Skip to content

Mordecai பற்றிய பைபிள் வசனங்கள்

23 வசனங்கள் · 4 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

  1. அக்காலத்தில் சூசான் கோட்டைப் பட்டணத்தில் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த, மொர்தெகாய் என்னும் பெயருடைய ஒரு யூதன் இருந்தான். இவன் யாவீரின் மகன், யாவீர் சீமேயின் மகன், சீமேயி கீசின் மகன்.

  2. இந்த மொர்தெகாய், யூதா அரசன் எகொனியாவுடன், பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரினால் எருசலேமிலிருந்து சிறைபிடிக்கப்பட்டவர்களோடுகூட நாடு கடத்தப்பட்டிருந்தவன்.

  3. மொர்தெகாய்க்கு அத்சாள் என்னும் பெயருடைய ஒன்றுவிட்ட சகோதரி ஒருத்தி இருந்தாள். அவளுக்கு தாய் தகப்பன் இல்லாததினால் அவளை இவன் வளர்த்தான். அவள் எஸ்தர் என்றும் அழைக்கப்பட்டாள். இந்தப் பெண் வடிவத்திலும், தோற்றத்திலும் மிகவும் அழகுள்ளவளாயிருந்தாள். அவளுடைய தகப்பனும் தாயும் இறந்தபோது, மொர்தெகாய் அவளைத் தன் சொந்த மகளாக எடுத்து வளர்த்தான்.

  4. மொர்தெகாய், அரசனுடைய வாசலில் இருக்கும் நாட்களில், வாசலைக் காவல்காக்கும் அரசனின் இரு அதிகாரிகளான பிக்தானும், தேரேசும் அரசன் அகாஸ்வேருவுடன் கோபமடைந்து, அவனைக் கொலைசெய்யச் சதி செய்தார்கள்.

  5. ஆனால் மொர்தெகாய் இந்த சதியைப்பற்றி அறிந்து அரசி எஸ்தருக்குச் சொன்னான். அவள் அதை மொர்தெகாய் சொன்னதாகக் குறிப்பிட்டு, அரசனுக்கு அறிவித்தாள்.

  6. அந்த அறிக்கை விசாரணை செய்யப்பட்டு, உண்மையெனக் கண்டுபிடிக்கப்பட்ட போது, அந்த இரண்டு அதிகாரிகளும் தூக்கிலிடப்பட்டார்கள். இவை எல்லாம் அரசனின் முன்னிலையில் வரலாற்றுப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டன.

  7. அன்று இரவு அரசனால் நித்திரை செய்ய முடியவில்லை, எனவே அவன் தனது அரசாட்சியின் நிகழ்வுகளின் பதிவேடாகிய வரலாற்றுப் புத்தகத்தைக் கொண்டுவந்து தனக்கு வாசித்துக் காட்டும்படி கட்டளையிட்டான்.

  8. அதில், அகாஸ்வேரு அரசனைக் கொலைசெய்வதற்கு சதித்திட்டம் தீட்டியிருந்த வாசல் காவலர்களான, அரசனின் அதிகாரிகள் பிக்தானா, தேரேசு ஆகிய இருவரையும், மொர்தெகாய் காட்டிக் கொடுத்திருந்ததாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

  9. அப்பொழுது அரசன், “இதற்காக என்ன கனமும், மதிப்பும் மொர்தெகாய்க்குக் கொடுக்கப்பட்டது?” எனக் கேட்டான். அப்பொழுது அவனுடைய பணிவிடைக்காரர், “அவனுக்கு ஒன்றும் செய்யப்படவில்லை” என்று சொன்னார்கள்.

  10. அரசன், “முற்றத்தில் நிற்பது யார்?” என்று கேட்டான். அதேவேளையில் ஆமான் தான் நிறுத்தியிருந்த தூக்கு மரத்தில் மொர்தெகாயைத் தூக்கிலிடுவது பற்றிப் பேசுவதற்கு அரண்மனையின் வெளிமுற்றத்திற்குள் வந்திருந்தான்.

  11. அரசனின் ஏவலாட்கள், “முற்றத்தில் ஆமான் நின்று கொண்டிருக்கிறான்” என்றார்கள். அதற்கு அரசன், “அவனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள்” என்று கட்டளையிட்டான்.

  12. ஆமான் வந்தபோது, அரசன் அவனிடம், “அரசன் கனம்பண்ண விரும்புகிற ஒருவனுக்கு என்ன செய்யப்படவேண்டும்?” எனக் கேட்டான். அப்பொழுது ஆமான், “என்னைத்தவிர வேறு யாரை அரசன் கனம்பண்ண விரும்புவான்” என தனக்குள்ளே நினைத்தான்.

