Skip to content

Sieges பற்றிய பைபிள் வசனங்கள்: Ai

22 வசனங்கள் · 63 அம்சங்கள்

Ai பற்றிய வசனங்கள்

  1. அப்பொழுது யோசுவா சில மனிதரை அப்பிரதேசத்தை உளவுபாருங்கள் என்று எரிகோவிலிருந்து ஆயிபட்டணத்திற்கு அனுப்பினான். ஆயி, பட்டணம் பெத்தேலுக்குக் கிழக்கே பெத் ஆவெனுக்கு அருகேயுள்ளது. அப்படியே அவர்கள் போய் ஆயிபட்டணத்தை உளவுபார்த்தார்கள்.

  2. அவர்கள் யோசுவாவிடம் திரும்பிவந்து, “ஆயிபட்டணத்தில் ஒருசில மனிதர் மட்டுமே இருக்கிறார்கள். அதனால் எல்லா மக்களும் அதற்கெதிராகப் போகவேண்டிய அவசியமில்லை. எல்லா மக்களையும் கஷ்டப்படுத்தாமல் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் மனிதரை அதைக் கைப்பற்றுவதற்காக அனுப்பும்” என்றார்கள்.

  3. அப்படியே ஏறக்குறைய மூவாயிரம்பேர் போனார்கள்; ஆனால் ஆயிபட்டணத்தின் மனிதர்களால் இவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்.

  4. அதன்பின் யெகோவா யோசுவாவிடம், “நீ பயப்படாதே; மனந்தளர்ந்து விடாதே. முழு இராணுவத்துடனும் சென்று ஆயிபட்டணத்தைத் தாக்கு. ஆயி அரசனையும், அவன் மக்களையும், அவன் பட்டணத்தையும், அவன் நாட்டையும் நான் உன் கைகளில் கொடுத்துவிட்டேன்.

  5. எரிகோ பட்டணத்திற்கும் அதன் அரசனுக்கும் செய்ததுபோலவே ஆயிபட்டணத்திற்கும் அதன் அரசனுக்கும் செய்யுங்கள். ஆனால் சூறையாடி கைப்பற்றும் பொருட்களையும், ஆடுமாடுகளையும் நீங்கள் உங்களுக்காக எடுத்துக்கொள்ளலாம். பட்டணத்தின் பின்புறத்தில் பதுங்கியிருந்து தாக்குவதற்கென எல்லா ஆயத்தமும் செய்” என்றார்.

  6. அவ்வாறே யோசுவா முழு இராணுவத்துடனும் ஆயிபட்டணத்தைத் தாக்குவதற்குப் புறப்பட்டான். யோசுவா தங்களுடைய வீரருள் மிகச்சிறந்த முப்பதாயிரம்பேரைத் தெரிந்தெடுத்து அன்று இரவில் அனுப்பினான்.

  7. அவன் அவர்களிடம், “நான் சொல்வதைக் கவனமாய் கேளுங்கள். நீங்கள் நகருக்குப் பின்னே பதுங்கியிருந்து பட்டணத்தைத் தாக்குவதற்கு ஆயத்தமாய் இருங்கள். அங்கிருந்து அதிக தூரம் போகவேண்டாம். நீங்கள் எல்லோரும் விழிப்புடன் இருங்கள்.

  8. நானும் என்னுடன் இருக்கும் அனைவரும் பட்டணத்தை நோக்கி முன்னேறுவோம். எம்மை எதிர்த்து ஆயி மனிதர் முன்போலவே வெளியே வருகிறபோது, நாம் அவர்களிடமிருந்து தப்பி ஓடுவோம்.

  9. இஸ்ரயேலர் முன்போலவே நமக்குப் பயந்து ஓடுகிறார்களென நினைத்து நம்மைப் பின்தொடருவார்கள். நாங்களோ அவர்களை இவ்விதமாய் ஏமாற்றி பட்டணத்திற்கு வெளியே கொண்டுவருவோம். எனவே நாம் அவர்களிடமிருந்து தப்பி ஓடுகிறபோது,

  10. நீங்கள் உங்கள் மறைவிடத்திலிருந்து எழுந்து, பட்டணத்தை தாக்கிக் கைப்பற்றுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா அதை உங்கள் கைகளில் கொடுப்பார்.

  11. நீங்கள் பட்டணத்தை கைப்பற்றியவுடன், அதற்கு நெருப்பு வையுங்கள். யெகோவாவின் கட்டளைப்படியே செய்யுங்கள். கவனமாய்ச் செய்யுங்கள். இதுவே எனது உத்தரவு” என்றான்.

