Skip to content

Tact பற்றிய பைபிள் வசனங்கள்

84 வசனங்கள் · 11 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. அப்பொழுது எப்பிராயீம் மனிதர்கள் கிதியோனிடம், “நீ மீதியானியருடன் சண்டைக்குப் போகும்போது ஏன் எங்களை அழைக்கவில்லை? ஏன் எங்களை இப்படி நடத்தினாய்” என்று மிகவும் கடுமையாகக் குறை கூறினார்கள்.

  2. ஆனால் அவன் அவர்களிடம், “நீங்கள் செய்ததோடு ஒப்பிடும்போது நான் செய்தது எம்மாத்திரம்? அபியேசரியரின் முழுமையான அறுவடையின் திராட்சைப் பழங்களைவிட எப்பிராயீமின் பொறுக்கியெடுத்த திராட்சைப் பழங்கள் சிறந்தது அல்லவா?

  3. இறைவன் மீதியானியரின் தலைவர்களான ஓரேப்பையும், சேபையும் உங்கள் கையில் கொடுத்தார். உங்களோடு ஒப்பிடுகையில் நான் செய்யக்கூடியதாக இருந்தது எம்மாத்திரம்?” எனக் கேட்டான். அப்பொழுது அவனுக்கெதிராக இருந்த அவர்களுடைய கோபம் சிறிது சிறிதாகத் தணிந்தது.

  4. அப்பொழுது சில கலகக்காரர், “இவன் நம்மை எப்படிக் காப்பாற்றுவான்” என்று சவுலை அசட்டை செய்து, அவனுக்கு அன்பளிப்புகளைக் கொண்டுவரவில்லை. ஆனால் சவுலோ மவுனமாயிருந்தான்.

  5. அவன் தன் எருதுகளில் இரண்டைப் பிடித்து, அவற்றைத் துண்டுதுண்டுகளாக வெட்டித் தூதுவரின் கைகளில் கொடுத்து, இஸ்ரயேல் முழுவதற்கும் அனுப்பினான். அவன் இஸ்ரயேல் நாடெங்கிலும் செய்தி அனுப்பி, “சவுலையும், சாமுயேலையும் பின்பற்றாத மனிதரின் மாடுகளுக்கும் இவ்வாறே செய்யப்படும்” என்று பிரசித்தப்படுத்தினான். மக்களுக்கு யெகோவாவைப்பற்றிய பயமேற்பட்டதால் அவர்கள் ஒருமனப்பட்டவர்களாகப் புறப்பட்டு வந்தார்கள்.

  6. அதன்பின் மக்கள் சாமுயேலிடம், “சவுல் எங்களை அரசாள்வதா? என்று கேட்டவர்கள் யார்? அவர்களைக் கொண்டுவாருங்கள்; நாங்கள் அவர்களைக் கொல்வோம்” என்றார்கள்.

  7. அதற்குச் சவுலோ, “இன்று யெகோவா இஸ்ரயேல் மக்களை விடுவித்தபடியால், ஒருவரையும் கொலைசெய்யக்கூடாது” என்றான்.

  8. அப்பொழுது சாமுயேல் மக்களிடம், “வாருங்கள் கில்காலுக்குப் போய் அங்கே சவுலின் அரசாட்சியை மறுபடியும் உறுதிப்படுத்துவோம்” என்றான்.

  9. அப்படியே மக்களனைவரும் கில்காலுக்குப் போய் அங்கே யெகோவாவின் முன்னிலையில் சவுலை அரசனாக உறுதிப்படுத்தினார்கள். அங்கே யெகோவாவுக்குச் சமாதான காணிக்கைகளைப் பலியிட்டு, சவுலும் இஸ்ரயேல் மக்களனைவரும் ஒரு பெரிய விழாக் கொண்டாடினார்கள்.

  10. உடனே அபிகாயில் தாமதிக்கவில்லை; அவள் இருநூறு அப்பங்களையும், இரண்டு தோல் குடுவைகளில் திராட்சை இரசத்தையும், தோல் உரித்த ஐந்து செம்மறியாடுகளையும், ஐந்துபடி அளவு வறுத்த தானியத்தையும், நூறு திராட்சை அடைகளையும், இருநூறு அத்திப்பழ அடைகளையும் எடுத்து அவற்றைக் கழுதைகள்மேல் ஏற்றினாள்.

  11. அவள் தன் பணியாட்களிடம், “நீங்கள் எனக்கு முன்னே செல்லுங்கள். நான் உங்கள் பின்னே வருகிறேன்” என்றாள். ஆனாலும் தன் கணவன் நாபாலுக்கு அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

  12. இவ்வாறு அவள் கழுதைமேல் ஏறி மலையின் கணவாய்க்கு வந்தபோது, தாவீதும், அவன் ஆட்களும் அவளை நோக்கி இறங்கிவந்தார்கள். அவள் அவர்களைச் சந்தித்தாள்.

