உள்ளடக்கத்திற்குச் செல்க

Tithes பற்றிய பைபிள் வசனங்கள்

58 வசனங்கள் · 11 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. பின்பு நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம், “நீர் கட்டளையிட்ட எல்லாவற்றின் படியேயும் நான் என் வீட்டிலிருந்து பரிசுத்த பாகத்தைப் பிரித்து லேவியருக்கும், அந்நியருக்கும், தந்தையற்றவர்களுக்கும், விதவைகளுக்கும் கொடுத்திருக்கிறேன். நான் உமது கட்டளைகள் ஒன்றையும் விட்டு விலகவில்லை. அவற்றில் ஒன்றையும் மறக்கவும் இல்லை.

  2. நான் துக்கங்கொண்டாடியபோது, பரிசுத்த பங்கில் இருந்து ஒன்றையும் உண்ணவுமில்லை. நான் அசுத்தமுள்ளவனாய் இருந்தபோது அதில் ஒன்றையும் எடுக்கவுமில்லை. இல்லையெனில், அதிலொன்றையும் இறந்தவர்களுக்குப் படைக்கவுமில்லை. நான் என் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தேன். நீர் கட்டளையிட்ட எல்லாவற்றையும் செய்திருக்கிறேன்.

  3. நீர் உம்முடைய பரிசுத்த இடமாகிய பரலோகத்திலிருந்து கீழே பார்த்து, உம்முடைய மக்களாகிய இஸ்ரயேலரை ஆசீர்வதியும். எங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என ஆணையிட்டு வாக்குச்செய்தபடியே எங்களுக்குக் கொடுத்த பாலும் தேனும் வழிந்தோடும் இந்த நாட்டையும் ஆசீர்வதியும்” என்று சொல்லுங்கள்.

  4. உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் இஸ்ரயேலர்கள் தங்கள் தானியம், புதிய திராட்சை இரசம், எண்ணெய், தேன் ஆகியவற்றிலும், வயல் விளைவித்த எல்லாவற்றிலுமிருந்தும் முதற்பலன்களைத் தாராள மனதுடன் கொடுத்தார்கள். எல்லாவற்றிலும் இருந்து பத்திலொரு பாகத்தை ஏராளமாகக் கொண்டுவந்தார்கள்.

  5. யூதா பட்டணங்களில் வாழ்ந்த இஸ்ரயேல், யூதா மனிதர்களும் அவர்களின் மாட்டு மந்தைகளிலும், ஆட்டு மந்தைகளிலும் பத்திலொரு பங்குகளையும் கொண்டுவந்தார்கள். அத்துடன் தங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கென அர்ப்பணித்திருந்த பரிசுத்த பொருட்களிலும் பத்திலொன்றைக் கொண்டுவந்து, அவற்றைக் குவியலாகக் குவித்தார்கள்.

  6. இவர்கள் இதை மூன்றாம் மாதத்தில் செய்ய ஆரம்பித்து ஏழாம் மாதத்தில் முடித்தார்கள்.

  7. எசேக்கியாவும் அவன் அதிகாரிகளும் வந்து அந்தக் குவியல்களைக் கண்டபோது அவர்கள் யெகோவாவைத் துதித்து, அவரது மக்களான இஸ்ரயேலரை ஆசீர்வதித்தார்கள்.

  8. எசேக்கியா ஆசாரியர்களிடமும் லேவியர்களிடமும் குவியல்களைப் பற்றி விசாரித்தான்.

  9. அதற்கு சாதோக்கின் குடும்பத்தைச் சேர்ந்த தலைமை ஆசாரியன் அசரியா, “மக்கள் காணிக்கைகளை யெகோவாவினுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரத் தொடங்கியதுமுதல், நாங்கள் சாப்பிடுவதற்குத் தாராளமாய் இருக்கிறது. அதற்கு அதிகமாகவும் இருக்கிறது. ஏனெனில் யெகோவா தமது மக்களை ஆசீர்வதித்திருக்கிறார். அதனால் இவ்வளவு ஏராளமாக மீதமுமிருக்கிறது” எனப் பதிலளித்தான்.

  10. யெகோவாவின் ஆலயத்தில் களஞ்சியங்களை ஆயத்தப்படுத்தும்படி எசேக்கியா கட்டளையிட்டான்; அது அப்படியே செய்யப்பட்டது.

