உள்ளடக்கத்திற்குச் செல்க

David

968 வசனங்கள் · 40 குடும்ப உறுப்பினர்கள்

David பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. எல்லா இஸ்ரயேலர்களும் யூதாவின் மக்களும் தாவீதிடம் அன்பு செலுத்தினார்கள். ஏனெனில் அவன் எல்லா யுத்தங்களையும் தலைமை வகுத்து நடத்தினான்.

  2. சவுல் தாவீதிடம், “என் மூத்த மகள் மேராப் இருக்கிறாள். அவளை நான் உனக்குத் திருமணம் செய்துகொடுப்பேன். நீ எனக்குத் தைரியமாய் பணிசெய்து யெகோவாவின் யுத்தத்தை நடத்து” என்றான். “நான் அவனுக்கு எதிராகக் கையை உயர்த்தமாட்டேன். பெலிஸ்தியரே அதைச் செய்யட்டும்” எனச் சவுல் தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.

  3. ஆனால் தாவீது சவுலிடம், “அரசனின் மருமகனாவதற்கு நான் யார்? என் குடும்பமும், இஸ்ரயேலரில் என் தந்தையின் வம்சம் என்ன!” என்றான்.

  4. எனவே சவுலின் மகள் மேராபை தாவீதுக்குக் கொடுக்கவேண்டிய காலம் வந்தபோது, சவுல் அவளை மேகோலாத்தியனான ஆதரியேலுக்குத் திருமணம் செய்துகொடுத்தான்.

  5. ஆனால் சவுலின் மற்ற மகள் மீகாள் தாவீதைக் காதலித்தாள். சவுலுக்கு இச்செய்தி அறிவிக்கப்பட்டபோது அவன் மகிழ்ச்சியடைந்தான்.

  6. ஏனெனில், “அவளை அவனுக்குக் கொடுப்பேன். இதனால் பெலிஸ்தியரின் கரம் அவனுக்கு எதிராக வருவதற்கு அவள் அவனுக்குக் கண்ணியாயிருப்பாள்” என நினைத்தான். எனவே சவுல் தாவீதிடம், “இப்பொழுது உனக்கு எனது மருமகனாவதற்கு இரண்டாவது தருணம் கிடைத்திருக்கிறது” என்றான்.

  7. பின்பு சவுல் தன் ஏவலாளர்களிடம் உத்தரவிட்டுச் சொன்னதாவது: “நீங்கள் தாவீதிடம், அரசனும் உன்னில் பிரியமாய் இருக்கிறார். அவருடைய ஏவலாட்களும் உன்னிடம் அன்பாயிருக்கிறார்கள். எனவே நீ அரசனின் மருமகனாவது நல்லது என்று இரகசியமாய்ச் சொல்லுங்கள்” என்றான்.

  8. அவ்வாறே இந்த வார்த்தைகளை அவர்கள் தாவீதிடம் சொன்னார்கள். அதைக்கேட்ட தாவீது, “அரசனின் மருமகனாவது உங்களுக்குச் சிறிய காரியமாகத் தோன்றுகிறதா? நானோ ஒரு ஏழையும், மதிக்கப்படாதவனுமாய் மட்டுமே இருக்கிறேன்” என்றான்.

  9. எனவே தாவீது சொன்னவற்றைப் பணியாட்கள் சவுலிடம் சொன்னார்கள்.

  10. அதற்கு சவுல், “நீங்கள் தாவீதிடம், ‘அரசனுடைய பகைவரைப் பழிவாங்கும் பொருட்டு, நூறு பெலிஸ்தியருடைய நுனித்தோல்களைவிட, அரசன் மணப்பெண்ணுக்குரிய வேறு எந்த வெகுமதியையும் கேட்க விரும்பவில்லை’ என்று சொல்லுங்கள்” என்றான். இவ்விதமாக பெலிஸ்தியரின் கையினால் தாவீதை வீழ்த்துவதே சவுலின் திட்டமாயிருந்தது.

  11. சவுலின் ஏவலாட்கள் அவன் சொன்னவற்றைத் தாவீதுக்குச் சொன்னபோது, அரசனுக்கு மருமகனாவதில் மகிழ்ச்சியடைந்தான். எனவே குறித்த காலம் முடியுமுன்,

  12. தாவீது தன் போர்வீரருடன் சென்று இருநூறு பெலிஸ்தியரைக் கொன்றான். அவர்களின் நுனித்தோலைக் கொண்டுவந்து அரசனின் மருமகனாகும்படி முழு எண்ணிக்கையையும் அரசனிடம் செலுத்தினான். அப்பொழுது சவுல் தன் மகள் மீகாளை அவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான்.