  13. தாவீது தன் மனிதரிடம், “இந்த பாலைவனத்திலே இவனுடைய உடமைகளில் ஒன்றேனும் தொலைந்துபோகாமல் அவற்றை நான் பாதுகாத்தது வீணாயிற்று. அவனோ எனக்கு நன்மைக்குப் பதிலாகத் தீமையே செய்திருக்கிறான்” என்று அப்பொழுதுதான் சொல்லியிருந்தான்.

  14. “அவனுக்குச் சொந்தமான எல்லா ஆண்களிலும் ஒருவனையாவது பொழுது விடியும் முன் உயிரோடு விட்டேனேயானால், இறைவன் தாவீதை எவ்வளவு கடுமையாகவும் தண்டிப்பாராக” என்றும் சொல்லியிருந்தான்.

  15. அபிகாயில் தாவீதைக் கண்டதும் தனது கழுதையை விட்டு விரைவாக இறங்கி தாவீதுக்கு முன்னால் தரையை நோக்கிக் குனிந்து வணங்கினாள்.

  16. அவள் அவனுடைய பாதத்தில் விழுந்து அவனிடம், “ஐயா இந்தக் குற்றம் என்மேல் மட்டுமே சுமரட்டும். உம்முடைய அடியவளை உம்மிடம் பேசவிடும். உமது அடியவள் சொல்ல இருப்பதைக் கேளும்.

  17. என் எஜமானே! அந்தக் கொடுமையான மனிதன் நாபாலைப் பொருட்படுத்த வேண்டாம். அவர் தன் பெயருக்கேற்றபடி மூடராயிருக்கிறார். மூடத்தனமே அவரோடு இருக்கின்றது. உமது அடியாளாகிய நானோ நீர் அனுப்பிய பணியாட்களைச் சந்திக்கவில்லை.

  18. இப்பொழுது, என் ஆண்டவனே, நீர் இரத்தத்தைச் சிந்தாமலும், உம்முடைய கையினால் பழிவாங்காமலும் யெகோவா உம்மைத் தடுத்திருக்கிறார். யெகோவா இருப்பது நிச்சயமெனில், உம் பகைவரும், உமக்குத் தீங்குசெய்ய நோக்கம் கொண்டிருக்கிறவர்களும் நாபாலைப்போல் இருப்பார்களாக.

  19. உமது அடியவள் எனது எஜமானுக்குக் கொண்டுவந்திருக்கும் அன்பளிப்பு உம்மைப் பின்பற்றும் மனிதருக்குக் கொடுக்கப்படட்டும்.

  20. “தயவுசெய்து அடியாளுடைய பிழையை மன்னியும். எனது எஜமான் யெகோவாவின் யுத்தத்தை நடத்துவதனால் யெகோவா நிச்சயமாக எனது எஜமானுக்கு நிலைத்து நிற்கும் சந்ததியைக் கொடுப்பார். உமது வாழ்நாள் முழுவதும் உம்மேல் ஒரு பிழையும் காணப்படாதிருக்கட்டும்.

  21. ஒருவன் உமது உயிரை வாங்குவதற்கு உம்மைத் தொடர்ந்தபோதிலும், என் ஆண்டவனுடைய உயிர் உமது இறைவனாகிய யெகோவாவினால் உயிருள்ளோர் தொகையில் பத்திரப்படுத்தப்படும். ஆனாலும் உம்முடைய பகைவரின் உயிர்களையோ கவணில் வைத்து வீசப்படும் கல்லைப்போல் அவர் வீசி விடுவார்.

  22. யெகோவா உம்மைக் குறித்து வாக்குப்பண்ணிய எல்லா நன்மைகளையும் செய்துமுடித்து, உம்மை இஸ்ரயேலரின் தலைவனாக நியமிப்பார்.

  23. அப்பொழுது தேவையில்லாத இரத்தம் சிந்திய குற்றமோ, உமக்காகப் பழிவாங்கிய குற்றமோ பாரமாக ஆண்டவனுடைய மனசாட்சியை அழுத்தாதிருக்கட்டும். இப்படியாக யெகோவா என் ஆண்டவனுக்கு வெற்றியைக் கொடுக்கும்போது உம்முடைய அடியாளையும் நினைத்துக்கொள்ளும்” என்றாள்.

  24. அப்பொழுது தாவீது அபிகாயிலிடம், “இன்று என்னைச் சந்திக்கும்படி உன்னை அனுப்பிய இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக.

  25. உனது நல்ல நிதானிப்புக்காகவும், நான் இரத்தம் சிந்தாமலும், என் சொந்த கையால் பழிவாங்காமலும் இன்று என்னை நீ தடுத்ததற்கு நீ ஆசீர்வதிக்கப்படுவாயாக.