லூக்கா 23:10-34
10
தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியரும் அங்கே நின்று ஆவேசத்தோடு குற்றம் சாட்டினார்கள்.
11
அப்பொழுது ஏரோதுவும், அவனுடைய படைவீரரும் அவரை அவமதித்து, அவரைக் கேலி செய்தார்கள். அவர்கள் இயேசுவுக்கு அலங்காரமான ஒரு மேலுடையை உடுத்தி, அவரைத் திரும்பவும் பிலாத்துவிடம் அனுப்பினார்கள்.
12
அன்று முதல் ஏரோதுவும், பிலாத்துவும் நண்பர்களாயினர். அதற்குமுன், அவர்கள் இருவரும் பகைவர்களாக இருந்தார்கள்.
13
பிலாத்து தலைமை ஆசாரியர்களையும், ஆட்சியாளர்களையும், மக்களையும் ஒன்றாகக் கூப்பிட்டு,
14
அவர்களிடம், “நீங்கள் இந்த மனிதனை, மக்களை கிளர்ச்சி செய்யத் தூண்டும் ஒருவனாக என்னிடம் கொண்டுவந்தீர்கள். உங்கள் முன்பாகவே அவனை விசாரித்தேன். ஆனால், அவனுக்கு விரோதமாக நீங்கள் சாட்டும் குற்றத்திற்கான ஆதாரம் எதையும் நான் காணவில்லை.
15
ஏரோதுவும் குற்றம் காணவில்லை. ஏனெனில், நீங்கள் காண்கிறபடி ஏரோது இவனை நம்மிடத்திற்கே திருப்பி அனுப்பியிருக்கிறார். மரண தண்டனை பெற்றுக்கொள்ளத்தக்க குற்றம் எதையும் இவன் செய்யவில்லை.
16
எனவே, நான் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன்” என்றான்.
17
பண்டிகையின்போது, வழக்கத்தின்படி யாராவது ஒருவனை மக்களுக்கு விடுதலைசெய்ய வேண்டியிருந்தது.
18
அவர்களோ ஒரே குரலில், “இவன் வேண்டாம்! பரபாஸை எங்களுக்கு விடுதலையாக்கும்” என்று சத்தமிட்டார்கள்.
19
பரபாஸ் என்பவனோ பட்டணத்தில் கிளர்ச்சி செய்ததற்காகவும், கொலைசெய்ததற்காகவும் சிறையில் வைக்கப்பட்டிருந்தான்.
20
பிலாத்து இயேசுவை விடுதலைசெய்ய விரும்பி, அவர்களிடம் மீண்டும் பேசினான்.
21
ஆனால் அவர்களோ, “அவனைச் சிலுவையில் அறையும்! அவனைச் சிலுவையில் அறையும்!” என்று சத்தமிட்டார்கள்.
22
மூன்றாவது முறையும் பிலாத்து அவர்களிடம் பேசி, “ஏன், இவன் என்ன குற்றம் செய்தான்? இவனுக்கு மரண தண்டனை விதிப்பதற்கான ஆதாரம் எதையும் நான் காணவில்லை. ஆகவே, நான் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன்” என்றான்.
23
ஆனால் அவர்களோ, “அவன் சிலுவையில் அறையப்படவே வேண்டும்” என்று உரத்த சத்தமாய் வற்புறுத்திக் கேட்டார்கள். அவர்களுடைய சத்தமே மேற்கொண்டது.
24
பிலாத்துவும், அவர்கள் கேட்டபடியே செய்யத் தீர்மானித்தான்.
25
எனவே, அவர்கள் கேட்டுக்கொண்டபடியே, கிளர்ச்சி செய்ததற்காகவும், கொலைசெய்ததற்காகவும் சிறையில் போடப்பட்டிருந்த பரபாஸை பிலாத்து விடுதலை செய்தான்; இயேசுவையோ, அவர்கள் விருப்பத்தின்படி செய்வதற்காக ஒப்படைத்தான்.
26
அவர்கள் இயேசுவைக் கூட்டிக் கொண்டுபோகையில், நாட்டுப் புறத்திலிருந்து அவ்வழியே, சிரேனே ஊரைச்சேர்ந்த சீமோன் வந்துகொண்டிருந்தான். அவர்கள் அவனைப் பிடித்து, சிலுவையை அவன்மேல் வைத்து, இயேசுவுக்குப் பின்னாக அதைச் சுமந்துபோகும்படி செய்தார்கள்.
27
அதிக எண்ணிக்கையான மக்கள் கூட்டம், அவருக்குப் பின்னே சென்றார்கள். அவர்களில் சிலர், இயேசுவுக்காக அழுது புலம்பிக் கொண்டிருந்த பெண்களும் இருந்தார்கள்.
28
இயேசு அவர்களைத் திரும்பிப்பார்த்து, “எருசலேமின் பெண்களே, எனக்காக அழவேண்டாம்; நீங்கள் உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவுமே அழுங்கள்.
29
ஏனெனில், ‘மலடியாய் இருக்கிற பெண்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; குழந்தையைப் பிரசவிக்காதவர்களும், குழந்தைக்குப் பால் கொடுக்காதவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்’ என்று சொல்லும் காலம் வரும்.
30
“ ‘அப்பொழுது அவர்கள் மலைகளைப் பார்த்து, “எங்கள்மேல் விழுங்கள்!” என்றும், குன்றுகளைப் பார்த்து, “எங்களை மூடுங்கள்!” ’ என்றும் சொல்வார்கள்.
31
ஏனெனில், மரம் பச்சையாய் இருக்கும்போதே, இவர்கள் இப்படிச் செய்வார்களானால், அது காய்ந்து போகும்போது, என்னதான் செய்யமாட்டார்கள்?” என்றார்.
32
குற்றவாளிகளான வேறு இரண்டுபேரையும், மரணதண்டனைக்காக இயேசுவுடனேகூட கொண்டுபோனார்கள்.
33
அவர்கள் மண்டையோடு என்ற இடத்திற்கு வந்தபோது, அங்கே இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். அந்தக் குற்றவாளிகளில், ஒருவனை அவருடைய வலதுபக்கத்திலும், மற்றவனை அவருடைய இடது பக்கத்திலுமாக சிலுவைகளில் அறைந்தார்கள்.
34
அப்பொழுது இயேசு, “பிதாவே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்றார். படைவீரர்கள் சீட்டுப்போட்டு அவருடைய உடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள்.
Settings