Skip to content
மாற்கு 1:30-45

மாற்கு 1:30-45

30
அங்கே சீமோனுடைய மாமியார் காய்ச்சலுடன் படுக்கையில் கிடந்தாள். உடனே அவர்கள் அவளைப்பற்றி இயேசுவுக்குச் சொன்னார்கள்.
31
எனவே இயேசு அவளிடத்தில் சென்று, அவளுடைய கையைப் பிடித்து, அவள் எழுந்துகொள்ள உதவினார். உடனே காய்ச்சல் அவளைவிட்டுப் போயிற்று; அவள் அவர்களுக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினாள்.
32
அன்று மாலை கதிரவன் மறைந்தபின்பு, வியாதிப்பட்டவர்கள், பிசாசு பிடித்தவர்கள் எல்லோரையும் மக்கள் இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்.
33
பட்டணத்திலுள்ள அனைவரும் வீட்டு வாசலுக்கு முன்பாகக் கூடியிருந்தார்கள்.
34
பலவித வியாதி உடையவர்களாயிருந்த அநேகரை, இயேசு குணமாக்கி, அநேக பிசாசுகளையும் துரத்தினார். அந்தப் பிசாசுகள் தம்மை யாரென்று அறிந்திருந்தபடியால், அவைகள் பேசுகிறதற்கு இயேசு அனுமதிக்கவில்லை.
35
விடியுமுன் இருட்டாய் இருக்கையிலேயே இயேசு எழுந்து புறப்பட்டு ஒரு தனிமையான இடத்திற்குப் போய், அங்கே மன்றாடினார்.
36
சீமோனும் அவனுடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச்சென்றார்கள்.
37
அவர்கள் இயேசுவைக் கண்டபோது, “எல்லோரும் உம்மைத் தேடிக்கொண்டு இருக்கிறார்களே” என்றார்கள்.
38
இயேசு அவர்களிடம், “நாம் வேறுசில கிராமங்களுக்குப் போவோம்; அங்கேயும் நான் பிரசங்கிக்க வேண்டும். அதற்காகவே நான் வந்திருக்கிறேன்” என்றார்.
39
எனவே, இயேசு கலிலேயா முழுவதிலும் பயணம் செய்து, ஜெப ஆலயங்களில் நற்செய்தியை அறிவித்து, பிசாசுகளையும் துரத்தினார்.
40
குஷ்டவியாதி உள்ளவன் இயேசுவினிடத்தில் வந்து முழங்காற்படியிட்டு, நீர் விரும்பினால், “என்னைச் சுத்தமாக்க உம்மால் முடியும்” என்று கெஞ்சி வேண்டிக்கொண்டான்.
41
இயேசு மனதுருகினவராய் தன் கையை நீட்டி அவனைத் தொட்டு, “எனக்கு சித்தமுண்டு, நீ சுத்தமடைவாயாக!” என்றார்.
42
உடனே குஷ்டவியாதி அவனைவிட்டு நீங்கியது, அவன் குணமடைந்தான்.
43
இயேசு அவனுக்கு ஒரு கண்டிப்பான எச்சரிப்பைக் கொடுத்து:
44
“நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடி பார்த்துக்கொள். ஆனால், நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, உன்னுடைய சுத்திகரிப்புக்காக மோசே கட்டளையிட்ட பலிகளைச் செலுத்து. அது அவர்களுக்கு நீ சுகமடைந்ததற்கான ஒரு சாட்சியாய் இருக்கும்” என்று சொல்லி அவனை உடனே அனுப்பிவிட்டார்.
45
ஆனால் அவன் புறப்பட்டுப்போய் தாராளமாய் பேசத்தொடங்கி, தனக்கு நடந்த செய்தியை எங்கும் பரப்பினான். இதன் காரணமாக, இயேசுவினால் ஒரு பட்டணத்திற்குள்ளும் வெளிப்படையாக செல்லமுடியாமல், வெளியே தனிமையான இடங்களிலேயே தங்கினார். ஆனால் எல்லா இடங்களிலும் இருந்து மக்கள் அவரிடத்திற்கு வந்தார்கள்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options