  13. யெகோவா தாவீதுடன் இருக்கிறார் என்பதையும், தன் மகள் மீகாள் தாவீதில் அன்பாயிருக்கிறாள் என்பதையும் சவுல் உணர்ந்து கொண்டான்.

  14. இதனால் சவுல் தாவீதுக்கு இன்னும் அதிகமாய்ப் பயந்தான். அதுமுதல் சவுல் தன் கடைசிநாள் வரையும் தாவீதின் பகைவனாயிருந்தான்.

  15. பெலிஸ்தியரின் படைத்தலைவர்கள் தொடர்ந்து யுத்தத்திற்கு வந்தார்கள். அவர்கள் வரும்போதெல்லாம் சவுலின் மற்ற படைத் தலைவர்களையும்விட, தாவீது அதிக வெற்றியடைந்தான். இதனால் அவனுடைய பெயர் மிகவும் புகழ்பெற்றது.

  16. தாவீதைக் கொலை செய்யுங்கள் என்று சவுல் யோனத்தானுக்கும், தன் எல்லா பணியாட்களுக்கும் சொன்னான். ஆனால் யோனத்தான் தாவீதை அதிகம் விரும்பினான்.

  17. அதனால் யோனத்தான் அவனை எச்சரித்துச் சொன்னதாவது: “எனது தகப்பன் சவுல் உன்னைக் கொலைசெய்யச் சந்தர்ப்பத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். ஆகையால் நாளை காலை எச்சரிக்கையாயிருந்து, இரகசியமான ஒரு இடத்தில் ஒளிந்து மறைந்திரு.

  18. இவ்விதமாய் யோனத்தான் தன் தகப்பன் சவுலிடம் தாவீதைப் பற்றி நன்றாய்ப் பேசி அவனிடம், “அரசன் தமது ஊழியன் தாவீதுக்கு ஒரு தீமையும் செய்யாமல் இருக்கவேண்டும். அவன் உங்களுக்குத் தீமை செய்யவில்லை. அவன் செய்திருப்பது உங்களுக்கு அதிக நன்மையே கொடுத்திருக்கிறது.

  19. அவன் தன் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பெலிஸ்தியனைக் கொன்றானே. இதனால் யெகோவா இஸ்ரயேலருக்குப் பெரிய வெற்றியைக் கொடுத்தார். நீங்களும் அதைக்கண்டு மகிழ்ச்சியடைந்தீர்கள். அப்படியிருக்க ஏன் தாவீதைப்போல் குற்றமற்ற ஒருவனைக் காரணமில்லாமல் கொலைசெய்து ஒரு தீமையை செய்யவேண்டும்” என்றான்.

  20. அதன்பின் யோனத்தான் தாவீதை அழைத்து, தான் தனது தகப்பனுடன் பேசிய எல்லாவற்றையும் சொல்லி, அவனைச் சவுலிடம் அழைத்து வந்தான். அவன் முன்போலவே சவுலுடன் இருந்தான்.

  21. மறுபடியும் யுத்தம் மூண்டது. தாவீது போய் பெலிஸ்தியருடன் சண்டையிட்டு அவன் அதிக பெலத்துடன் அவர்களைத் தாக்கினான். அவர்கள் அவனுக்கு முன் நிற்காது தப்பி ஓடினார்கள்.

  22. ஒரு நாள் சவுல் தன் வீட்டில் இருந்தபோது, யெகோவாவிடமிருந்து வந்த பொல்லாத ஆவி அவன்மேல் இறங்கியது. அப்பொழுது தாவீது தன் யாழை வாசித்துக்கொண்டிருந்தான்.

  23. அவ்வேளையில் சவுல் தன் கையிலிருந்த ஈட்டியால் தாவீதைச் சுவரோடு சேர்த்துக் குத்த முயன்றான். ஆனால் தாவீது விலகிக்கொண்டதால், ஈட்டி சுவரில் பாய்ந்தது. தாவீது அன்றிரவு தப்பி ஓடிவிட்டான்.

  24. அதன்பின், சவுல் தாவீதின் வீட்டை நோட்டமிட்டு அவனை மறுநாள் அதிகாலையில் கொலை செய்யும்படி, அவன் வீட்டிற்கு ஆட்களை அனுப்பினான். இதை அறிந்த அவன் மனைவி மீகாள் தாவீதிடம், “இன்றிரவு உமது உயிருக்காகத் தப்பி ஓடாவிட்டால் நாளை நீர் கொல்லப்படுவீர்” என்று எச்சரித்தாள்.

  25. எனவே மீகாள் தாவீதை ஜன்னல் வழியாய் இறக்கிவிட அவன் தப்பி ஓடினான்.