God
God பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
“யெகோவா சொல்வது இதுவே: யெகோவாவின் ஆலய முற்றத்தில் நின்று, யெகோவாவின் ஆலயத்தில் வழிபட வருகின்ற யூதா பட்டணத்து மக்கள் எல்லோருடனும் பேசு. நான் உனக்குச் சொல்லும்படி கட்டளையிட்டிருக்கிற எல்லா வார்த்தைகளையும் ஒன்றுவிடாமல் சொல்.
ஒருவேளை அவர்கள் அந்த வார்த்தைகளைக் கேட்டு, ஒவ்வொருவரும் தங்கள் தீமையான வழியைவிட்டுத் திரும்புவார்கள். அப்பொழுது அவர்கள் செய்திருக்கிற தீமையின் நிமித்தம் நான் திட்டமிட்ட பேராபத்தை அவர்கள்மேல் கொண்டுவராமல் மனமிரங்குவேன்.
நீ அவர்களிடம் சொல்லவேண்டியதாவது, ‘யெகோவா சொல்வது இதுவே: நீங்கள் எனக்குச் செவிகொடுத்து, நான் உங்கள்முன் வைத்த என் சட்டத்தின்படி நடக்கவேண்டும்.
நான் திரும்பத்திரும்ப உங்களிடத்தில் அனுப்பும் என் ஊழியரான இறைவாக்கினரின் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கவேண்டும். ஆனால் நீங்கள் எனக்குச் செவிகொடுக்கவில்லை.
ஆகையால் நான் இந்த ஆலயத்தை சீலோவைப்போல் அழித்து, இந்தப் பட்டணத்தையும் பூமியிலுள்ள எல்லா நாடுகளின் மத்தியிலும் சாபத்திற்குள்ளாக்குவேன் என்று சொல்’ என்றார்.”
ஆசாரியரும், இறைவாக்கினரும், எல்லா மக்களும் யெகோவாவின் ஆலயத்தில் எரேமியா கூறிய இந்த வார்த்தைகளைக் கேட்டார்கள்.
யெகோவா சொல்லும்படி தனக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் எரேமியா எல்லா மக்களுக்கும் சொன்னான். சொன்னவுடனேயே ஆசாரியரும், இறைவாக்கினரும் எல்லா மக்களும் அவனைப் பிடித்து, “நீ சாகவேண்டும்.
நீ ஏன், இந்த ஆலயம் சீலோவைப் போலாகும் என்றும், பட்டணம் குடிகளின்றிப் பாழாகும் என்றும் யெகோவாவின் பெயரில் இறைவாக்கு உரைத்தாய்?” என்று கேட்டார்கள். எல்லா மக்களும் யெகோவாவின் ஆலயத்தில் எரேமியாவைச் சூழ்ந்துகொண்டார்கள்.
இவற்றை யூதாவின் அதிகாரிகள் கேள்விப்பட்டபோது அரச அரண்மனையிலிருந்து யெகோவாவின் ஆலயத்திற்குச் சென்று யெகோவாவின் ஆலயத்திலிருந்த புதிய வாசலின் முகப்பில் உட்கார்ந்தார்கள்.
அப்பொழுது எரேமியா எல்லா அதிகாரிகளையும் மக்களையும் பார்த்து: “இந்த ஆலயத்திற்கும் இந்தப் பட்டணத்திற்கும் எதிராய் நான் சொன்ன எல்லாவற்றையும் இறைவாக்கு உரைக்கும்படி யெகோவாவே என்னை அனுப்பினார்.
இப்போது உங்கள் வழிகளையும், செயல்களையும் சீர்திருத்தி, உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படியுங்கள். அப்பொழுது யெகோவா மனமிரங்கி உங்களுக்கெதிராகத் தீர்ப்பளித்த பேராபத்தைக் கொண்டுவரமாட்டார்.
நீங்கள் என்னைக் கொன்றால், குற்றமில்லாத இரத்தப்பழியை உங்கள்மேலும், இந்தப் பட்டணத்தின்மேலும், இதில் வாழ்கிறவர்கள்மேலும் நீங்களே சுமரப்பண்ணுவீர்கள் என்பதை நிச்சயமாக அறிந்துகொள்ளுங்கள். ஏனெனில், உண்மையிலேயே நீங்கள் கேட்ட இந்த வார்த்தைகளையெல்லாம் உங்களுக்குச் சொல்லும்படி யெகோவாவே என்னை அனுப்பினார்” என்றான்.
அப்பொழுது அதிகாரிகளும், எல்லா மக்களும் ஆசாரியர்களையும், இறைவாக்கினரையும் பார்த்து, “இந்த மனிதன் மரண தண்டனைக்கு தகுதியானவன் அல்ல. அவன் எங்கள் இறைவனாகிய யெகோவாவின் பெயரிலேயே எங்களுடன் பேசியிருக்கிறான்” என்றார்கள்.