  13. அதனால் ஆமான் அரசனிடம், “அரசன் கனம்பண்ண விரும்பும் மனிதனுக்கு செய்யப்பட வேண்டியதாவது:

  14. உமது பணிவிடைக்காரர் அரசர் அணியும் அரச உடையையும், தலையில் வைக்கப்பட்டிருக்கும் அரச கிரீடமும், அரசர் சவாரி செய்யும் குதிரையையும் கொண்டுவரட்டும்.

  15. பின்பு அந்த உடையும், குதிரையும் மிக உயர்ந்த பிரபுக்களில் ஒருவருடைய கையில் கொடுக்கப்படட்டும். அரசர் கனம்பண்ணுகிற மனிதனுக்கு அவர்கள் அந்த உடையை அணிவித்து, அவனைக் குதிரையின்மேல் அமர்த்தி, பட்டணத்துத் தெருக்கள் எங்கும் வழிநடத்தட்டும். அப்பொழுது, ‘அரசர் கனம்பண்ணும் மனிதனுக்கு செய்யப்படுவது இதுவே’ என்று அவனுக்கு முன்பாகப் பிரசித்தப்படுத்தட்டும்” என்றான்.

  16. அப்பொழுது அரசன், “உடனடியாகப்போய் உடையையும், குதிரையையும் கொண்டுவந்து, நீ கூறியபடியே அரச வாசலில் இருக்கிற யூதனான மொர்தெகாய்க்குச் செய். நீ சிபாரிசு செய்த எதையும் செய்யாமல் விடவேண்டாம்” என்று ஆமானுக்குக் கட்டளையிட்டான்.

  17. எனவே ஆமான் உடையையும், குதிரையையும் பெற்றுக்கொண்டு, மொர்தெகாய்க்கு உடையை உடுத்தி அவனைக் குதிரையில் அமர்த்தி, பட்டணத்தின் தெருக்களெங்கும் நடத்திக் கொண்டுபோனான். அவன், “அரசன் கனம்பண்ண விரும்புகிற மனிதனுக்கு செய்யப்படுவது இதுவே” என்று அவனுக்கு முன்பாக அறிவித்தான்.

  18. அந்த நாளிலேயே அகாஸ்வேரு அரசன் யூதர்களின் எதிரியான ஆமானின் சொத்தை எஸ்தர் அரசிக்குக் கொடுத்தான். மொர்தெகாயும் அரசனின் முன்னிலையில் வந்தான். ஏனெனில் அவன் தனது உறவினன் என்று எஸ்தர் அரசனுக்குச் சொல்லியிருந்தாள்.

  19. அரசன் ஆமானிடமிருந்து தான் எடுத்த, தனது முத்திரை மோதிரத்தை மொர்தெகாய்க்குக் கொடுத்தான். ஆமானின் சொத்துக்குப் பொறுப்பாக எஸ்தர் மொர்தெகாயை நியமித்தாள்.

  20. மொர்தெகாய் நீலமும், வெள்ளையுமான அரச உடைகளை உடுத்திக்கொண்டு, பெரிய தங்க மகுடத்தையும், ஊதாநிற மென்பட்டு உடையையும் அணிந்து, அரசனின் முன்னிலையிலிருந்து புறப்பட்டான். சூசான் நகரம் மகிழ்ச்சியின் விழாக்கோலம் கொண்டிருந்தது.

  21. அகாஸ்வேரு அரசன் அவனுடைய பேரரசு எங்கும், அதன் தூரமான எல்லைகள் வரைக்கும் வரி விதித்தான்.

  22. மொர்தெகாயின் அதிகாரமும் வல்லமையுள்ள எல்லாச் செயல்களும், அரசன் அவனை மேன்மைப்படுத்தி அவனுக்குக் கொடுத்த அவனுடைய மேன்மையின் முழு விபரமும் பெர்சிய, மேதிய அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டிருக்கின்றன.

  23. யூதனான மொர்தெகாய் மேன்மையில் அரசனுக்கு அடுத்ததாய் இருந்தான். அவன் தனது மக்களின் நலனுக்காக உழைத்ததினாலும், எல்லா யூதர்களுடைய முன்னேற்றத்துக்காகப் பேசியதினாலும் அவன் யூதர்கள் மத்தியிலும் முதன்மை பெற்றவனாயிருந்தான். அவன் தன் சகோதரரான மற்ற யூதர்களினால் உயர்வாய் மதிக்கப்பட்டவனுமாயிருந்தான்.