  11. அப்பொழுது அவர்கள் காணிக்கைகளையும், பத்திலொரு பாகத்தையும், அர்ப்பணிக்கப்பட்ட நன்கொடைகளையும் உண்மையான மனதுடன் கொண்டுவந்தார்கள். இவற்றிற்கு லேவியனான கொனனியா பொறுப்பாக இருந்தான். அவனுடைய சகோதரன் சிமேயி பதவியில் அவனுக்கு அடுத்ததாக இருந்தான்.

  12. “அத்துடன் எங்கள் இறைவனின் ஆலயத்தின் களஞ்சியத்திற்கு நாங்கள் அரைத்தமாவின் முதற்பங்கையும், எங்கள் முதல் தானிய காணிக்கைகளையும், எல்லா மரங்களின் பழங்கள், புதிய திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றின் முதற்பங்கையும் ஆசாரியர்களிடம் கொண்டுவருவோம். நாங்கள் வேலைசெய்யும் பட்டணங்களில் லேவியரே பத்திலொரு பங்கைச் சேர்க்கிறவர்களாகையால், எங்களுடைய விளைச்சலின் பத்திலொரு பங்கை நாங்கள் லேவியரிடம் கொண்டுவருவோம்.

  13. லேவியர் தசமபாகத்தை வாங்கும்போது, ஆரோனின் வழித்தோன்றலான ஆசாரியன் ஒருவர் லேவியருடன் இருக்கட்டும்; லேவியர் அதிலே பத்திலொரு பங்கை இறைவனுடைய ஆலயத்தில் இருக்கும் கருவூலத்திற்குக் கொண்டுவரட்டும்.

  14. லேவியர்கள் உட்பட இஸ்ரயேல் மக்கள் எல்லோரும் காணிக்கைகளாகிய தானியங்களையும், புதுத் திராட்சை இரசத்தையும், எண்ணெயையும் களஞ்சிய அறைகளுக்குக் கொண்டுவர வேண்டும். இந்த அறைகள் பரிசுத்த இடத்தின் பொருட்கள் வைக்கப்படுகிறதும், பணிசெய்யும் ஆசாரியர்கள், வாசற்காவலர், பாடகர் தங்குகிறதுமான அறைகள். “எனவே நாங்கள் எங்கள் இறைவனின் ஆலயத்தை அலட்சியம் செய்யமாட்டோம்” என்றார்கள்.

  15. அந்நாட்களில் நன்கொடைகளுக்கும், முதற்பலன்களுக்கும், தசமபாகங்களுக்கும் உரிய களஞ்சியங்களுக்கு பொறுப்பாயிருக்கும்படி மனிதர் நியமிக்கப்பட்டார்கள். பட்டணத்தைச் சுற்றியுள்ள வயல்களிலிருந்து லேவியருக்கும் ஆசாரியருக்கும் கொடுக்கும்படி, மோசேயின் சட்டத்தில் கட்டளையிட்டிருந்தபடி பங்கைச் சேகரித்து களஞ்சியங்களுக்கு கொண்டுவர வேண்டியது அவர்களுடைய பொறுப்பாயிருந்தது. ஏனெனில் யூதா மக்கள் பணிசெய்யும் ஆசாரியர்களிலும், லேவியரிலும் மகிழ்ச்சியடைந்தனர்.

  16. இது முற்காலத்தில் தானிய காணிக்கைகள், நறுமண தூபம், ஆலய பாத்திரங்கள், அத்துடன் லேவியருக்கும் பாடகருக்கும் வாசல்காப்போருக்கும் கொடுக்கும்படி கட்டளையிடப்பட்ட தானியம், புதிய திராட்சை இரசம், ஒலிவ எண்ணெய் ஆகியவற்றில் பத்தில் ஒரு பாகத்தையும், ஆசாரியருக்குரிய காணிக்கைகளையும் சேமித்து வைப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட ஒரு பெரிய அறையை தொபியாவுக்குக் கொடுத்திருந்தான்.

  17. அதோடு லேவியருக்குரிய பங்குகள் அவர்களுக்குக் கொடுக்கப்படாதிருந்ததையும் அறிந்தேன்; இதனால், ஆலய பணிக்குப் பொறுப்பாயிருந்த எல்லா லேவியரும், பாடகர்களும் தங்கள் வயல்களுக்குத் திரும்பிச் சென்றுவிட்டதாகவும் அறிந்துகொண்டேன்.