“யூதாவின் அரசன் எசேக்கியாவின் நாட்களில், மோரேசேத் ஊரைச்சேர்ந்த மீகா இறைவாக்குரைத்தான். அவன் எல்லா யூத மக்களிடமும், ‘சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “ ‘சீயோன் வயலைப்போல உழப்படும், எருசலேம் மண்மேடுகளாகும், ஆலயம் அமைந்துள்ள மலை, புல் அடர்ந்த காடாகும்’” என்று சொல்லியிருந்தான்.
“அப்பொழுது யூதாவின் அரசன் எசேக்கியாவோ அல்லது யூதாவிலிருந்து வேறு எவரோ அவனைக் கொன்றார்களா? எசேக்கியா யெகோவாவுக்குப் பயந்து அவருடைய தயவை நாடவில்லையோ? யெகோவாவும் அவர்களுக்கு எதிராகத் தீர்ப்பிட்ட பேராபத்தை அனுப்பாதபடி, மனமிரங்கவில்லையோ? ஆனால் நாங்களோ, எங்களுக்கெதிராகப் பெரும் பேரழிவை வருவித்துக்கொள்ளப் போகிறோம்” என்றார்கள்.
இப்பொழுது கீரியாத்யாரீம் ஊரைச்சேர்ந்த செமாயாவின் மகன் உரியா என்னும் வேறொருவனும் யெகோவாவின் பெயரில் இறைவாக்கு உரைத்தான். அவனும் எரேமியா கூறிய அதே வார்த்தைகளையே இந்தப் பட்டணத்திற்கும், இந்த நாட்டிற்கும் எதிராக இறைவாக்கு உரைத்தான்.
யூதாவின் அரசன் யோசியாவின் மகன் யோயாக்கீமினுடைய ஆட்சியின் ஆரம்பத்தில், எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து இந்த வார்த்தை வந்தது.
யெகோவா என்னிடம், “நீ உனக்குக் கயிறுகளையும் நுகங்களையும், உண்டாக்கி, அவைகளை உன் கழுத்தில் போட்டுக்கொள்.
அவர்களுடைய அரசர்களுக்கு ஒரு செய்தி அனுப்பவேண்டிய செய்தியாவது: ‘இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “இதை உங்களுடைய அரசர்களுக்குப் போய்ச் சொல்லுங்கள்.
எனது மகா வலிமையாலும் நீட்டப்பட்ட புயத்தாலும் பூமியையும், அதிலுள்ள மனிதரையும், மிருகங்களையும் நான் படைத்தேன். எனக்கு விருப்பமானவனுக்கே நான் அவைகளைக் கொடுக்கிறேன்.
இப்பொழுது உங்கள் நாடுகள் எல்லாவற்றையும், பாபிலோன் அரசனும் எனது பணியாளனுமான நேபுகாத்நேச்சாரின் கையில் கொடுப்பேன். காட்டு மிருகங்களையும் அவனுக்குக் கீழ்ப்படுத்துவேன்.
“ ‘ “ஆயினும், எந்த நாடாகிலும் அரசாகிலும் பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாருக்குப் பணிசெய்யாமலும், அவனுடைய நுகத்தின் கீழே தன் கழுத்தை வைக்காமலும் போனால், அந்த நாட்டை நான் தண்டிப்பேன். அந்த நாட்டை அவனுடைய கையால் நான் அழித்துத் தீர்க்கும்வரை நான் வாளினாலும், பஞ்சத்தினாலும், கொள்ளைநோயினாலும் தண்டிப்பேன் என்று யெகோவா அறிவிக்கிறார்.
ஏனெனில் உங்கள் நாடுகளிலிருந்து உங்களைத் தூரமான இடத்திற்கு அகற்ற உதவும் பொய்களையே அவர்கள் உங்களுக்கு இறைவாக்காகச் சொல்கிறார்கள். நான் உங்களை நாடுகடத்துவேன். நீங்கள் அழிவீர்கள்.
ஆனால் எந்த நாடாவது பாபிலோன் அரசனின் நுகத்திற்குத் தங்களைக் கீழ்ப்படுத்தி அவனுக்குப் பணிசெய்தால், நான் அந்த நாட்டை அதன் சொந்த நாட்டிலேயே தங்கச்செய்து, நிலத்தைப் பண்படுத்தி அங்கே வாழவிடுவேன் என்று யெகோவா அறிவிக்கிறார்.” ’ ”
நீயும் உன் மக்களும் வாளினாலும், பஞ்சத்தினாலும், கொள்ளைநோயாலும் ஏன் சாகவேண்டும்? பாபிலோன் அரசனுக்குப் பணி செய்யாத எந்த நாட்டையும் இவைகளால் அழிப்பதாக யெகோவா எச்சரித்திருக்கிறாரே.