  12. யோசுவா அவர்களை அனுப்பினான். அவர்கள் சென்று ஆயிபட்டணத்திற்கு மேற்கே, ஆயிக்கும் பெத்தேலுக்கும் இடையில் பதுங்கியிருந்தார்கள். யோசுவாவோ முகாமில் மக்களுடன் அன்று இரவைக் கழித்தான்.

  13. மறுநாள் அதிகாலையில் யோசுவா தனது மனிதர்களை ஒன்றுகூட்டினான். அவனும் இஸ்ரயேலரின் தலைவர்களும் அவர்களுக்கு முன்னே அணிவகுத்து, ஆயிபட்டணத்தை நோக்கிச்சென்றனர்.

  14. அவனோடிருந்த இராணுவவீரர் அனைவரும் அணிவகுத்துச்சென்று, பட்டணத்தை அணுகி, அதற்கு எதிரே வந்து சேர்ந்தார்கள். ஆயிக்கு வடக்கே அவர்கள் முகாமிட்டார்கள். ஆயிக்கும் அவர்களின் முகாமுக்குமிடையே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது.

  15. யோசுவா ஐயாயிரம் இராணுவவீரரை ஆயிபட்டணத்திற்கு மேற்கே பெத்தேலுக்கும் ஆயிக்கும் இடையில், மறைந்திருந்து தாக்குவதற்கென அனுப்பி வைத்திருந்தான்.

  16. எல்லா இராணுவவீரரையும் தங்கள் நிலைகளில் ஆயத்தமாய் இருக்கச்செய்தான். ஆகவே முகாமில் இருந்தவர்கள் நகருக்கு வடக்கேயும், மறைந்திருந்து தாக்கும் படையினர் நகருக்கு மேற்கேயும் இருந்தனர். அன்றிரவு யோசுவா பள்ளத்தாக்குக்குப் போனான்.

  17. ஆயி அரசன், இதைக் கண்டவுடன் நகரிலுள்ள எல்லா ஆண்களுடனும் அதிகாலையில் இஸ்ரயேலரைப் போரில் எதிர்கொள்ள விரைந்து வந்தான். அவன் இஸ்ரயேலரை அரபாவுக்கு எதிராக உள்ள இடத்தில் சந்திக்கத் திட்டமிட்டிருந்தான். ஆனால் தனக்கு எதிராக இஸ்ரயேலர்கள் பட்டணத்திற்குப் பின்னால் தாக்குவதற்கு மறைந்திருப்பதை அவன் அறியாதிருந்தான்.

  18. யோசுவாவும் எல்லா இஸ்ரயேலரும் அவர்கள் தங்களைத் துரத்த இடங்கொடுத்துப் பாலைவனத்தை நோக்கி ஓடினார்கள்.

  19. ஆயிபட்டணத்திலுள்ள எல்லா ஆண்களும் அவர்களைத் துரத்துவதற்கு அழைக்கப்படவே அவர்கள் எல்லோரும் யோசுவாவை பின்தொடர்ந்தார்கள். இவ்விதமாய் அவர்கள் பட்டணத்திலிருந்து வெளியேற ஏமாற்றப்பட்டார்கள்.

  20. ஆயிபட்டணத்திலோ அல்லது பெத்தேலிலோ இஸ்ரயேலரைத் துரத்தாமலிருந்த மனிதன் ஒருவனும் இல்லை. அவர்கள் ஆயிபட்டணத்தைக் காவலின்றி விட்டுவிட்டு, எல்லோரும் இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்தார்கள்.

  21. அப்பொழுது யெகோவா யோசுவாவிடம், “நீ கையில் வைத்திருக்கும் ஈட்டியை ஆயிபட்டணத்தை நோக்கி நீட்டிப்பிடி. ஏனெனில் உன்னுடைய கையில் அப்பட்டணத்தை ஒப்படைப்பேன்” என்றார். அப்படியே யோசுவா ஈட்டியை ஆயி நகரை நோக்கி நீட்டிப்பிடித்தான்.

  22. அவன் இவ்வாறு செய்த உடனே பட்டணத்தின் பின்னே மறைந்திருந்த மனிதர்கள் அவ்விடத்தை விட்டெழுந்து பட்டணத்தை நோக்கி விரைந்து முன்னேறினார்கள். அவர்கள் பட்டணத்தினுள் புகுந்து அதைக் கைப்பற்றி உடனே அதைத் தீயிட்டார்கள்.