  18. இதனால் திரும்பவும் யூதர்கள் யாவரும் ஆலயக் களஞ்சிய அறைக்குத் தங்கள் தானியங்கள், புதிய திராட்சை இரசம், ஒலிவ எண்ணெய் ஆகியவற்றின் பத்தில் ஒரு பாகத்தைக் கொண்டுவந்தார்கள்.

  19. “சமாரியா மக்களே போங்கள்; பெத்தேலுக்குப் போய் பாவம் செய்யுங்கள். கில்காலுக்குப் போய் இன்னும் அதிக பாவம் செய்யுங்கள். காலைதோறும் உங்கள் பலிகளையும், மூன்று வருடத்திற்கொரு முறை உங்கள் பத்தில் ஒரு பாகத்தையும் கொண்டுவாருங்கள்.

  20. புளிப்பூட்டப்பட்ட அப்பத்தை நன்றிக் காணிக்கையாக எரியுங்கள். உங்கள் சுயவிருப்புக் காணிக்கையைப் பற்றி பெருமையாய் பேசி அவற்றைக்குறித்துப் புகழுங்கள், இஸ்ரயேலரே, இவற்றைத் செய்வதற்குத்தானே நீங்கள் விரும்புகிறீர்கள்” என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.

  21. “ஒரு மனிதன் இறைவனிடமிருந்து கொள்ளையிடுவானோ? எனினும் நீங்கள் என்னிடமிருந்து கொள்ளையடிக்கிறீர்கள். “ஆனால் நீங்களோ, ‘உம்மிடமிருந்து எப்படி நாங்கள் கொள்ளையடித்தோம்?’ என கேட்கிறீர்கள். “பத்தில் ஒரு பங்கிலும், காணிக்கைகளிலுமே என்னைக் கொள்ளையடிக்கிறீர்கள்.

  22. என் ஆலயத்தில் உணவு இருக்கும்படி, உங்கள் பத்தில் ஒரு பாகம் முழுவதையும் களஞ்சியத்திற்குக் கொண்டுவாருங்கள். இவ்வாறு என்னைச் சோதித்துப் பாருங்கள்” என சேனைகளின் யெகோவா சொல்கிறார். “நீங்கள் இவ்வாறு செய்யும்போது, நான் வானத்தின் மதகுகளைத் திறந்து, நிறைந்து வழியும்படி இடங்கொள்ளாத அளவு அதிக ஆசீர்வாதங்களை உங்கள்மேல் பொழியமாட்டேனோ என்று பாருங்கள்.

  23. “வேஷக்காரர்களாகிய மோசேயின் சட்ட ஆசிரியர்களே, பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் புதினா, வெந்தயம், சீரகம் ஆகிய வாசனைச் பொருட்களிலிருந்து பத்திலொன்றை காணிக்கையாகக் கொடுக்கிறீர்கள். ஆனால் மோசேயின் சட்டத்தின் மிக முக்கிய காரியங்களான நீதி, இரக்கம், உண்மைத்தனம் ஆகியவற்றை உதாசீனம் செய்துவிட்டீர்கள். உண்மையாய் இவற்றை நீங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். அத்துடன் அவற்றையும் கைவிடாதிருக்க வேண்டும்.

  24. “பரிசேயரே உங்களுக்கு ஐயோ, ஏனெனில் நீங்கள் உங்களுடைய புதினா கீரையிலும், கறிவேப்பிலையிலும், தோட்டத்தின் மரக்கறிவகையிலும் பத்திலொன்றை இறைவனுக்குக் கொடுக்கிறீர்கள். ஆனால் நீதி செய்வதையும், இறைவனிடம் அன்பு கூறுவதையும், அலட்சியம் செய்கிறீர்கள். இதையே, நீங்கள் முதலில் செய்திருக்கவேண்டும். முன்பு செய்ததையும் கைவிடக்கூடாது.

  25. நான் வாரத்தில் இரண்டுமுறை உபவாசிக்கிறேன், எனது வருமானத்திலெல்லாம் பத்திலொன்றை கொடுக்கிறேன்’ என்று, தனக்குத்தானே சொல்லி மன்றாடினான்.