன்னார்.

  17. என்னுடனேகூட வந்தவர்கள் அந்த வெளிச்சத்தைக் கண்டார்கள். ஆனால், என்னுடன் பேசிக் கொண்டிருந்தவரின் குரலை அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை.

  18. “அப்பொழுது நான் அவரிடம், ‘ஆண்டவரே, நான் என்ன செய்யவேண்டும்?’ என்று கேட்டேன். “அதற்கு அவர், ‘நீ எழுந்து, தமஸ்கு பட்டணத்திற்குள்ளே போ. நீ செய்ய வேண்டியதெல்லாம், அங்கே உனக்குச் சொல்லப்படும்’ என்றார்.

  19. என்னுடனேகூட வந்தவர்கள் எனது கையைப் பிடித்து, தமஸ்கு பட்டணத்திற்குள்ளே என்னைக் கூட்டிக்கொண்டு சென்றார்கள். ஏனெனில், அந்த ஒளியின் பிரகாசத்தினால் நான் பார்வை இழந்துபோனேன்.

  20. “பின்பு அனனியா என்னும் பெயருடைய ஒருவன் என்னைப் பார்க்க வந்தான். அவன் மோசேயின் சட்டத்தைப் பக்தியுடன் கைக்கொள்ளும் ஒருவனாயிருந்தான். தமஸ்குவில் வாழ்ந்த எல்லா யூதராலும், அவன் உயர்வாய் மதிக்கப்பட்டவனாகவும் இருந்தான்.

  21. அவன் என் அருகே நின்று, ‘சகோதரனாகிய சவுலே, நீ உன் கண் பார்வையைப் பெற்றுக்கொள்!’ என்றான். அந்த வினாடியிலேயே, என்னால் அவனைப் பார்க்கமுடிந்தது.

  22. “பின்பு அனனியா என்னிடம்: ‘நமது தந்தையரின் இறைவன் உன்னைத் தெரிந்தெடுத்திருக்கிறார். நீ அவருடைய திட்டத்தை அறியும்படிக்கும், நீதிமானாகிய அவரைக் காணும்படிக்கும், அவருடைய வாயிலிருந்து வார்த்தைகளைக் கேட்கும்படிக்கும் அவர் உன்னைத் தெரிந்திருக்கிறார்.

  23. நீ கண்டதையும் கேட்டதையும் குறித்து, அனைவருக்கும் அவருடைய சாட்சியாய் இருப்பாய்.

  24. இப்பொழுதும், நீ எதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறாய்? எழும்பி, அவருடைய பெயரைக் கூப்பிட்டு, திருமுழுக்கைப் பெற்றுக்கொண்டு, உன் பாவங்களைக் கழுவிக்கொள்’ என்றான்.

  25. “பின்பு நான், எருசலேமுக்கு திரும்பிவந்து ஆலயத்தில் மன்றாடிக்கொண்டிருக்கையில், நான் ஆவிக்குட்பட்டேன்.